தலைப்பில் இருக்கும் அந்நியோன்னிய ஒற்றுமையைப் பாராட்டாமல் இருக்கவே முடியாது.
இது மட்டுமா, கிட்டத்தட்ட எட்டு லட்சத்து எண்பதினாயிரம் வருடங்கள் ஆகியும் இராமாயணத்துக்குத் தான் அப்படியொரு காந்த ஈர்ப்பு.
பருகப் பருக தெவிட்டாத காதை. தன் பெற்ற இன்பம் பெறட்டும் இவ்வையகம் என்று இன்புற்றவர் பகிரும் விருந்து இது.
24.08.2025 மைலாப்பூர் பாரதீய வித்யா பவனில், பவன் சார்பில் திருமதி. மைதிலி சுவாமிநாதன் அவர்களால் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்ட இராமாயணத்தை பதிவிட்டு வெளியிட்டுள்ளார்கள்.
1981ல் பவன் சார்பாக மறைந்த திருமதி கமலா சுப்ரமணியன் அவர்களால் சமஸ்கிருதத்தின் மூல நூலிலிருந்து ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்ட இராமாயணம் வெளியாகியிருந்தது.
மறைந்த திருமதி கமலா சுப்ரமணியனின் தந்தை வழி கொள்ளுப்பாட்டியும், தனது அட்வகேட் கணவர் சுவாமினாதன் அவர்களின் தந்தை வழிக் கொள்ளுப் பாட்டனாரும் அண்ணா தங்கை உறவு முறையாகும் என்று கூறுகிறர் மைதிலி சுவாமினாதன்.
அந்த ஆழமான உறவுமுறையில் கிடைக்கப்பெற்ற சீதனமான ஆங்கில பதிப்பை திருமதி. மைதிலி சுவாமினாதனும் அவரது அட்வகேட் கணவர் சுவாமினாதனும் கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேலாக பக்தி பொக்கிஷமாகப் பாதுகாத்து ஒரு நித்திய கடமையாக படித்து வந்திருக்கின்றனர். சோர்வும் தளர்வும் ஏற்படும் சமயங்களில் இந்த ஆதி காவியம் அவர்களுக்கு நிம்மதியையும், தைரியத்தையும், மனத் தெளிவையும் கொடுக்கிறது என்கிறார் திருமதி. மைதிலி ஸ்வாமினாதன் தனது முன்னுரையில்.
வட மொழி அறியாதவர்களுக்கு கமலா சுப்ரமணியனின் ஆங்கில மொழி இராமாயணம் ஒரு வரப்பிரசாதம் என்று கூறும் இவர், ஆங்கிலமும் வட மொழியறியாதவர்க்கு பயன்படும் விதத்தில் அமரர் கமலா சுப்ரமணியனின் ஸ்ரீமத் பாகவதத்தை 2022ல் தமிழில் மொழியாக்கம் செய்ய அதை பவன் வெளியிட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து இந்த ஆதி காவியத்தை எழுத முனைந்துள்ளார். அது இப்போது வெளியாகியும் விட்டது.
தற்போது இல்லத்தரசியாய் இருக்கும் திருமதி. மைதிலி ஸ்வாமினாதன் ஆசிரியராக பணியாற்றியிருக்கிறார்.
இந்த தமிழ் பதிப்பை தி ஹிந்துவின் ரவி வெளியிட முதல் பதிப்பை தமிழ் ஆர்வலர் திருமதி.டாக்டர் சுதா சேஷைய்யன் பெற்றுக்கொண்டு அந்த நூலைப் பற்றியும் பேசினார்.
இது வெறும் மொழிபெயர்ப்பல்ல, ஆங்கில நூலின் மூலக் கருத்துகளை உள்வாங்கி, முழு அர்ப்பணிப்புடன் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்ட நூல், மூல நூலில் காணப்பட்ட பல நுட்பமான தருணங்களை சிறிதும் பிறழாமல் தமிழாக்கத்தில் வெளிக்கொணர்ந்த தமிழாக்க ஆசிரியரின் கருத்தாழத்தை மனமுவந்து பாராட்டினார் சுதா சேஷய்யன்.
ஆன்மீக சொற்பொழிவு, மருத்துவர், தமிழ்மொழி இலக்கியவாதி போன்ற பன்முகங்களை கொண்ட திருமதி சுதா சேஷய்யனின் பாராட்டு ஆசிரியருக்கு ஒரு மிகப்பெரிய ஊக்குவிப்பு என்றே சொல்ல வேண்டும்.
திருமதி மைதிலி சுவாமிநாதன், மூல நூல் ஆசிரியரின் மருமகளை மேடைக்கழைத்து போற்றியது, தன் முயற்சியில் பெரிதும் துணை நின்ற கணவர் சுவாமிநாதன் மற்றும் தனது தாயாரின் உந்துதல் ஆகியவற்றை குறிப்பிட்டு மற்றும் பலவகையில் உதவியவர்களையும் கூறி பாராட்டியது அவரது நன்றியுணர்வை வெளிக்காட்டியது.
Leave a comment
Upload