விடைகொடு எங்கள் காடே !
இந்துமதி கணேஷ்
நின்றுக்கொண்டே தண்ணீரைப் பார்த்துக் கொண்டிருப்பதன் மூலம் நீங்கள் கடலைக் கடக்க இயலாது. You can’t cross the sea merely by standing and staring at the water- தாகூர்.
எங்கள் காடறிதல் பயணம் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டது, ஒரு பார்வை கோபுரத்தில் ஏறி பார்த்தால் மொத்த சின்னாறு வனப்பகுதியும் பார்வைக்கு புலப்படும் என்று கூறினார்கள் அந்த பார்வை கோபுரத்தை நோக்கி தான் நடந்து கொண்டிருந்தோம். காலையில் இருந்து சின்னாறு வனப்பகுதியில் நடந்ததும், சின்னாற்றில் ஆசை தீர குளித்ததும் நன்றாக பசியை தூண்டி விட்டிருந்தது, களைப்பும் சற்றே சேர்ந்து கொள்ள எங்காவது ஓய்வெடுத்தால் நன்றாக இருக்குமென்று தோன்றியது. ஆனால் இந்த ஒரு பார்வை கோபுரத்தின் வழி பார்த்துவிட்டால் நாம் வனத்துறை அலுவலகத்திற்கு போய் விடலாம் அங்கு உணவுண்ட பின் ஊருக்கு போகும் ரயிலை பிடிக்க நேரம் சரியாக இருக்குமென்றார்கள்.
அவ்வளவு நேரம் நாங்கள் ஆற்றோரம் நடந்ததால் அதன் குளுமை தெரிந்தது, தற்போது நாங்கள் போய்க் கொண்டிருக்கும் வனப்பகுதியில் கள்ளிச்செடிகள் நிறைந்திருந்தன. மதிய பொழுது என்பதால் வெயில் உக்கிரமாகவே இருந்தது. தேக்கன் களைப்பே இல்லாமல் முன்னால் நடந்து கொண்டிருந்தார், அவரை எட்டி பிடிக்கவில்லை என்றால் முக்கியமான ஏதாவது தகவல்களை தவறவிட்டு விடுவோமோ என்ற உத்வேகத்துடன் வேகமாக நடந்து அவரை அடைந்தோம். வழிநெடுக உள்ள கள்ளிச் செடிகளை பார்வையிட்டபடியே வந்தோம் ஒரு இடத்தில் எங்களை நிறுத்தி பேசத் தொடங்கினார். "இது என்ன செடி என்று தெரிகிறதா ?" என்றார், "ஓ தெரியுதே ஐயா, இது கள்ளிச் செடி" என்றோம். இந்த கள்ளிச் செடிகள் வறண்ட நிலத்தில் தங்களை தக்கவைத்துக் கொள்ள பல நுட்பங்களை செய்கின்றன. இதன் தண்டுப் பகுதி நீரை சேமிக்க உதவுகிறது, இலைகளை முட்களாக மாற்றிக் கொண்டு தங்களை காப்பாற்றிக் கொள்கின்றன இந்த செடிகள்" என்றதும் எங்களுக்கு அது குறித்து அறியும் ஆர்வம் மிகுந்தது.
ஒடிந்து கிடந்த ஒரு கள்ளிச் செடியை கையில் எடுத்து அதை காட்டினார், "நன்றாக கவனியுங்கள் இதில் இரண்டு முட்கள் இருக்கிறது அல்லவா, ஒன்று பெரியது மற்றொன்று சிறியது. இரண்டும் சேர்ந்து தான் கள்ளிச்செடியை காப்பாற்றுகின்றன. மாலை வேளையில் காற்றில் உள்ள ஈரப்பசையை இந்த முட்கள் உறிஞ்சி நீராக மாற்றி வேர்களுக்கு அனுப்பி விடுகிறது, மேலும் முட்களை ஏந்தியுள்ள வட்டத் தட்டைகளில் மேல் ஒருவகையான மெழுகை பூசி கள்ளிகளை வெக்கையிலிருந்து காக்கிறது. இத்தகைய வாழ்வு நுட்பம் இல்லாது போனால் கள்ளிகள் வாழவே முடியாது" என்றார் "ஐயா, இந்த கள்ளிப் பழங்களை நாம் சாப்பிடலாமா ?" என்று கேட்டார் ஒரு நண்பர். "அதன் நடுவிலும் ஒரு முள் இருக்கும் கவனமாக சாப்பிடுங்கள்" என்று கூறினார், நாங்கள் அந்த பழங்களை சாப்பிடவில்லை ஒன்று இரண்டு தான் இருந்தது என்பதால் தேக்கனிடம் கவனமாக இருந்தோம்.
அவர் தொடர்ந்தார், "இந்த கள்ளிச் செடிகளை விரும்பி உண்ணும் ஓரிட வாழ்வியான நட்சத்திர ஆமைகளின் வாழ்விடம் சின்னாறு வனப்பகுதி தான், கிட்டதட்ட 500க்கும் மேற்பட்ட ஆமைகள் இங்கு வாழ்கின்றன, அவைகள் விரும்பி உண்பது இந்த செடிகளை தான்" என்றதும், ஒரு ஆமையையாவது செடியின் கீழ் பார்த்து விட மாட்டோமா என்று தேடினோம் எங்கள் கண்களுக்கு அன்று ஒன்றும் தட்டுபடவில்லை. எனினும் ஆமை கடித்து சுவைத்த கள்ளிச் செடியை காட்டினார் தேக்கன். முட்கள் இல்லாத பகுதியை பார்த்து பொறுமையாய் உண்டிருந்தது ஆச்சர்யமாக இருந்தது. "கள்ளிச் சதையை சாப்பிடும் ஆமை கள்ளிப் பாலை உண்டு விடாதா ? கள்ளிப்பாலை விஷம் என்கிறார்களே ?" என்று நண்பர் ஒருவர் கேள்வி எழுப்ப, தேக்கன் "இதுவரை கள்ளிப்பாலை சாப்பிட்டு எந்த ஆமையும் இறந்ததாக குறிப்புகள் இல்லை, கள்ளிப்பாலை குறித்து மேலும் அதிகம் ஆராய்ந்தால் மட்டுமே அதன் உண்மை தன்மைகள் உங்களுக்கு தெரியவரும்" என்றார்.
நாங்கள் தொடர்ந்து நடந்து பார்வை கோபுரத்தை அடைந்தோம், மேலிருந்து பார்க்கும் போது நாங்கள் இரண்டு நாட்களில் பார்த்த காட்டின் பல பகுதிகள் தெரிந்தது. ஆற்றல் பிரவீன் குமார் அவர்கள் அந்த இடங்களை எல்லாம் எங்களுக்கு சுட்டிக் காட்டினார். சோலைக் காடுகள், சர்க்கரை ஆலை இருந்த மறையூர் பகுதி, அருவிகள் என்று தொலைவில் இருந்து அனைத்தையும் பார்த்தோம். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பறவைகளை தவிர வேறு எந்த விலங்குகளும் தென்படவில்லை, எனினும் அங்கிருந்து மலைகளை பார்க்க தெவிட்டவில்லை, அங்கேயே நின்று சில ஒளிப்படங்களை எடுத்துவிட்டு கீழிறங்கி வந்தோம்.
மணி இரண்டை நெருங்கி இருந்ததால் அனைவரும் பசியில் இருந்தோம், வனத்துறை அலுவலகத்திற்கு போனதும் எங்களுக்கான உணவுகள் தயாராய் காத்திருந்தது. சாம்பார், ரசல், பொரியல் என்று ஒரு பிடி பிடித்துவிட்டு தான் தலை நிமிர்ந்தோம். அடுத்து விடைபெற வேண்டுமென்பதே மனதை கனக்கச் செய்தது. எங்களுடைய உடமைகளை எடுத்துக் கொண்டு இரண்டு நாட்களில் ஒன்றாய் பழகிய சிநேகங்களிடம் விடைபெற்றுக் கொண்டு தயாரானோம்.
ஆற்றல் பிரவீனும், சதாசிவம் ஐயாவும் பயணத்தில் ஏதாவது அசௌகரியங்கள் இருந்தால் கூறச் சொன்னார்கள். உண்மையில் மனம் மகிழ்ந்த பயணம் அது. எத்தனை கேள்விகள் கேட்டாலும் சலிக்காமல் பதில் சொன்னார் தேக்கன், எந்த அசௌகரியத்தை குறித்து சொன்னாலும் உடனே அதற்கு தீர்வு கண்டார் பிரவீன். இயந்திர வாழ்வில் சுழலும் சலிப்பை போக்கி, இயற்கை எங்கள் மனம் முழுவதும் புத்துணர்ச்சியை நிரப்பி அனுப்பி இருக்கிறது. யாரென்றே தெரியாத மனிதர்களுடன் இரண்டு நாட்கள் பழகி ஒன்றாய் பல இடங்களுக்கு சென்று வந்தது குழந்தைகளிடத்தில் பல புதிய புரிதல்களை கற்றுக் கொடுத்திருக்கிறது. இது அவர்கள் வாழ்வில் நல்ல ஒரு அனுபவ பாடம் தான். இந்த பயணத்தின் மூலம் சூழலியல் சார்ந்து நிறைய கற்றுக்கொண்டோம் என்று தேக்கனிடம் நெகிழ்வுடன் கூறி ஆசி பெற்று கிளம்பினோம். விடுமுறைக்கு ஆச்சி வீட்டிற்கு போய்விட்டு திரும்பி வர அடம் பிடிக்கும் குழந்தைகள் போல மனம் சிணுங்கியது, எனினும் திரும்பி ஊர் வந்து தானே ஆகவேண்டும்... கிளம்பினோம். மீண்டும் ஜீப்பில் ஏறி பயணித்து ரயில் நிலையம் வந்து சேர்ந்த போது ஒரு இருபது நிமிடங்களே மிச்சமிருந்தது. நல்லபடியாக ரயிலில் ஊர் திரும்பினோம்.
ஊர் திரும்பிய பிறகும் காட்டிலேயே இருக்கும் உணர்வு ஏற்பட்டது, ஒரு வாரத்திற்கு அந்த காட்டின் குரல் மனதிற்குள் ஒலித்துக் கொண்டே இருந்தது. பிறகு மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பினாலும் இன்றும் அந்த பயணத்தை நினைத்து பார்க்கும் போது மறையூர் வெல்லம் போல மனது தித்திக்கிறது. இந்த பயண அனுபவத்தை எழுத வாய்ப்பளித்த விகடகவிக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
பயணங்கள் முடிவதில்லை .....
Leave a comment
Upload