ஒரு ரூபாய் வடிவில்
அருகம்புல்லில் விநாயகர் ஓவியம்!
காஞ்சிபுரம் அருகே ஐயம்பேட்டை பகுதியை சேர்ந்த ஓவியர் பா.சங்கர், ஏற்கெனவே வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி பிரமோற்சவ உற்சவங்களை புகைப்படம் எடுத்து, அவற்றை வாட்டர் கலரில் நுணுக்க ஓவியங்களாக வரைந்து, ஒவ்வொரு நாளும் காலை, மாலை வேளைகளில் மக்களிடையே காட்சிப்படுத்தி அசத்தியுள்ளார். இதைத் தொடர்ந்து, கர்மவீரர் காமராஜரின் பிறப்பு முதல் இறப்பு வரையிலான சாதனைகளை ஒரே ஓவியத்தில் உள்ளடக்கி தீட்டியுள்ளார்.
இந்நிலையில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கடந்த 27ம் தேதி ஒரு ரூபாய் நாணய வடிவில், அருகம்புல்லினால் விநாயகர் ஓவியத்தை வாட்டர் கலரில் வரைந்து ஓவியர் சங்கர் அசத்தியுள்ளார். இது, பிரஷ்ஷை உபயோகப்படுத்தாமல், வெறும் அருகம்புல்லிலேயே வரையப்பட்ட விநாயகர் ஓவியமாகும்.
பயனற்ற காகிதத்தில் விநாயகர் சிலை!
புதுச்சேரி மாநிலம், காராமணிக்குப்பம் ஜீவானந்தம் அரசு பள்ளி மாணவர்கள், விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, கடந்த 26-ம் தேதி தங்களது பள்ளியில் சேகரிக்கப்பட்ட பயனற்ற குப்பை காகிதங்கள் மூலம் சுமார் 5 அடி உயரத்தில் ரசாயன கலவை எதுவுமின்றி, சுமார் 50 கிலோ எடையில் பிரமாண்ட விநாயகர் சிலையை உருவாக்கி அசத்தியுள்ளனர்.
ஷாம்பு, சோப்புகளால் விநாயகர் சிலை!
ஆந்திர மாநிலம், அனந்தபுரம் மாவட்டம், பாமிடியில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, மற்ற சிலைகள் போல் செய்யாமல், சோப் மற்றும் ஷாம்புக்களால் சுமார் 8 அடி உயர விநாயகர் சிலையை உருவாக்கியுள்ளனர். இது, அப்பகுதி மக்களை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது. இச்சிலையை வழிபட்ட பின்னர், அதில் உள்ள சோப், ஷாம்புக்கள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் என்று சிலையை நிறுவிய நிர்வாகிகள் தகவல் தெரிவித்தனர்.
லட்டினால் உருவான விநாயகர் சிலை!
கடலூர் மாவட்டம், திருப்பாதிரிபுலியூரில் கடந்த 27ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, 73 கிலோ பூந்தியால் பிரமாண்ட லட்டு விநாயகர் செய்யப்பட்டு, வழிபாடுகள் நடந்தன. விநாயகர் சதுர்த்தி முடிந்ததும், இந்த லட்டு விநாயகரை ஏலத்தில் விட்டோ அல்லது பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கலாம் என்று திட்டமிட்டு இருக்கிறோம் என்று கடை நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.
ஏழுமலையான் வடிவில் விநாயகர் சிலை!
திருவள்ளூர் அருகே மணவாள நகர், பூந்தமல்லி நெடுஞ்சாலை பகுதியில் வசிக்கும் மக்கள், விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, திருமலையில் வீற்றிருக்கும் ஏழுமலையானை போல் சர்வ அலங்காரங்களுடன் விநாயகர் சிலையை உருவாக்கி வழிபட்டு வருகின்றனர். அவை பார்ப்பதற்கு, அச்சு அசலாக ஏழுமலையானை நேரில் தரிசிப்பது போல் இருந்தது என்று அப்பகுதி மக்கள் பரவசத்துடன் தெரிவித்தனர்.
இதுதவிர, சென்னை நகரின் ஒருசில இடங்களில் வீற்றிருந்த மளிகை பொருள் விநாயகர், தாம்பூல தட்டு விநாயகர், பாடப்புத்தக விநாயகர், சோலார் வீட்டில் வசிக்கும் விநாயகர் என பல்வேறு வடிவிலான விநாயகர் சிலை புகைப்படங்கள் இதோ... இவற்றை நமது விகடகவி வாசகர்கள் கண்டு ரசிப்பதற்கு வழங்கப்பட்டு உள்ளன.
Leave a comment
Upload