அருணாச்சல பிரதேஷ், தலாய்லாமா இப்படி சீனா இந்தியாவுக்கு இடையே பேச வேண்டிய பிரச்சனைகள் நிறைய நிறைய நிறைய. லடாக்கில் கல்வான் பள்ளத்தாக்கில் 2020 ஜூன் 15-ஆம் தேதி இந்திய, சீன வீரர்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டனர். 1962 இந்தியா சீனா போருக்கு பிறகு இந்திய சீன வீரர்கள் மோதிக்கொண்டது இதுதான் முதல் முறை. இதைத்தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது.
கஸானில் சென்ற ஆண்டு பிரதமர் மோடி சீனா அதிபர் ஜீ ஜின் பிங்கை சந்தித்து பேசினார். அதன் பிறகு எல்லையில் சீனாப் படைகள் வாபஸ் பெறப்பட்டு இரண்டு நாடுகளுக்கு இடையிலான உறவில் ஓரளவு பதட்டம் குறைந்தது.
ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு பிரதமர் மோடி சீனா சென்றது. அமெரிக்காவின் வரிவிதிப்பு மிரட்டலுக்கு மத்தியில் மோடியின் பார்வை சீனா பக்கம் திரும்பியது உலக நாடுகள் அடுத்து மோடி என்ன செய்யப் போகிறார் என்று கவனிக்க வைத்தது.
சீனாவில் நடக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி சீனா சென்றார்.
இருநாட்டு தலைவர்களும் வெளிப்படையாக தங்கள் பிரச்சனைகளை பேசினார்கள் .பேச்சுவார்த்தைக்குப் பின்பு சீன அதிபர் "உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகள் ஆகிய நாம் நண்பர்களாக நல்ல அண்டை நாடுகளாக இருப்பது மிக முக்கியம் "என்றார்.
பிரதமர் மோடி சீனாவுடனான நட்புறவை பரஸ்பர நம்பிக்கை, பரஸ்பரம் மரியாதை மற்றும் பரஸ்பர உணர்வுகள் அடிப்படையில் முன்னெடுத்துச் செல்ல இந்தியா விரும்புகிறது "என்றார்.
பிரதமர் தொடர்ந்து சொல்லும் போது "இந்தியா சீனா பரஸ்பர ஒத்துழைப்பில், நட்பில் 240 கோடி மக்களின் நலன் அடங்கியுள்ளது. கஸானில் கடந்த ஆண்டு நடந்த சந்திப்பில் விவாதங்கள், ஆக்கபூர்வமான திசையில் அமைந்தன.
எல்லையில் சீனப்படை விலகல் நடவடிக்கை தொடர்ந்து அங்கு அமைதி நிலவுகிறது. இரு நாடுகளுக்கு இடையே பயணிகளின் விமான போக்குவரத்து தொடங்க உள்ளது. கைலாஷ் மானசரோவர் யாத்திரையும் தொடங்கியுள்ளது. இரு நாடுகளும் வளர்ச்சியின் வாய்ப்புகளுக்கு ஒன்றுக்கொன்று இணைந்து செயல்பட வேண்டும்.
இரு தரப்பு உறவு உத்தி சார்ந்ததாக, நீண்டகால பிணைப்பை கருத்தில் கொண்டதாக அமைய வேண்டும். அதன் மூலம் நிலையான, வலிமையான நீடித்த வளர்ச்சி உறவில் ஏற்பட வேண்டும்.
இந்தியா சீனா உறவு உத்தி சார் தற்சார்புடன் அமைய வேண்டும். இந்த உறவை மூன்றாவது நாட்டின் பார்வை வழியாக காண்பது கூடாது "என்று தெளிவாகப் பேசினார் பிரதமர் மோடி.
சீனாவில் பிரதமர் 'உத்தி சார்பு தற்சார்பு 'கொண்டதாக என்ற வார்த்தையை பயன்படுத்தியது உலக நாடுகள் உன்னிப்பாக கவனித்தது. இதற்கு அர்த்தம் நான் எந்த நாட்டுடன் எந்த விதமான உறவுகளும் இருக்க வேண்டும் என்பதை சீனா தன்னுடன் இருக்கும் வர்த்தக, பொருளாதாரம் ஒப்பந்தங்களை வைத்து எந்த நிர்பந்தமும் செய்யக்கூடாது என்பதுதான் அதற்கு அர்த்தம்.
இதுவரை இந்தியாவின் வெளிநாட்டு கொள்கை என்பது ' அணிசேரா கொள்கையாக இருந்தது. இப்போது அதையும் தனது தெளிவான விளக்கம் மூலம் பிரதமர் இது சீனாவுடன் உறவுக்கு மட்டும் அல்ல எல்லா நாடுகளுக்கும் பொருந்தும் என்று சீனாவில் ட்ரம்புக்கு புரியும்படி சொல்லி விட்டார் பிரதமர் மோடி.
Leave a comment
Upload