மத்திய பாஜக அரசு ஜிஎஸ்டி வரிகளை இரண்டு அடுக்குகளாக ( 5%,18%) குறைத்திருக்கிறது.
பேக்கேஜ் செய்யப்பட்ட பன்னீர், பிட்சா ரொட்டி, காக்கரா, சப்பாத்தி மற்றும் ரொட்டி, UHT பால் போன்றவற்றுக்கு இனி GST இல்லை.
சிறியரக இருசக்கர வாகனங்களுக்கான வரி 18%, 350சிசி மற்றும் மேற்பட்ட திறன் கொண்ட பைக்குகளுக்கு 40% ஜிஎஸ்டி. ஷாம்பு, பற்பசை, சோப்பு, போன்றவை 18% மற்றும் 12% லிருந்து 5%ஆக குறைக்கப்பட்டுள்ளது.
பான்மசாலா, சிகரெட், குட்கா, ஜர்தா, கார்பனேட்டட்குளிர்பானங்கள், சோடா போன்றவற்றுக்கு 40%.
மருத்துவக் காப்பீடு மற்றும் கல்வி சார்ந்த பொருட்களுக்கு முழு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
முக்கியமாக தனிநபர் காப்பீடு, மருத்துவக்காப்பீடு, உயிர்காக்கும் மருந்துகள், புற்றுநோய், அரியவகை நோய் மற்றும் நாள்பட்டநோய்களுக்கான மருந்துகளுக்கு ஜிஎஸ்டி வரியிலிருந்து முற்றிலும் விலக்குஅளிக்கப்பட்டுள்ளது.
சென்னை அடையார் பகுதியில் வசிக்கும் ஐ.டி. ஊழியர் கார்த்திக் (35) “முந்தைய GST விகிதங்களில் மளிகைப் பொருட்கள் வாங்கும்போது கூட வரி அதிகம் கட்ட வேண்டியிருந்தது. இப்போது மாதத்திற்கு குறைந்தது ₹1,000 வரை சேமிப்பு கிடைக்கும் என்று நினைக்கிறேன்.” என கூறுகிறார்.
பொருளாதார வல்லுநர்கள் பார்வையில், இது பணவீக்கம் குறைக்கவும், நுகர்வோர் செலவை ஊக்குவிக்கவும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கும் சாதகமானதாகவும் ஏற்றுமதி முறையை எளிதாக்கவும் உதவும் என்கிறார்கள்.
எதிர்க்கட்சிகள் இந்த நடவடிக்கையை “தாமதமாக வந்த செயல் ” எனக் குற்றம் சாட்டுகின்றன.
அதே சமயம் ஜிஎஸ்டி கவுன்சில் என்பது அனைத்துக் கட்சிஅனைத்து மாநில முதல்வர்கள் கொண்ட குழு.
அவர்கள் ஒப்புதல்தந்த பிறகு தான் நிதி அமைச்சகம் இதை வெளியிடுகிறது .
அங்கு தலையாட்டிவிட்டுவெளியே வந்து விமர்சனம் செய்தால் அது அரசியல் ஆகத்தான் பார்க்கவேண்டும்.
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர் சந்திப்பில் “ஜிஎஸ்டி சீர்திருத்தம் மூலம் நுகர்வோருக்கு ₹1.5 லட்சம்கோடி அளவிற்கு வரிச் சுமை குறையும். இது இந்திய பொருளாதார வளர்ச்சியைத் தூண்டும்.” என்றார்.
ஆனால் பல மாநிலங்கள், வரி குறைப்பால் பெரிய அளவில் தங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் என அஞ்சுகின்றன.
இதை வெளிப்படையாகவே தெலுங்கானா நிதி அமைச்சர் பாட்டி விக்ரமார்கா “வருடத்திற்கு ₹7,000 கோடி இழப்பு ஏற்படும். மத்தியரசு பல வருடங்களுக்கு இழப்பீடு தர வேண்டும்.” என எச்சரிக்கிறார்.
ஏற்கனவே ஜிஎஸ்டி வரிவசூல் முறைகேடு வேறு உள்ளது. இதை மத்திய நிதிஅமைச்சகமே ஒப்புக்கொள்கிறது. ஆனால் என்ன நடவடிக்கை எடுத்தார்கள் என்பது தான் தெரியவில்லை.
நிதிவல்லுநர்கள், இந்த இழப்பை ஈடு கட்ட முடியும் என்கிறார்கள். உதாரணமாக மத்தியரசுக்கு இதனால் ஆண்டுக்கு சுமார் ₹1.1 லட்சம் கோடி இழப்பு (GDP-வின் 0.3%) வரும். ஆனாலும் இது கட்டுப்படுத்தக்கூடியது என கூறுகிறார்கள்.
ஆனால் சதவீத அடிப்படையில் மாநிலங்களுக்கே அதிக இழப்பு. ஏன் என்றால் மத்திய அரசுக்கு இன்னும் வருமான வரி , சுங்கவரி , கார்ப்பரேட் வரி போன்ற பெரிய வருவாய் ஆதாரங்கள் உள்ளன.
மாநிலங்களுக்கு அப்படிப்பட்ட தனி வருவாய் ஆதாரங்கள் மிகக் குறைவு. ஜிஎஸ்டியில் அவர்களின் 50% பங்கு தான்.
உதாரணமாக தமிழ்நாட்டின் (2024-25 நிதியாண்டு) மொத்த வருவாய் ரூ3.2 லட்சம் கோடி.
அதில் ஜிஎஸ்டி பங்கு 40% (சுமார் ₹1.25 லட்சம் கோடி) மீதம் டாஸ்மாக் வரி, பத்திரப்பதிவு, மாநில சேவை கட்டணம் போன்றவை.
ஜிஎஸ்டி குறைப்பால் தமிழ்நாட்டின் இழப்பு மொத்தமாக 10–12%. அதன்படி தமிழ்நாடு ஆண்டுக்கு குத்துமதிப்பாக ரூ12,000–13,000 கோடி வரை இழக்கும்.
நகராட்சிகளுக்கு ஜிஎஸ்டி குறைவால் மத்திய/மாநில நிதி ஒதுக்கீடு குறையும். தமிழக அரசின் நலத்திட்டங்களான மருத்துவக் காப்பீடு, உணவுப் பாதுகாப்பு திட்டம், போக்குவரத்து மானியம் ஆகியவற்றுக்கு அழுத்தம் வரும்.
மத்தியரசு இழப்பீடு தரவில்லை என்றால், மாநிலரசு சொத்துவரி, பட்டா வரி, சேவை கட்டணம், எரிபொருள் செஸ் போன்றவற்றை உயர்த்தும் நிலை வரும்.
மத்தியரசு இழப்பீடு (50%) வழங்கும் பட்சத்தில் ( இதுவே கொடுப்பார்களா என்பது சந்தேகமே!) ₹6,250 கோடி கிடைத்தாலும் தமிழகத்தின் நிதி நிலைமை அடி வாங்க தான் செய்யும்.
அந்த அடியை, மாநிலவரிகளை ஏற்றுவதன் மூலம் மீண்டும் மக்கள் தலையிலேயே சுமத்தி விடுவார்களோ என அச்சம் ஏற்படுகிறது.
அதே சமயம் பாஜக மற்றும் எதிர்க்கட்சி மாநிலங்கள் தற்சமயம் திடீரெனஇலவசங்களில் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டது. இதற்கானநிதியையும் மத்திய அரசிடம் எதிர்பார்ப்பது நியாயமல்ல.
பாஜக மத்தியில் ஆட்சியமைத்த பிறகு 2017-2019 காலக்கட்டத்தில் மக்கள் உண்மையிலேயே அதிக ஜிஎஸ்டியால் சுமைப்பட்டனர்.
2019-2021 இடையே சில குறைப்புகள் வந்தாலும், அன்றாடப் பொருட்களில் விலை குறைவாகவில்லை.
கடந்த எட்டு வருடங்களில் மக்கள் அதிக விலை கொடுத்து துன்பப்பட்டனர்.
வியாபாரிகள், தொழிலதிபர்கள் பலர் தங்கள் தொழில்களை இழுத்து மூடினர்.
பலருக்கு கடன் சுமை ஏறியது. கோடிக்கணக்கான இந்தியகுடும்பங்கள் தாங்கள் வாழ்நாள் முழுவதும் கஷ்டத்தோடு கஷ்டமாக தவணை கட்டிவந்த மருத்துவ காப்பீடுகளின் மருத்துவச் செலவுகளிலும், உயிர்காக்கும் மருந்துகளுக்கும் கூட அநியாயமாக அதிக ஜிஎஸ்டி செலுத்த வேண்டியிருந்தது.
இப்போதைய சீர்திருத்தம் மக்கள் சந்தித்த பணகஷ்டத்தை மன உளைச்சலை முழுமையாக ஈடு செய்யாது.
ஆனால், குறைந்தபட்சம் இனிமேல் அன்றாட வாழ்வில் வரி சுமை குறைந்து ஒரு சிறு நிம்மதி கிடைக்கும்.
நடுத்தரக் குடும்பங்கள் நேரடியாக நன்மை பெறும். ஆனால், மாநிலங்கள் வருவாய் இழப்பை எப்படி சமாளிக்கப்போகிறது என்பதே எதிர்காலத்தில் மிகப்பெரிய சோதனை.
மாநிலங்கள் தங்களின் வருவாய் இழப்பை மக்கள் மீதே திருப்பி விடாமல் சமாளித்தால், ஜிஎஸ்டி குறைப்பு நிச்சயமாக மக்களுக்கான தீபாவளி பரிசே என்று சொல்லலாம்.
Leave a comment
Upload