மாணிக்கம்!பெட்டிகளையெல்லாம் இறக்கி வைத்துவிட்டு பணத்தை வாங்கிகிட்டு கிளம்பு,என கடைமுதலாளி ரெத்தினம் சொல்லவும், அய்யா வீட்டிற்கு போகாமல் நம்மவேலை முடியட்டும்னு காத்துகிட்டு இருக்கார் என நினைத்த மாணிக்கம் தன் வேலையில் விறுவிறுப்பானான். மாணிக்கத்திற்கு வீடே அந்தக் கட்டிடத்திற்கு வெளியே உள்ள குடிசைதான். தட்டுவண்டி ஓட்டி. இந்த கம்பெனிக்கு அவன்தான் தட்டு வண்டியை ஓட்டுபவர். வேலை முடிந்ததும், மூன்று நூறு ரூபாய்த்தாள்களைப் பெற்று சந்தோஷமாகப் போனவனைப் பார்த்த ரெத்தினம் ஏதோ நினைத்து சிரித்தார் மனத்திற்குள், அவன் இறக்கிய சரக்குகளின் மதிப்பு சில லட்சங்களைத் தாண்டும், அதில் லாபம் சில ஆயிரங்களைத் தாண்டும், இருந்தும், நம்மிடம் அந்த சந்தோஷம் இல்லையே, அவன் சிரித்தபடி அந்த ரூபாயை வாங்கிக்கொண்டுச்செல்கிறானே ! என வியந்துப்போனார் அப்போ சந்தோஷம் எங்கியிருக்கு ? என்று யோசித்தவாறு.
இப்படி நாமும் நிம்மதியாகத்தான் இருந்தோம், எப்பொழுதிலிருந்து நமது சந்தோஷம் தொலைய ஆரம்பித்தது என யோசித்தபடி இருக்கையில் அமர்ந்திருந்தார் ரெத்தினம். வீட்டிலிருந்து போன் அழைப்பு வரவே மணியைப்பார்த்தார், மணி இரவு ஒன்பாதாகியிருந்தது. வேலை செய்தபோது வளரும் வயது, கடினாமாக உழைத்தோம் பொருள் தேவைக்கேற்ப ஓடினோம், உழைத்தோம், சந்தோஷமாகதானே இருந்தோம். திருமணம் ஆனதும், அதிகம் பொருள் ஈட்ட வேண்டிய கட்டாயத்தில் மேலும் மேலும் என ஓடினோம், இப்போதும் ஓடிக்கொண்டுதானே இருக்கிறோம், இதற்கு முடிவே இல்லையா ? என்றெல்லாம் யோசித்தபோது, சன்னல் வழியே மாணிக்கம் தன் மனைவி மற்றும் மக்களுடன் அமர்ந்து வீட்டுவாசலில் பேசிக்கொண்டே உணவு உண்பதைக் கண்டார்.
இந்தா, ரூபா அறுநூறு இருக்கு இதிலே, நாளைக்கு புள்ளைங்க என்ன கேக்குதோ அதைவாங்கி ஆக்கிப்போடு என்றான். சரிய்யா, இப்போ நீ சாப்பிடு என்ற மனைவியிடம் புள்ளைகளுக்குகொடு,இட்டிலி எனக்கு போதும் என மறுக்க, அது சாப்பிட்டுதுய்யா, நீ சாப்பிடு, நாள் முழுவதும் வெக்கையிலே கிடந்து உழைக்கிற நீ, உன் உடம்பை பார்த்துக்கவேண்டாமா, நீ நல்லா இருந்தாத்தானேய்யா நாங்க நல்லா இருக்கமுடியும் என ஆசையாக பரிமாறிய அவள் மனைவியையும், மகன்களையும் பார்த்தவர் தன் வீட்டை நினைத்துப்பார்த்தார்.
என்னங்க சமைக்கட்டும் என்று மனைவி கேட்டே பல வருடங்களாகிறது, வசதி வாய்ப்புகள் பெருகியதும் இடைவெளி அதிகமானது, எங்கும் வேலையாட்கள், பரிமாற, மாத்திரை கொடுக்க என மனைவி மக்கள் என யாரும் அருகில் வருவதே இல்லை. ஆனால் எல்லோரும் ஒரே வீட்டில் இருந்தும் தனித்தனியாக உள்ளதை நினைத்துப் பார்த்தார் உணவுக்கு பஞ்சமில்லை ஆனால் பாச உணர்வுகளுக்கு வெகுவான பஞ்சம் நிலவ ஆரம்பித்தது வசதிகள் வந்த பின்தான். அவர்களைப் பொறுத்தவரை நான் ATM மெஷின் அவ்வளவுதான். வருமானம் பெருகபெருக வசதிகள் பெருகியது, வசதிகள் பெருகியதும், தேவைகள் அதிகமானது ,பின் ஆடம்பரச் செலவுகள் அதிகரித்து அதுவே தற்போது பழக்கமாகிப் போனது, அதனாலே இன்னும் தேவைகள் ஏறிக்கொண்டேபோகிறது, என யோசித்தவர், மீண்டும் சன்னல் வழிப்பார்த்தார் மாணிக்கம், அதே தட்டு வண்டியிலே,நாளைய பற்றிய கவலைகள் எதுவுமின்றி கால் நீட்டி படுத்திருக்க,அருகே மனைவி அவன் கால்களைப் பிடித்துவிட, வேப்ப மரக்காற்றில் ஆனந்தமாக தூங்கிப் போயிருந்தான். ஆசைகளை விலக்கி தேவைகளை குறைத்தலே நிம்மதியான வாழ்விற்கு அடிப்படையாகிறது, அப்படி பார்த்தால் மாணிக்கம் நம்மை விட பெரும் பணக்காரன்தான் என நினைத்தார். இதை அமர்ந்து யோசிக்ககூட நேரமில்லாமல் தேவைகளின் தேடி அதன் பின்னால் இத்தனைநாள் அலைந்து இருக்கோமே?! நேரம் வந்தால் ஜடப்பொருள் சன்னல்கூட பாடம் புகட்டும் என்பதையும் சேர்த்தே உணர்ந்திருந்தார். அன்றைய இரவு நல்ல தூக்கம் கண்டிப்பாக உண்டு ரத்தினத்திற்கு.
Leave a comment
Upload