பக்கத்து அறைக்கு, பாட்டி நேற்று தான் குடி வந்தாள்.அடுத்த அறையில் இருக்கும் ராமபத்ரனுக்கு, இரண்டு நாளாய் இருமல். இன்னிக்கு கொஞ்சம் அதிகமாவே இருக்கு.விட்டு விட்டு வரும் இருமல் சத்தம்,
பக்கத்து ரூமுக்கு குடி வந்த பாட்டியின் மனசு கொஞ்சம் பட படத்தது.
வயசான காலத்துல பக்கத்திலிருந்து கவனிக்க ஆளில்லாமல், நம்மை போல அவரும் ஆதரவு இல்லாம இருக்காரோ?.
பாட்டி மனசுல அங்கலாய்ப்பு அதிகமாச்சு.
வரட்டு இருமல் ராமபத்ரனை மீண்டும் வாட்டி எடுக்க,
பாட்டியின் மனசு ஏனோ பரிதவிச்சது.
குடிக்க தண்ணி கொடுக்க கூட ஆளில்லாமல். என்ன வாழ்க்கையோ.விரக்தியில் பாட்டியும் நொந்து போனாள்.
பீங்கான் குவளையில் இருந்த தண்ணீரை எட்டி எடுக்கப்பார்த்தா் ராமபத்ரன். எடுக்க முடியவில்லை. சோர்வினால் கொஞ்சம் தளர்ந்திருந்தார்.
இதை எட்டிப் பார்த்த பாட்டி, உடனே உள்ளே நுழைந்து,
“நான் ஹெல்ப் பண்ணலாமா ”
ராமபத்ரன் திடுக்கிட்டு திரும்பிப் பார்த்தார். குழப்பத்தில் தடுமாறினார். மீண்டும் யோசிக்கலானார். குரலில் கொஞ்சமும் மாற்றமில்லை. மூப்பினால் முகத்தில் வந்த மாற்றம். அடையாளம் காண சிரமப்பட்டார்.
கல்யாணியாய் இருக்குமோ. சந்தேகம் வலுத்தது.
டெஸ்ட் பண்ணிடலாம் என்று முடிவெடுத்து,
“உங்க பேர் கல்யாணியா”
“யெஸ் மிஸ்டர் ராமபத்ரன்” அழுத்தம் திருத்தமாய் பாட்டி பதிலளித்தாள்.
புரிந்து கொண்டார் ராமபத்ரன். என் கல்யாணி தான் இவள்.
தப்பு தப்பு .அப்படி சொல்லப்படாது.அந்த உரிமையை அன்னிக்கே இழந்துட்டேன்.
இப்ப எந்த தைரியத்தில் நான் என் கல்யாணின்னு சொல்ல முடியும்.
அவளுக்கு அன்னிக்கு இருந்த அதே தைரியம் இன்னிக்கும் இருக்கே.அதே தொனியில் மிஸ்டர் ராமபத்ரன்னு அழுத்தம் திருத்தமா அழைக்கிறாளே.
“சார் தண்ணியை எடுத்து கொடுக்கவா”
என் அருகே வந்து குவளையில் இருந்த தண்ணீரை கிளாஸ் டம்ளரில் ஊத்திக் கொடுத்தாள்.
“இருமலுக்கு ஏதாவது மருந்து வச்சிருக்கீங்களா.எடுத்து கொடுக்கவா”.
“இருக்கு… நான் பார்த்து எடுத்துக்கிறேன் மா”.
அதே ஆசை. அதே பரிவு. இன்னும் அப்படியே இருக்கே. பக்கத்து வீட்டுப் பெண் .ஒன்னாதான் வளர்ந்தோம். ஒன்னாதான் படிச்சோம்.
சின்ன வயசுலயே ஒருவருக்கு ஒருவர் மனசு விட்டு பேசுவோம்.
அது என்னமோ எங்க காதலை மட்டும் மனசு விட்டு பேசிக்கல.
திடீர்னு எங்க வீட்ல கல்யாணக் கட்டத்துக்கு என்னை இழுத்து வந்து, என் மாமன் மகளை கட்டி வைக்க, என் சம்மதம் இல்லாம முடிவு பண்ணிட்டாங்க.நிர்பந்தம் என்னை கொஞ்சம் நிலை தடுமாற வச்சுது.அப்பா,அம்மாவை எதிர்க்க முடியாம சம்மதம் சொல்லிட்டேன்.
கல்யாணி வீட்ல அவங்களும் வீட்டை காலி பண்ணிட்டாங்க. எங்க போனாங்கற தகவல் எதுவும் எனக்குத் தெரியல. அப்புறம் எங்க ரண்டு பேருக்கும் காண்டாக்ட் இல்லாமலே போயிடுச்சு.
சில வருஷங்களுக்கு பிறகு தான் கல்யாணிக்கு கல்யாணமே ஆகலங்கிற செய்தி என் காதுக்கு வந்தது . என்னையே மனசுல வரிச்சுண்டு கல்யாணமே வேண்டாம்னு சொல்லிட்டாளாம்.வைராக்கியமா வாழ்ந்துட்டா.
அதுக்கு பிறகு அவளை நான் பார்க்கவே இல்ல.
இன்னிக்கு என் மனைவியும் உயிரோட இல்ல. U.Sல இருக்கிற என் பையன் இந்த சீனியர் சிட்டிஸன் ஹோம் கம்யூனிட்டியிலே என்ன சேர்த்துட்டு போயிட்டான்.
கல்யாணியை கடவுள் தான் துணைக்கு அனுப்பினாரோ.
பழைய நினைவுகளில் ஆழ்ந்திருக்கும் போது,
கல்யாணி என் அருகில் வந்து “ஏதாவது ஹெல்ப் வேணும்னா என்னைக் கூப்பிடுங்க. சங்கோஜப் படாதீங்க”
அதே அதிகார தொனியில் அன்பையும் கலந்து அவள் சொன்னபோது,
கல்யாணி இன்னமும் தன் மனசுல என்னை ஏந்திகிட்டுதான் இருக்கா…. .
“கல்யாணி” ….. அழைக்க ஆசைப்பட்டேன். கோழை மனசு கொஞ்சம் தடுத்தது.
“மிஸ்டர் ராமபத்ரன்” கணீரென்ற குரலில் கல்யாணி அழைத்து,
“ஏதாவது ஹெல்ப் வேணும்னா, கல்யாணின்னு ஒரு குரல் கொடுங்க. சங்கோஜப்படாதீங்க”, சொல்லி நகர்ந்தாள்.
ராமபத்ரன் ’மறக்காதா மனசு?’ என்று தன் மனதையே கேட்டுக் கொண்டார் அந்த வயதிலும்.கல்யாணியும் அப்படித்தான்!
Leave a comment
Upload