தொடர்கள்
கதை
முத்திரை கதை !!! சந்தன வாசம் - கி. ரமணி)

20250626085627634.jpeg


"சின்னா! என் பேத்தி சாந்தி இங்கிட்டு நாளை லீவுக்கு வருதம்மா. ஒரு வாரம் இருக்கும்.நீ ஒரு வாரம் லீவு போடாம வேலைக்கு வரணும். நிறைய வேலை கிடக்கு. "என்றாள் வக்கீல் சம்சாரம்.

" சரிம்மா"

பன்னிரண்டு வயதில் இருபது வயதுக்கான பொறுப்பு உண்டு சின்னாவுக்கு.

1965 இல், அதாவது போன வருஷம், அஞ்சாம் வகுப்பு முதல் மாணவியா நல்லூர் எலிமெண்டரி ஸ்கூல்ல முடிச்சுட்டு, கல்லூர் ஹை ஸ்கூல்ல ஆறாவது சேரும் சமயம் பார்த்து அவள் அப்பன் கள்ளச்சாராயம் குடித்துச் செத்துவிட்டான்.

ஆத்தா மாலை, சின்னாவுடைய படிப்பை நிறுத்தி வக்கீல் சாமி வீட்டுக்கு வேலைக்கு அனுப்பி விட்டாள்.

காலையில ஆறு மணிக்கு வக்கீல் வீட்டு வாசல் தெளித்து, மாட்டு தொழுவத்தில் சாணி எடுத்து, அலம்பி விட்டு,மாட்டுக்கு தீவனம் வெச்சு, பால் கறக்கும் கந்தனுக்கு உதவி செஞ்சு, வீடு பெருக்கி, வாரம் ஒரு நாள் மொழுகி,தினம் காய்கறி வெட்டி, கடைக்கு போய் மளிகை வாங்கி, துணி உலர்த்தி,மடித்து, என்று வேலை இருக்கும்

முகம் சுளிக்காமல் செய்வாள். இரவு எட்டு மணிக்குத் தான் தன் வீடு திரும்புவாள்.

காலை முதல் இரவு வரை வக்கீல் வீட்டுல தான் சாப்பாடு. தவிர வேலைக்கு ஊதியம். இது அவளுக்கும் அவ அம்மாவுக்கும் பெரிய உதவி என்று எண்ணினார்கள்.

தினமும் வக்கீல் வீட்ல தினத்தந்தி தலைப்பு நியூஸ் படிப்பாள் சின்னா.
முதலமைச்சருக்கும் பிரதமருக்கும் வித்தியாசம் அவளுக்குத் தெரியும்.
ஜனாதிபதி பெயர் தெரியும். குஜராத் தலைநகர் கூட கேட்டால் சொல்லுவாள்.

அடுத்த நாள் காலை ரயில்வே ஸ்டேஷன்ல இருந்து வில் வண்டியில் வந்து இறங்கினாள் வக்கீல் பேத்தி சாந்தி.

"நீ மாலை மவ சின்னா தானே?" என்றாள் சாந்தி, வீட்டு வாசலில் காத்திருந்த சின்னாவிடம்.

" என்னத் தெரியுதா? " என மகிழ்ந்தாள் சின்னா. நீங்க ரொம்ப அழகு அக்கா. டாக்டருக்கு படிக்கிறதா உங்க பாட்டி சொன்னாக. ஊசி எல்லாம் போடுவீயளா? "

"ம்ம். போட்டாப் போச்சு. கை நீட்டு."

"ஐயோ! சும்மா சொன்னேன் அக்கா. "

சின்னா உடனேயே சாந்தியுடன் ரொம்ப சிநேகம் ஆகிவிட்டாள்.

"உங்க கிட்ட ஒரு பிரமாதமான வாசம் வீசுது அக்கா."என்றாள்சின்னா."

"என்ன வாசம்?"

" சந்தன வாசம்! எங்க அம்மா ஒரு சின்ன சந்தனக் கட்டை வெச்சிருக்கு.பண்டிகை போதுல கொஞ்சம் தேச்சு என் மேல் பூசும். வாசம் தூக்கும். அப்படியே இருக்கு உங்க வாசம். ஆனால் நீங்க சந்தனம் பூசலையே?"

" ஆமாம்! ஆனால் அது என் வாசம் இல்லை. "

"சும்மா சொல்லுதீக."

" சரி, அப்படியே வச்சுக்கோ. உனக்கு சந்தன வாசம் பிடிக்குமா?"

ரொம்ப ரொம்ப! உங்களப் பிடிச்ச அளவுக்கு."

சின்னா சாந்தியிடம் ஒட்டிக்கொண்டு விட்டாள். சாந்தி, வீட்டில், இடைக்காலத் தடை ஒன்றைத் தன் வக்கீல் தாத்தா ஆதரவுடன் விதித்து சின்னாவின் வழக்கமான வேலைகளை நிறுத்தி, அவளைத் தன் தனிப்பட்ட உதவியாளர் போல் ஆக்கிக் கொண்டாள், பாட்டியின் கடுப்பையும் ஆட்சேபனைகளையும் முற்றும் நிராகரித்து.

சாந்தி மருதாணி அரைத்துப் பூசிக்கொள்ள ஆசைப்பட்டாள். அனுமார் சஞ்சீவி மலையைக் கொண்டு வந்தது போல் எங்கேயோ ஒரு கோவில் பின்புறத்தில் மருதாணிச் செடிகள் இருப்பதைக் கண்டுபிடித்து, ஒரு பெரிய கூடை முழுக்க மருதாணிச் செடிகளையே வெட்டி அள்ளிக் கொண்டு வந்து விட்டாள் சின்னா. சாந்திக்கு ரொம்ப சந்தோஷம்..

சாந்தி படிக்கும் நேரம் போக மீதி நேரத்தில் இருவரும் பல்லாங்குழி,தாயக் கட்டம் ஆடினார்கள். ரேடியோ சிலோனில் சினிமாப் பாட்டு கேட்டார்கள். சின்னாவுக்கு சில ஆங்கில சொற்கள் கற்றுக் கொடுத்தாள் சாந்தி. பாட்டியின் வைத்தியத்துக்கு வயல் வரப்புகளில் வளரும் கண்டங்கத்தரிக்காயை கைகளில் முள் குத்தாமல் பறித்துக் கொடுத்தார்கள்,.

"சின்னா! என்னோட மெட்ராசுக்கு வந்துடுறயா? நான் அடுத்த வருஷம் கிளினிக் ஆரம்பிச்சப்புறம் உன்னையும் கூட்டிட்டு போய் படிக்க வைக்கிறேன். எனக்கும் உதவியா இருக்கும்."

"ஆத்தா விடாது. என் மாமன் மவன் சேர்மாதேவில போலீஸ்காரரா இருக்காக.
அவுகளுக்கு என்ன ரெண்டு வருஷத்துல கட்டிக் கொடுக்கப் போறாக.
அதுக்கு துட்டு சேக்கணும்லா!
அது என்ன ஆகும்னு ஆத்தா கவலப்படும்."

"போலீஸ்காரன விடு. நான் உன்னை மெட்ராஸ்ல ஒரு நல்ல பெரிய்ய இன்ஸ்பெக்டர்க்கே கட்டி வெக்கேன் போதுமா?"

இப்படி வேடிக்கையா நிஜமா என்று தெரியாமல் பேச்சு போய்க் கொண்டு இருந்தது.
நாலு நாள் சென்றது.

"சின்னா! உனக்கு நீச்சல் தெரியுமா?"

"நல்லா தெரியும் அக்கா. ஏன்? "

"எனக்கு நீச்சல் தெரியாது."

"நீச்சல் கத்துக்கிடணுமா அக்கா?"

"வேணுங்கறபோது சொல்றேன். "

" அக்கா! உங்க உடம்புல அந்த சந்தன வாடை இன்னைக்கு இல்லையே ஏன்?"

சிரித்தாள் சாந்தி.

"அதுக்குக் காரணம் உண்டு சின்னா. மைசூர் சந்தன சோப்புனு ஒரு சோப்பு இருக்கு.தினமும் அது போட்டு குளிக்கிறேன் அதுதான் அந்த வாசனை. இன்னிக்கு அந்த சோப்பு போடல."

"அக்கா நான் அந்த மாதிரி சோப்பு எல்லாம் பாத்ததே இல்லை."

"நாளைக்கு ஆத்தங்கரைக்கு குளிக்கப் போவோம்.அப்ப காட்டுறேன்."

"இனிமேல் தினம் அந்த சோப்பு போடுங்க. மறக்காதீக."

மறுநாள் காலையில் சின்னாவுடன் தாமிரபரணி ஆத்தங்கரை சென்றாள் சாந்தி. கோவில் பின்புறத்து படித்துறை.

ஆற்றில் புது வெள்ளம். படித்துறையில் ஆறு படிகள் தான் நீருக்கு வெளியே தெரிந்தன. வழக்கமாக எட்டு படி தெரியும்.

"அக்கா, அந்த சந்தன சோப்பு கொண்டு வந்தீகளா?"

"இதோ" என்று சோப்புப் பெட்டியைச் சின்னாவிடம் கொடுத்தாள் சாந்தி. திறந்து பார்த்து முகர்ந்தாள் சின்னா.

"ஆஹா! என்ன வாசம் அக்கா! நான் சந்தன காட்டுக்குள்ற மாட்டிக்கிட்ட மாதிரி வாசம் அடிக்கு. உங்க மேல் வீசுற அதே வாசம்தான் அக்கா."

ஐந்து நிமிஷம் சின்னாவை சோப்புடன் விட்ட பின் சாந்தி கேட்டாள்.

"குளிக்க வாரியா?எனக்கு நீச்ச கத்துக் கொடுக்கிறியா? "

சோப்பு பெட்டியை மேலும் ஒரு தரம் முகர்ந்து ம்ம்ம் என்று மூச்சு இழுத்து தம் பிடித்தாள் சின்னா.பின் நிதானமாக மூச்சை வெளியே விட்டாள்
சாந்தி கிட்ட சோப்பு பெட்டியை திருப்பிக் கொடுத்தாள்.


"ஐயோ என்ன வாசம் அடிக்கி அக்கா இந்த சோப்பு.
எனக்கு சளி இருக்கு.நான் இன்னிக்கி குளிக்கல அக்கா. அடுத்த முறை நீங்க இங்கிட்டு வாரப்போ நீச்சல் கத்துத் தாரேன்.மெதுவா நீங்க போங்க அக்கா."

ஆறாவது படிக்குச் சென்ற சாந்தி அந்த படியில் அமர்ந்தபடி மெதுவாக கீழே இறங்கினாள். தண்ணீருக்கு அடியில் மூழ்கி இருக்கும் ஏழாவது படியில் அமர்ந்தாள்.

"ஜாக்கிரதை அக்கா. படியெல்லாம் இங்கன வளுக்கும். விளுந்தா ரொம்ப
ஆளம். நீச்ச தெரியாம கீள இறங்கினா ரொம்ப ஆபத்து."

" பரவாயில்லை. நான் பார்த்துக்கிறேன். "

சாந்தி இடுப்புக்கு மேல் கைகளால் நீர் அள்ளி மேலே இறைத்துக் கொண்டாள். மிகவும் அருகில் நொப்பும் நுரையுமாக பொங்கி ஆவேசத்துடன் ஓடும் தாமிரபரணியின் புதுத் தண்ணீர் அவளை பயமுறுத்தியது.

சின்னா கத்தினாள்.
" அக்கா சோப்பு தேச்சுக்க மறக்காதீக ஜாக்கிரதை."
ஆறாம் படியில் இருந்து சோப்பு எடுத்து தேய்த்துக்கொண்டு மீண்டும் படியில் வைத்தாள் சாந்தி.

அவசரகதியில் பயத்துடன் குளித்து, எழுந்து, துணி மாற்றிய பின் ஈரத்துணிகளை தோளில் இட்டுக்கொண்டு கிளம்பினாள்.

"வாரியா சின்னா?"

"அக்கா நான் எங்க வீட்டுக்கு போயி என் ஆத்தாவை பார்த்துவிட்டு உங்க வீட்டுக்கு வாரேன். நீங்க போங்க அக்கா. "என்றாள் சின்னா.

சாந்தி நகர்ந்து சிறிது தூரம் போன பிறகு சின்னா அதைப் பார்த்தாள்.
ஆறாவது படியில் இருந்தது,சாந்தி எடுக்க மறந்த அவளுடைய மைசூர் சந்தன சோப்புப் பெட்டி.

சின்னா மெதுவாக இறங்கி ஆறாவது படிக்கு சென்று சோப்புப் பெட்டியை எடுக்கும் போது படியில் அவள் கால் வழுக்கியது.



வீட்டுக்கு சென்று ரெண்டு மணி நேரம் கழித்து இன்னும் ஏன் சின்னாவைக் காணவில்லை என்று எண்ணிக் கொண்டாள் சாந்தி.

தெருவில் பேச்சுக் குரல்.பாட்டி வந்து சாந்தியிடம் சொன்னாள்.

" விஷயம் தெரியுமாடி. அந்தக் குட்டி சின்னா, ஆத்துல விழுந்திடுச்சாம். நல்ல காலம் நம்ம சன்னாசிக் கோனார் தண்ணியில குதிச்சு காப்பாத்திட்டாரு. இதோ கோனாரே வராரு பாரு!"

சன்னியாசி கோனார் வந்தார்.

சாந்தி நீ குளிச்சிட்டு வீட்டுக்கு கிளம்பறப்போ சின்னா படித்துறைப் படிக்கட்டுல இறங்கி கீழ போவதை பார்த்தேன். ஒரு சோப்பு பொட்டிய எடுக்கப் பாக்குது. அப்படியே ஆத்துல வளுக்கி விளுந்து முளுகுது.நான் பாத்துட்டேன்.பிள்ளைக்கு நீச்சல் தெரியாதுல்லா. உடனே ஆத்துல குதிச்சு பிள்ளையை எடுத்தாச்சு. அவ அம்மா மாலையும் வந்துட்டு. இப்போ ஒன்னும் இல்ல. சரியாயிட்டு. வீட்ல விட்டுட்டோம். "

"ஓ!அப்பாடா! ரொம்ப நன்றி!. ஆனா சின்னா தனக்கு நீச்சல் தெரியும்னு என்னிடம் சொன்னாளே. "

"இல்லம்மா.அதுக்கு நீச்சல் தெரியாது. தண்ணீயக் கண்டாலே அதுக்கு ஒரே பயம்."

சன்னியாசிக்கு கைகூப்பி மீண்டும் நன்றி சொல்லிவிட்டு மாலையின் வீட்டுக்கு விரைந்தாள் சாந்தி. வாசலில் மாலை வந்து அவளைக் கட்டிக் கொண்டாள்.

"புள்ள பிழைச்சுதம்மா சன்னாசி கோனார் புண்ணியத்துல."
உள்ளே சென்று பார்த்த போது சாதாரணமாக அமர்ந்து இருந்தாள் சின்னா.
அவளைக் கட்டி அணைத்த சாந்தி கேட்டாள்.

"ஏன் உனக்கு நீச்சல் தெரியும்னு என்கிட்ட பொய் சொன்ன?"

"ஆத்தங்கரை பக்கமே வளந்து நீச்ச தெரியாதுன்னு சொல்ல அவமானமாய் இருந்துச்சு அக்கா."

செல்லமாக முறைத்தாள் சாந்தி.

"சரி. அப்போ அந்த சோப்பை ஏன் எடுக்கப் போன? அது போனாப் போகுது.உனக்கு நல்ல புது சந்தன சோப்பு நாளைக்கு வாங்கித் தாரேன். "

சின்னா சொன்னாள்:
"சோப்பு எனக்காக எடுக்கலைக்கா. உங்களுக்காகத்தான் எடுத்தேன். அந்த சோப்பு இல்லைன்னா உங்ககிட்ட இருந்து சந்தன வாசம் வராது இல்லையா,..அது உங்களுக்கு நல்லா இருக்காது அக்கா. "

சாந்தி சின்னாவைக் கட்டி அணைத்து முத்தம் கொடுத்தாள்.

அடுத்த வருஷம் சின்னாவின் அம்மா மாலையை எப்படியாவது சம்மதிக்க வெச்சு,சின்னாவைத் தன்னோடு சென்னை கூட்டிக்கொண்டு போய்விட வேண்டும் என்று மனதுக்குள் உறுதிமொழி எடுத்துக் கொண்டாள் சாந்தி.