தொடர்கள்
பொது
50 சதவிகிதம் கூடுதல் வரி - அமெரிக்க ஏடாகூடம்

20250729232054710.jpeg

முதலில் 50 சதவிகித வரி என்பது கூடுதல் வரி என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

ஏற்கனவே உள்ள சுங்க வரி 17% என்றால் இந்த 50 கூடுதல் வரி. இதை எந்த ஊடகமும் புரிந்து கொள்ள வில்லை. ஏதோ 50 சதவிகிதம் தான் வரி என்று எழுதிக் கொண்டிருக்கின்றன.

இனி,

உக்ரைன் போருக்குப் பிறகு ரஷ்யா தள்ளுபடி விலையில் (2022ஆம் ஆண்டிலிருந்து) கச்சா எண்ணெய் விற்றதை அடுத்து இந்தியா அதை மிகப்பெரிய அளவில் வாங்க தொடங்கியது.

அரசு நிறுவனங்கள் (IOC, BPCL, HPCL) 2023–24 நிதியாண்டில் சேர்த்து ₹81,000 கோடி நிகர லாபம் ஈட்டின.

எண்ணெய் நிறுவனங்கள் வரலாற்றிலேயே மிகப்பெரிய லாபம் அடைந்த காலம் இது.

ரிலையன்ஸ் நிறுவனம் மட்டும் சுமார் ₹5 லட்சம் கோடி அளவிலான கூடுதல் லாபத்தை (2022–24க்குள் )பெற்றது.

ரஷ்யாவின் கச்சா எண்ணெய்யை வாங்குவதால் கடுப்பான ட்ரம்ப் இந்திய பொருட்களுக்கு 2025 ஆகஸ்ட் 27-ஆம் தேதி முதல் அமலாகும்படி 50% வரி விதித்தார்.

இந்த வரி, இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களில் சுமார் 66%ஐ பாதிக்கின்றது.

ஒவ்வொரு ஆண்டும் இந்தியா 7.54 லட்சம் கோடிரூபாய் மதிப்புள்ள ஏற்றுமதிகள் செய்கிறது.

அதில் இப்போது 4.19 லட்சம்கோடி ரூபாய் ஏற்றுமதிகள் பாதிக்கப்பட போகின்றன.
இந்த வரியால் பின்னலாடை ஜவுளி நிறுவனங்கள், நவரத்தின கற்கள் மற்றும் நகைகள் , காலணி போன்ற தோல்பொருட்கள், கம்பளங்கள், பருத்தி மற்றும் பருத்தியிலான உடைகள், இரசாயனங்கள், இயந்திரங்கள் உதிரி பாகங்கள், கடல் உணவுகள், குறிப்பாக இறால், சோலார் பேனல்கள், உலோகம், மரச்சாமான்கள் என சகட்டுமேனிக்கு இந்திய ஏற்றுமதி பொருட்கள் அடிவாங்குகின்றன.

உதாரணமாக இன்றைய நிலையில் திருப்பூர் பின்னலாடை நிறுவனங்கள் ரூ15,000 கோடி நஷ்டத்தை சந்திக்கின்றன.

உற்பத்தியை குறைப்பதால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

உலக சந்தையோடு போட்டிப்போட்ட நமது நிறுவனங்கள் (சிறு, குறு தொழில்கள் (MSMEs) ) இன்று முடங்கி போய் செய்வதறியாது நிற்கின்றன.

இந்த நஷ்டத்தை ஈடுகட்ட மத்தியரசு விரைவில் ஜிஎஸ்டி குறைப்பு செய்யப்போகிறது என்ற செய்தி வெளியாகியுள்ளது.

ஜிஎஸ்டி குறைப்பு, நிறுவனங்களின் நிதி நெருக்கடியை சிறிதளவு குறைத்தாலும் , 50% ஏற்றுமதி வரியை சமாளிக்கும் அளவிற்கு அது போதுமானது அல்ல.

உண்மையில் மத்தியரசு செய்ய வேண்டியது ஏற்றுமதி ஊக்கத் தொகை (Export Subsidy), சுங்க வரிச்சுமையை ஈடு செய்யும் நிதியுதவி (Compensation Fund), சிறுகுறு தொழில்நிறுவனங்கள் வாங்கும் வங்கி கடன்களுக்கு வட்டிக்குறைப்பு, உள்நாட்டுச்சந்தையை விரிவுபடுத்துதல் (‘Make in India’ எனும் பெயரில் உள்ளூர் கொள்முதலை அதிகரித்தல்) .

ஆனாலும் இதெல்லாம் யானைப் பசிக்கு சோளப்பொறி என்பதில் சந்தேகமில்லை.

இந்தியாவின் பொருளாதாரம் என்பது எதிர்காலத்தில் பெரும்பாலான சிறுகுறு நிறுவனங்கள் நிலைக்குலைய, சில குறிப்பிட்ட “பெரிய நிறுவனங்கள்” மட்டுமே வளர்ச்சி மற்றும் லாபம் என்ற நிலை வளர்ந்தால், இந்திய சமூக சமநிலை முற்றிலும் சிதையும்.

மேலும் இந்திய வேலைவாய்ப்பில் சிறுகுறு நிறுவனங்கள்(MSME ) 45% பங்கு வகிக்கின்றன.

இவை சிக்கலடைந்தால், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மற்றும் ஜிடிபி நேரடியாக பாதிக்கப்படும்.

இதுவரைரஷ்ய எண்ணெய் கொள்முதலால் இந்தியா $17 பில்லியன் வரை சேமித்துள்ளதாக கூறுகின்றனர்.

ஆனால் அமெரிக்காவின் 50% சுங்க வரியின் காரணமாக, இந்தியா $37 பில்லியன் வரை ஏற்றுமதி இழப்பை எதிர்கொள்ள வேண்டும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ட்ரம்ப், அதிபர்தேர்தல் பிரசுரத்தின் போது, “உலகம் முழுவதும் அமெரிக்காவை பயன்படுத்திக் கொண்டிருக்கிறது, நாங்கள் அதை நிறுத்தப் போகிறோம்” என்றார்.

அதன்படியே இந்தியா போன்ற நாடுகளை கடுமையாக வரிவிதித்து வதைத்துக்கொண்டிருக்கிறார்.

ரஷ்ய தள்ளுபடி கச்சா எண்ணெயால் ரிலையன்ஸ் போன்ற தனியார் நிறுவனங்களும் வரலாற்று லாபம் பெற்று வருகின்றன. ஆனால் சாமான்ய மக்களுக்கு இதனால் எந்த நன்மையும் கிடைக்கவில்லை.

இப்போது அமெரிக்காவின் சுங்கவரி காரணமாக, இந்த எண்ணெய் வியாபாரத்தில் சம்பந்தமே படாத திருப்பூர் பின்னலாடை நிறுவனங்கள் போன்ற நாடு முழுவதும் உள்ள பல சிறுகுறு தொழில்கள், தொழிலாளர்கள் அநியாயமாக பாதிக்கப்படும் நிலை வந்துள்ளது.

அம்பானியா நஷ்ட ஈடு தரப்போகிறார்?

இந்திய பொருளாதார வளர்ச்சி என்பது ரிலையன்ஸ் போன்ற தனியார் பெருநிறுவனங்கள் மட்டுமே கொள்ளை லாபமடைவதா?

கடைசியில் காலில் செருப்பு கூட இல்லாமல், வேலை தேடி சாலையில் நிற்கும் தொழிலாளர்களின் கண்ணீருக்கு யார் பதில் சொல்ல போகிறார்கள்?

20250730063359256.jpeg