சந்திர கிரகணம் என்பது சூரியனுக்கும் நிலாவுக்கும் நடுவே பூமி வருவது என்பதை பள்ளிப்பாடங்களிலேயே படித்திருக்கிறோம்.
ஆனால் இந்த ரத்த நிலா என்பது அரிது. இந்த நிகழ்வில் பூமியின் நிழல் நிலாவின் மேல் முழுவதும் மூடுவதால் நிலா ரத்தம் போன்ற நிறத்திற்கு மாறுகிறது.
(இன்று) செப்டம்பர் 7 இரவு நடக்கும் இந்த நிகழ்வை ஆசியா, ஆஸ்திரேலியா, கிழக்கு ஆப்ரிக்கா மற்றும் ஐரோப்பிய பகுதிகளில் காணலாம்.
பூமியின் நிழல் முழுவதுமாக நிலாவின் மேல் விழும் சமயம், பூமியின் வளிமண்டலம் வழியாகச் செல்லும் சூரிய ஒளியின் அதிக அலைவரிசை கொண்ட சிகப்பும், இளஞ்சிவப்பும் நிலாவின் மேல் படருவதால் ரத்த நிறத்திற்கு நிலா மாறுகிறது.
இந்த சந்திர கிரகணத்தை வெறும் கண்களாலேயே பார்க்கலாம். சூரியகிரகணம் போல் ஆபத்தில்லை.
பழங்காலத்தில் ரத்த நிலா என்பது பயங்கர திகிலையும், கெடுதல் நடக்க போகிறது என்கிற கொடும் சகுனத்தையும் , சாபத்திற்கு அடையாளமாக காட்டப்பட்டது.
பாபிலோனியர் ரத்த நிலா என்பது அரசருக்கு அபாயம் என்று கருதினர்.
சில நேரங்களில் உண்மையான மன்னனை மறைத்து, ஒரு “நிழல் மன்னனை” தற்காலிகமாக அமர்த்துவார்கள். கிரகணம் முடிந்ததும் அந்த “நிழல் மன்னன்” கொல்லப்பட்டு, மீண்டும் உண்மையான மன்னன் “ இனி ஆபத்தில்லை” என பெருமூச்சு விட்டு பத்திரமாக சிம்மாசனத்தில் உட்காருவார்.
சீனர்களோ சிவப்பு நிலா என்பது “நாகம் நிலாவை விழுங்குகிறது” என்று அஞ்சிக்கொண்டிருந்தார்கள்.
சீனமக்களும் தாளம் அடித்து சப்தம் எழுப்பி அந்த நாகத்தை(!) விரட்டுவார்கள்.
அமெரிக்காவின் சிகப்பிந்தியர்கள் ரத்த நிலாவை “இறந்தவர்களின் ஆன்மா பூமியைத் தாக்குகிறது” என்று நம்பி நடுங்கினர்.
கிரகணத்திற்குப் பிறகு சுத்திகரிப்பு வழிபாடுகள் நடத்தினர். சில சுவாரசிய சரித்திர சம்பவங்களும் உண்டு.
கிரிஸ்டோபர் கொலம்பஸ் (1504) ஜமைக்காவில் சிக்கியிருந்தபோது அங்குள்ள பழங்குடிகள் அவருக்குச் சாப்பாடு கொடுக்க மறுத்துவிட்டனர்.
அப்போது ஒரு சந்திர கிரகணம் (ரத்த நிலா) நிகழப்போகிறது என்பதை அறிந்திருந்தார்.
“என்னை பட்டினிப்போட்டால் நிலா சிவப்பாக மாறி, கடவுள் உங்களை தண்டிப்பார்” என்று எச்சரித்தார்.
உண்மையில் நிலா ரத்தமாக மாறியதும் பழங்குடிகள் பயந்து, அவருக்கு உணவு கொடுக்கத் தொடங்கினர்.
மங்கோலியர் குப்லாய் கான் (13ஆம் நூற்றாண்டு ) ரத்த நிலா வந்த நாட்களில் “வானம் எச்சரிக்கிறது, போர் தோல்வியடையும்” என போரைத் தவிர்க்க உத்தரவு கொடுத்தார்.
பைபிளில் “ரத்த நிலா கடைசி காலத்தின் அறிகுறி” என சில பகுதிகளில் கூறப்பட்டுள்ளன.
யூத வரலாற்றில் (66–70 கி.பி.), ஜெருசலேம் அழிந்ததற்கு முன் தொடர் ரத்தநிலா கிரகணங்கள் நடந்ததாக பதிவுகள் உள்ளன.
நம் பண்டைய காலத்தில் கிபி 4ஆம் நூற்றாண்டில் குப்த பேரரசின் சமுத்திரகுப்தர் காலத்திய அலஹாபாத் தூண் கல்வெட்டு (Prayag Prashasti) அவரது வெற்றிகளை வர்ணிக்கிறது.
அதில் “கிரகணங்களை முன்னறிந்து தீர்மானம் எடுக்கும் ஆற்றல் கொண்டவர்” என்று சொல்லப்பட்டிருக்கிறது. அரசருக்கும் வானியல் அறிவு என்பது அப்போது அரசியல் வலிமையாகக் கருதப்பட்டது.
இந்திய ஜோதிடர்கள் (ஆர்யபட்டர் போன்றோர்) கிரகணத்தை அறிவியல் முறையில் விளக்கினாலும், மக்கள் நம்பிக்கையில் ரத்த நிலா என்பது அசுபமாக பார்க்கப்பட்டது.
அரசர்களின் மரணம், யுத்த தோல்வி, இயற்கை பேரழிவு ஆகியவற்றோடு தொடர்புபடுத்தப்பட்டது.
குலோத்துங்க சோழர் (கிபி 12ஆம் நூற்றாண்டு ) கால கல்வெட்டுகளில் சில இடங்களில் சந்திர கிரகணம் நிகழ்ந்த நாளில் தானங்கள் வழங்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளன.
“ரத்த நிலா / கிரகணம் அசுபம், அதை சமப்படுத்த தானம் அவசியம்” என்ற நம்பிக்கை இருந்தது.
இந்த அசுப நம்பிக்கை தில்லி சுல்தான்களையும் விட்டுவைக்கவில்லை.
தில்லி சுல்தான் மொஹம்மது பின் துக்ளக், சந்திர கிரகணங்களை மிகவும் தீவிரமாக எடுத்துக் கொண்டவரில் ஒருவர்.
அத்தகைய இரவுகளில் அரண்மனை முழுவதும் தீபம் ஏற்றி, “அசுபத்தை” தடுக்கப் பிரார்த்தனை நடத்தினார்.
அக்பரும் (கிபி 16ஆம் நூற்றாண்டு ) கிரகணம் நேரத்தில் தானம், சிறைவாசிகளை விடுதலை போன்ற புண்ணியங்கள் செய்தார் என அக்பரின் அரண்மனை வரலாற்றாசிரியர் அபுல் ஃபஜல், ஆயின்-இ-அக்பரியில் குறிப்பிடுகிறார்.
மராத்தியர்களோ சந்திர கிரகண இரவுகளில், தங்கள் படைகள் யுத்தத்தைத் தொடங்கவோ, முடிவெடுக்கவோ என எதுவுமே செய்யாமல் காத்திருக்கிறார்கள்.
ஏனெனில் “அந்த இரவில் தெய்வத்திற்கு சக்தி இல்லை ” என்ற நம்பிக்கை. இந்நிகழ்வுகளை சில ஆங்கிலேய வரலாற்று ஆவணங்கள் குறிப்பிடுகின்றன.
அறிவியலறிவு வளர்ந்ததால் ரத்த நிலா என்பது வெறும் வானியல் நிகழ்வு தான் என்பதை மனிதகுலம் உணர்ந்து வருகிறது.
ஆனால் மனித வரலாற்றில் அது பயம், அதிசயம், அரசியல் தீர்மானங்கள், மதநம்பிக்கைகள் அனைத்துடனும் தொடர்பு கொண்டு இருந்ததை மறுக்க இயலாது.
இப்போது வரும் ரத்தநிலா செப்டம்பர் 7, 2025 அன்று, இரவு 8:58 மணிக்குத்தொடங்கி செப்டம்பர் 8, 2025 அன்று அதிகாலை 2:25 மணி வரை கிரகணம்நீடிக்கும்.
தெளிவான கிரகணம் சுமார் 3 மணி நேரம் 28 நிமிடங்கள் நீடிக்கும்.
வானியல் ஆர்வலராக இருந்தால் நகரத்தின் வெளிச்ச பகுதிகளை தாண்டி வெளியே வானம் தெளிவாக தோன்றும் இடத்திற்கு புகைப்படகருவியுடன் சென்று பார்க்கலாம்.
இல்லையென்றால் வீட்டு மொட்டை மாடியில் கூட நின்று ரசிக்கலாம்.
அடுத்த வருடமும் ரத்த நிலா வருகிறது. இருந்தாலும் இம்முறை இந்தியாவில் மிகத்தெளிவாக காட்சியளிக்கிறது. எனவே இதை தவறவிடாதீர்கள்.
நன்றி : சன் டிவி
Leave a comment
Upload