பொதுவாக சம்பளம் வாங்கும் பத்திரிகையாளர்களுக்கு வேறு ஈடுபாடுகள் இருக்கக் கூடாது. தங்கள் தொழில் சாராத அமைப்புகளில் உறுப்பினராக இருக்க கூடாது என்ற எழுதப்படாத சட்டம் உண்டு. அவனைப் பொறுத்தவரையில் அப்படி எந்த விதி மூலம் ஹிண்டு பத்திரிகை அவனைக் கட்டுப்படுத்தவில்லை. அவனது சமூக அக்கறையும், கல்விக்களத் தொடர்பும் அங்கீகரிக்கப்பட்டன.
அவன் சில பல்கலைக்கழகங்களின் கல்வித்துறை நிர்வாக அமைப்புகளில் உறுப்பினராக நியமிக்கப்பட்டான். அந்தச் செய்தியும் பத்திரிகைகளில் வெளிவந்தது. அப்படி அவன் ஹிண்டுவில் உதவி ஆசிரியராக இருந்தபோது வகித்த பதவிகள்: கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைகழகத்தில் இதழியல் பாடத்திட்டக்குழு உறுப்பினர், திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் திட்டக்குழு உறுப்பினர். காஞ்சி பல்கலைக்கழகத்தில் நிலைக்குழு உறுப்பினர். இதற்கெல்லாம் எடிட்டர் ரவி அவனுக்கு அனுமதி அளித்திருந்தார். ஒரு பல்கலைக்கழகத்தில் பகுதி நேர Ph.D. ஆராய்ச்சி மாணவராக பதிவு செய்து கொள்ளவும் சம்மதித்தார். Editor, Reader Relationship பற்றி பிர்லா பௌண்டேஷன் நிதி உதவித் தொகைக்கு மனு செய்தபோது அதற்கும் அனுமதித்தார். அவன் அதற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டான். அது முழுநேர ஆய்வு, உதவித்தொகை குறைவு என்பதனால் ஏற்கவில்லை. காஞ்சி மடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் சீனா செல்வதாக இருந்தது. எடிட்டர் ரவி அவனை உடன் செல்லச் சொன்னார். அப்போது கல்கி பத்திரிகை ஆசிரியர் கி.ராஜேந்திரன், எடிட்டர் ரவியை தொடர்பு கொண்டு, ‘உங்கள் பத்திரிகையாளர் சீனா சென்று திரும்பும்போது எங்களுக்கும் கட்டுரை எழுதித் தருவாரா?’ என்று கேட்டார். ரவி, ‘அதற்கென்ன, அவர் தமிழிலும் எழுதுவார். நான் எழுதச் சொல்கிறேன்’ என்றார் பெருந்தன்மையுடன். ஆனால் ஜெயேந்திரரின் சீனப் பயணம் பின்னர் ரத்து செய்யப்பட்டது.
தமிழ் மொழி இலக்கியம் தொடர்பான சர்வதேச கருத்தரங்குகளில் பங்கு பெற்று ஆராய்ச்சி கட்டுரைகள் வழங்க அவன் அழைக்கப்பட்டபோது ரவி அதற்கு அனுமதி தந்து, பயண ஏற்பாடுகளையும் செய்து கொடுத்தார். ஆங்கில ஆராய்ச்சிக் கட்டுரைகளை ஹிண்டுவில் வெளியிடவும் செய்தார்.
ஒருமுறை தன் சொந்த விஷயமாக லண்டன் செல்ல வேண்டியிருந்தது. விடுப்பு கேட்டான். அப்போது ஆசிரியர் ரவி சொன்னார், “விடுப்பு வேண்டாம், லண்டனிலும், பாரிசிலும் இலங்கைத் தமிழர்கள் பலர் இருக்கிறார்கள். அடுத்த மாதம் இலங்கை பற்றிய சிறப்பிதழ் வெளியிட வேண்டும். எனவே நீங்கள் ஆன் டியூட்டியாகச் செல்லுங்கள்”, என்று சொல்லி அன்னியச் செலாவணியையும் கொடுத்தனுப்பினார். அவன் தன் சொந்த வேலையையும் பார்த்துக் கொண்டு, அலுவல் முறையிலான பேட்டிகளையும் முடித்துக் கொண்டு வந்தான். உழைக்கும் பத்திரிகையாளர் எல்லோரும் எளிதில் பெற்றுவிட முடியாத சலுகைகள் அவை.
அவன் அலுவல் வேலையாக விசாகப்பட்டினம் சென்ற போது இரண்டு கல்லூரிகளில் சொற்பொழிவாற்ற அழைக்கப்பட்டான். அவனும் அழைப்பை ஏற்று சொற்பொழிவுகள் செய்தான். விசாகப்பட்டினம் ஹிண்டு தலைமை நிருபர் ஆர்.சம்பத் எடிட்டரிடம் பேசி அவனது இரண்டு சொற்பொழிவுகளையும் செய்தி ஆக்கலாமா? என்று கேட்டிருந்தார்.
சம்பத்துக்கு வந்த சந்தேகம், ஹிண்டு உதவி ஆசிரியர் சொற்பொழிவு ஆற்றியது பற்றி, ஹிண்டுவிலேயே செய்தி வெளியிட முடியுமா என்பதுதான். அதுவரை அவர் அப்படிப்பட்ட ஒரு நிகழ்வை சந்தித்ததில்லை. எனவே எடிட்டர் ரவியிடம் அதை கவர் செய்யலாமா என்று கேட்டார். தாராளமாகச் செய்யலாம், நாம் அவரது பெயருடன் அதை செய்தியாக வெளியிடலாம் என்று பெருந்தன்மையுடன் சொன்னார் ரவி. அது அவனுக்கு தன் பத்திரிகையிலேயே செய்தியாக கவர் செய்யப்பட்ட அபூர்வமான சம்பவம்.
இதேபோல் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் சாகித்திய அகடமி நடத்திய கருத்தரங்கங்களில் அவன் சொற்பொழிவாற்றினான். திருநெல்வேலி நிருபர் சையத் முக்தருக்கும் வந்தது அதே சந்தேகம். அவர் செய்தி ஆசிரியரிடம் பேசினார். செய்தி ஆசிரியர் அவனது சொற்பொழிவின் சுருக்கத்தை செய்தியாக்குங்கள், வெளியிடலாம் என்றார்.
இப்படி அவன் பணிபுரியும் பத்திரிகையிலேயே அவனது சொற்பொழிவுகள் பற்றிய செய்தி அவன் பெயருடன் வெளிவந்தது. அது அபூர்வம், அவனுக்கு அந்தப் பெருமையை ஹிண்டு நிர்வாகம் கொடுத்தது. பொதுவாக சில பத்திரிகையின் ஆசிரியர்கள் தங்கள் தொடர்பான செய்திகளை வெளியிடுவதில்லை, புகைப்படங்களையும் வெளியிடுவதில்லை.
இதற்கான உதாரணங்கள் தினமணி ஆசிரியர் ஏ.என். சிவராமன், குமுதம் ஆசிரியர் எஸ்.ஏ.பி. அண்ணாமலை, ஹிண்டு நிர்வாக ஆசிரியர் கஸ்தூரி, தினமணி ஆசிரியர் ஆர்.எம்.டி.சம்பந்தம் ஆகிய எடிட்டர்களே. தங்கள் புகைப்படங்களை பத்திரிகையில் வெளியிட்டது இல்லை.
இதேபோல அவனது கட்டுரையைக் குறிப்பிட்டு ஹிண்டு தலையங்கத்தில் இடம் பெறும் அதிசயமான வாய்ப்பு கிடைத்தது. G.கஸ்தூரி ஹிண்டு நிர்வாக ஆசிரியராக இருந்த காலத்தில் அவன் நெய்வேலியில் என்.எல்.சிக்கு நிலம் கையகப்படுத்தப்படுவது தொடர்பாக எழுதிய செய்திக்கட்டுரை ஹிண்டு ‘Our Staff Reporter has already drawn attention to the slow pace in land acquisition’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஹிண்டுவின் செய்திப் பக்கங்களில் தினமும் அவர் ஸ்டாப் ரிப்போர்ட்டர் என்ற குறிப்பு இருக்கும். ஆனால் தலையங்கத்தில் Our Staff Reporter என்ற வார்த்தை இடம் பெற்றது அதுவே முதல் முறையும், கடைசி முறையும் கூட, அது வெகு அபூர்வமான அங்கீகாரம்.
அவனையொத்த பிற நிருபர்கள் அன்று வரையோ இன்று வரையோ பெற்றிராத கௌரவம் அது. காரணம் அவனது தகவல்கள் நிறைந்த துணிச்சலான செய்திக் கட்டுரை.
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் ஜி.எல்.டண்டன் சேர்மனாக இருந்த காலத்தில் மின் உற்பத்தி, சுற்றுப்புற சூழல், வளாக வசதிகள், லாபப்போக்கு ஆகிய துறைகளில் தேசிய விருதுகள் பெற்றது. அப்போது பாண்டிசேரியில் ஆல் இண்டியா ரேடியோவின் டைரக்டராக இருந்த B.R.குமார், ஜி.எல்.டண்டனை வானொலிக்காக ஆங்கிலத்தில் பேட்டிகாண முடியுமா என்று அவனைக் கேட்டார்.
தொலைபேசியில் நிர்வாக ஆசிரியர் ஜி.கஸ்தூரியிடம் அனுமதி கேட்டான். அவர் கூடாது என்று சொல்லிவிட்டார். அவன்தான் பேட்டி காணவேண்டும் என்று திடமாக இருந்த ஏ.ஐ.ஆர்.டைரக்டர் குமார் சென்னை சென்று நிர்வாக ஆசிரியர் கஸ்தூரியைச் சந்தித்து, உங்கள் நிருபர்தான் இதற்கு பொருத்தமான ஒரே நபர், விருது பெறும் நான்கு துறைகள் பற்றிய விஷயஞானம் உள்ளவர். நன்றாக ஆங்கிலம் பேசுபவர். சேர்மன் டண்டனை நன்கு அறிந்தவர். இது தேசிய அளவில் எல்லா வானொலி நிலையங்களும் ஒலிபரப்பக்கூடிய நிகழ்ச்சி. எனவே உங்கள் நெய்வேலி நிருபர் எங்களுக்காக பேட்டி காண நீங்கள் அனுமதிக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டார்.
தன் நிருபர் பேட்டி காண வேண்டுமென்பதற்காக பாண்டிச்சேரியில் இருந்து ஆல் இண்டியா ரேடியோ டைரக்டர் சென்னைக்கு வந்து, அனுமதி கேட்டுக் கொண்டதை அடுத்து, கஸ்தூரி அனுமதி கொடுத்தார்.அவன் வானொலிக்காக பேட்டி எடுக்க அனுமதித்தார். அத்துடன் அவனுக்கு தொலைபேசியில் சொன்னார், ‘விதிவிலக்காக இந்த ஒருமுறை மட்டும் தான்’ என்றார்.
Leave a comment
Upload