உலகப் புகழ்பெற்ற பாப் பாடகி டெய்லர் ஸ்விப்ட், தன்னுடைய காதலரான டிராவிஸ் கெல்சியை திருமணம் செய்யப்போவதாக செவ்வாய்க்கிழமை அறிவித்தார். இவரது அறிவிப்பு இன்ஸ்டாகிராமில் 14.5 மில்லியன் விருப்ப குறியீடுகளைப் பெற்று, இணையதளத்தில் ஒரு பெரிய அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. டெய்லர் ஸ்விப்ட், உலக அளவில் இளைஞர்களால் பெரிதும் விரும்பப்படும் ஒரு சிறந்த இசைக்கலைஞர், பாடலாசிரியர். இவரது பாடல் வரிகள் பல வித உணர்வுகளை வெளிப்படுத்துவதோடு, பெண்களை மையமாகக் கொண்டு அமைந்திருப்பதும் இவரது புகழுக்கு காரணம். டிராவிஸ் கெல்சி, ஒரு கால்பந்து வீரர், அமெரிக்காவை சார்ந்த கான்செர் சிட்டி சீப்ஸ் என்னும் அணிக்காக, NFL (National Football League) விளையாட்டுகளில் பங்கு பெற்று வருபவர்.
கெல்சி தனது வலையொலியில்(Podcast), தான் டெய்லர் ஸ்விப்ட் இசை நிகழ்ச்சிக்கு சென்றது பற்றியும், அவரைக் காண இயலாதது பற்றியும் குறிப்பிட்டு இருந்தார். தான் அவருக்கு ஒரு பிரேஸ்லேட் வாங்கி வைத்திருந்ததையும், அதில் அவர் தனது தொலைபேசி எண்ணை குறிப்பிட்டு இருந்ததாகவும் சொல்லியிருந்தார். இதுவே இவர்களது காதல் கதைக்கு பிள்ளையார் சுழி போட்டது என்று கூறலாம். இதனைத் தொடர்ந்து ஸ்விப்ட், கெல்சி விளையாடிய கால்பந்து விளையாட்டிற்கு தொடர்ந்து சென்றதும், கெல்சி, டெய்லர் ஸ்விப்ட் இசை நிகழ்ச்சிகளுக்கு தொடர்ந்து வந்ததும் ரசிகர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியது. டெய்லர் ஸ்விப்ட் ஒரு படி மேலே சென்று, தனது பாடல் வரிகளில் கெல்சியை பற்றி குறிப்பிட்டு தன் காதலையும் வெளிப்படுத்தினார்.
இரு ஆண்டுகளாகத் தொடர்ந்த இவர்களது காதல் கதையின் அடுத்த கட்டமாக, டெய்லர் ஸ்விப்ட் தனது இன்ஸ்டாகிராமில் ஒரு அழகான தொடர் மூலம் தன்னுடைய திருமணத்தை பற்றி கூறியிருந்தார். "உங்கள் ஆங்கில ஆசிரியரும், விளையாட்டு ஆசிரியரும் திருமணம் செய்ய உள்ளார்கள்" என்கிற அழகான குறிப்போடு அறிவித்தது, டெய்லர் ஸ்விப்ட்டின் தனித்துவத்தை மற்றும்மொரு முறை வெளிப்படுத்தியது. இவரது பாடல் வரிகள் போன்றே, இந்த அறிவிப்பும் இவரது ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.
இந்த அறிவிப்புக்கு, உலக அரங்கில் பல பிரபலங்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்த வண்ணம் உள்ளனர். டெய்லர் ஸ்விப்ட்டின் உயிர்த்தோழியான செலினா கோமேஸ், ஒரு அழகான பதிவின் மூலம் தன் அன்பை வெளியிட்டுள்ளார். அமெரிக்க அதிபரான டொனால்ட் டிரம்ப் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க தேர்தலின் பொது, கமலா ஹாரிஸை டெய்லர் ஸ்விப்ட் ஆதரித்தும், அதனால் டிரம்ப் இவருக்கு தனது எதிர்ப்பை தெரிவித்ததும் நாம் அறிந்ததே.
ஒரு பிரம்மாண்டமான திருமணத்திற்கு உலகமே தயாராகிக்கொண்டிருக்கிறது. நாமும் சேர்ந்து வாழ்த்துவோம்.
Leave a comment
Upload