“மேகவெடிப்பு” என்று சொல்வதற்குப் பொருள், ஒரு மணி நேரத்தில் 10 செ.மீ (100 மிமீ)க்கும் அதிக மழை பெய்வது.
இது இமயமலை போன்ற மலைப்பகுதிகளிலும் நடக்கும்.
சில சமயங்களில் சென்னை போன்ற கடற்கரை நகரங்களிலும் நிகழலாம்.
2025 ஆகஸ்ட் 30 இரவு, மணலி பகுதியில் ஒரே மணி நேரத்தில் 10 செ.மீக்கும் அதிகமான மழை கொட்டியது.
சென்னையின் மணலி, கொரட்டூர், வடபழனி, திருவொற்றியூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டியது.
அதுவும் மணலியில் அன்றைய மழை “மேகவெடிப்பு அளவுக்கு” என்று சொல்லப்படுகிறது.
மதியம் மற்றும் மாலையில் கடலிலிருந்து வரும் குளிர் காற்று, நிலத்திலிருந்து வரும் சூடான காற்றுடன் மோதும்.
அந்த மோதலில் மேகங்கள் வேகமாக மேல் நோக்கி எழுந்து, வலுவான மின்னலுடன் கூடிய கருமேகமாக மாறி ஒரே இடத்தில் தொடர்ந்து மழை கொட்டிக்கொண்டே இருக்கும்.
ஒரு மணி நேரத்தில் 10 செ.மீக்கும் அதிக மழை பெய்ததால் மணலியில் அன்று பெய்த மழை “மேகவெடிப்பு” என்கிறார்கள்.
இது ஒரு பெரிய விஷயமா? என கேட்டால் 2015 சமயம் சென்னையை மூழ்கடித்த மழை மேகவெடிப்பு காரணமாக பெய்த மழையாகும்.
சென்னையில் 2015 வெள்ளம் போலவே, 2021லுமே சில பகுதிகளில் 1 மணி நேரத்தில் 10 செ.மீக்கு அதிகமான மழை பெய்தது.
அதனால், இப்போது பெய்த மழை முதன்முறையான மேகவெடிப்பு அல்ல.
பருவநிலை மாற்றத்தால் திடீர் அதிகனமழை நிகழ்வுகள் நகரங்களில் அதிகரித்து கொண்டே போகின்றன.
அதனால், சென்னையில் மீண்டும் மேகவெடிப்பு வர வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள்.
சுவிட்சர்லாந்தில் சில வாரங்களுக்கு முன் (2025 ஜூலை), ஆல்ப்ஸ் மலைப் பகுதியில் கனமழை, பனிப்பாறை உடைப்புக் காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டு ஒரு கிராமமே மண்ணில் புதைந்தது.
ஆனால் மக்களை முன்கூட்டியே வெளியேற்றியதால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது.
அங்கு அரசு எங்கெல்லாம் நிலச்சரிவு அபாயம் உள்ளதோ அங்கெல்லாம் புவிவியல் கண்காணிப்பு மையம் மூலம் (Geological Monitoring Systems) மண்ணின் ஈரப்பதம், பாறைகளின் நெகிழ்ச்சி, மழை அளவு அனைத்தையும் நேரடி சென்சார்கள் மூலம் கண்காணிக்கிறார்கள்.
அதனால் மனித உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.
டாப்ளர்வானிலை ரேடார் (Doppler Weather Radar) மற்றும் எண்ணியல் வானிலைமுன்கணிப்பு மாதிரிகள் (Numerical Weather Prediction (NWP) Models) ஆகியவை மூலம் ஒரு பகுதியில் 3–6 மணி நேரத்திற்கு முன்பே அதிதீவிர மழை, பனிச்சரிவு வரக்கூடும் எனக் கணித்து அதற்கேற்ப பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கிறார்கள்.
நினைத்துப்பாருங்கள்! சமீபத்தில் உத்தரகண்ட் மாநிலத்தின் உத்தரகாஷியில் கனமழையும், பனிப்பாறை சரிவும், அதைத்தொடர்ந்து மிகப்பெரிய அளவில் வெள்ளமும் மண்சரிவும் ஒரு ஹாலிவுட் படத்தின் காட்சிகள் போல தாராலி கிராமம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை ஆற்றங்கரையோர கட்டிடங்களையும், நூற்றுக்கணக்கான மனிதர்களை உயிரோடும் மண்ணில் புதைத்த காட்சிகளை கண்டு அதிர்ந்தோம்.
இப்படி ஒரு கனமழையும் பனிப்பாறை உடைப்பு, மண்சரிவும் வரப்போகிறது என்பதை ஸ்விஸ் அரசு போல் இந்திய வானிலை மையம் முன்னமே கணித்திருந்தால் அந்த மக்களை உயிரோடு காப்பாற்றி இருக்கலாம் .
கேரளா வயநாட்டிலும் இதே தான் நிகழ்ந்தது.
இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) மழை கணிப்புகளை அளிக்கிறது.
ஆனால் மேகவெடிப்பு, பனிப்பாறை சரிவு போன்ற மிக விரைவான நிகழ்வுகளை முன்கூட்டியே கண்டறிவதில் நன்றாகவே கோட்டை விடுகிறார்கள்.
2025ஆகஸ்ட்30 இரவன்று சென்னையில் மேகவெடிப்பு அளவு மழை வரும் என வானிலை மையம் அறிவிக்கவில்லை.
சாதாரணமாக “மழைப்பெய்யும்” என்று தான் அறிவித்திருந்தார்கள்.
மணலியில் மழை பெய்த பின் தான் அது மேகவெடிப்பு என கண்டுப்பிடிக்கப்பட்டது.
பருவநிலை மாற்றத்தால் வரும்காலங்களில் இது போன்ற மேகவெடிப்புகள் அடிக்கடி ஏற்படலாம்.
பல உயிர்களை பலி கொண்ட சென்னையை மூழ்கடித்த டிசம்பர் 2015 வெள்ளமும் மேகவெடிப்பையும் (ஒரே நாளில் 345 மிமீ மழை) மறக்க இயலாது.
இந்தியாவின் இமாலயப்பகுதிகள் மேகவெடிப்பு, கனமழை, பனிப்பாறை சரிவு போன்ற ஆபத்துகளில் உள்ளன.
முன்னேறிய நாடுகளில் உள்ளது போன்று நம் வானியல் மையமும் புது தொழில்நுட்பங்களை விரிவாக்கி தயார் நிலையில் வைத்திருந்தால் நல்லது.
எல்லாம் அழிந்து உயிர்களும் போனப்பின் இழப்பீடுகள் கொடுப்பதில் என்ன பயன்?!
Leave a comment
Upload