தொடர்கள்
அனுபவம்
கைலாய மலை அனுபவங்கள் 2025 ! 1 சத்குருவின் சந்திப்பு. - ராம்

2025072923533825.jpeg

மூன்றாவது கைலாய பயணம் நேபாளம் வழியே என்ற போது ஒரு புது அனுபவத்திற்கு தயாராக இருந்தது உண்மைதான்.

ஆனால் அது தடைபட்டு தடைபட்டு தட்டு தடுமாற வைக்கும் என்று துவக்கத்தில் புரியவில்லை.

இந்த முறையும் ஒரு மினி தொடராகத்தான் இது வரவிருக்கிறது.

ஆனால் அட்டைப்படத்தில் சொன்னது போல, சத்குரு சந்திப்பு என்றதும் பிரத்யேகமாக விகடகவிக்கு பேட்டி கொடுக்கவில்லை. அது சும்மா அட்டைப் பட வாசகம் தான். மன்னிக்கவும்.

அவரை சந்தித்த புள்ளிக்கு பின் ஒரு சின்ன ஃபிளாஷ்பேக் கதை இருக்கிறது.

காட்மாண்டுவிலிருந்து புறப்பட்டு. தட்டோபாணி என்ற ஒரு இடம். அங்கு தங்க வைக்கப்பட்டு அங்கிருந்து தான் நியாலம் என்ற ஊருக்குள் சீன எல்லைக்குள் நுழைய வேண்டும்.

அங்கு தங்க வைக்கப்பட்டோம். அங்கே நண்பர்கள் பாலம் என்ற ஒரு இடம் இருக்கிறது. அங்கே தான் சீனாவுக்குள் நுழைய விரும்பும் பக்தர்கள் காத்திருக்க வைக்கப்படுகிறார்கள்.

அங்கு தான் தன்னுடைய பைக்கில் வந்தார் சத்குரு.

அவருடன் சில நூறு பேர்கள் வர அந்த இடம் ரணகளமானது. அதாவது நேரத்தை பொறுத்தவரை காக்க வைக்கப்பட்டோம்.

சத்குருவிற்குத் தான் முன்னுரிமை. சில்லறை அதிகம் என்பது போக, அவருக்கு அரசு வழி செல்வாக்கும் இருப்பதால் ஆச்சரியமில்லை.

முதலில் சத்குருவின் காலில் விழுந்து வணங்க வேண்டும் என்ற ஆவல், அவர் பைக்கை எடுத்துக் கொண்டு விருட்டென்று சென்றவுடன் புஸ்ஸென்று போய் விட்டது.

பின்னர் அவரால் ஏற்பட்ட கால தாமதம் இன்ன பிற இடைஞ்சல்கள், நல்ல ஹோட்டல்கள் எல்லாம் ஈஷா குழுவினர் எடுத்துக் கொண்டது என்று கொஞ்சம் கொஞ்சமாக இடைஞ்சல் அதிகமாகிக் கொண்டே இருக்க ஒரு கட்டத்தில் சத்குரு மீது பக்தியும், ஏகப்பட்ட மரியாதையும் ஏற்படுவதற்கு பதில், கோபமே வந்து விட்டது.

இது நியாலம் துவங்கி, சாகா தொடர்ந்து மானசரோவர், தார்ச்சன் வரை தொடர்ந்தது.

அட்டையில் சத்குருவுடன் சந்திப்பு என்று போட்டு விட்டு அதைப் பற்றி எழதவில்லை என்றால் அது போங்காட்டம்.

கடைசி நாள் நாங்கள் தங்கியிருந்த யீ ஹோ ஹோட்டலில் தான் சத்குருவும் தங்கியிருந்தார் போலும்.

எங்கள் பஸ் புறப்பட தயாராக காத்திருக்க, சத்குருவின் கார் ரிவர்ஸ் எடுத்து வெளியே வந்தது.

கொஞ்சமும் தாமதிக்காமல், பஸ்ஸிலிருந்து இறங்கி கீழே சென்றேன். காரை நோக்கி நடந்தேன் கைகூப்பிய படி.

சத்குருவும் கார் கண்ணாடியை ஏற்றாமல் திறந்து வைத்து கைகூப்பினார்.

அருகே சென்று வண்டி வேகம் எடுத்து விடுமோ என்று சிறிதும் யோசிக்காமல் கார் அருகே குனிந்து நமஸ்கரித்தேன். கார் கண்ணாடி வழியாக கையை நீட்டி தலையை நன்றாக அழுத்தி ஆசிர்வாதம் செய்தார்.

20250729235632733.jpeg

தட்டோபாணியிலிருந்து துவங்கிய ஒரு ஆசை. அது சத்குரு மீது கொஞ்சம் எரிச்சலாக மாறி, கோபமாக மாறி ஏதோ சத்குரு நமக்கு மட்டும் கெடுதல் செய்கிறார் என்பது போல ஒரு மாயை உருவாகி, பின்னர் ஒரு தேர்ந்தெடுத்த சந்தர்ப்பத்தில் என்னை ஏதோ ஒரு ஆகர்ஷ சக்தியாக இழுத்து அருகே வரவழைத்து, ஸ்பரிசத்தால் ஆசிர்வதித்தார் என்றால், இந்த ஒரு கணத்தை ஆகச் சரியாக கட்டமைத்த சக்தி எது ???

20250729235657853.jpeg

அவரைப் பற்றிய நெகடிவ் செய்திகளோ அல்லது எதிர் பரப்புரைகளோ இங்கு பொருட்டல்ல.

சத்குரு ஒரு மகான். சத்குரு ஒரு ஆன்மீக வாதி. சத்குரு ஒரு காந்தம்.

சத்குரு ஒரு மதத் தலைவர். ஒரு யோகி.

அந்த வகையில் இந்த ஒரு கணத்தை அவரை நோக்கி இழுக்க வைத்து முதல் முதலில் தட்டோபாணியில் நான் நினைத்த, ஆசைப்பட்ட ஒரு விஷயத்தை பத்து நாட்கள் கழித்து எந்த தடையும் இல்லாமல் ஆக சுலபமாக எந்த பிரயத்தனமும் இல்லாமல் நடந்த அந்த ஒரு சந்திப்பு…….

அதிசயம் தான்.

இனி அடுத்த வாரம் முதல் எங்கள் எட்டு பேர் குழுவின் அட்டகாசத்துடன் கைலை மலையை தரிசிப்போம்.

அப்படியே நாம் சந்தித்த ஒவ்வொரு மனிதர்களும், சுவாரஸ்யங்களும்……

மனோகர் டிராவலஸ் கார்த்தியுடன் வந்த 46 பேர்களும், வித்தியாசமான யாத்திரீகர்களும்....

20250729235807587.jpeg

இனிமையான அனுபவம்.

பயணம் தொடரும்...