தொடர்கள்
கதை
கருப்பி - சத்யபாமா ஒப்பிலி

20250806074445987.jpeg

நன்றாக காலை நீட்டித் தலைகாணியில் தலையை வைத்து தூங்கிக் கொண்டிருந்த கருப்பியைப் பார்த்தான். வெள்ளை வெளேரென்று இருக்கும் அதுக்கு வேண்டுமென்றே தான் கருப்பி என்று பெயர் வைத்திருந்தான். கைக் கடிகாரம் மணி ஒன்பது என்றது. மெதுவாக எழுந்து பக்கத்தில் இருக்கும் தன் அறைக்குச் சென்றான். பீரோவிற்கு மேல் வைத்திருந்த தன் பையை எடுத்தான். அதனுள்ளே கசங்கிய ஒரு காகிதத்தை எடுத்து சற்று நீவி விட்டு பிறகு மடித்து சட்டை பையில் வைத்தான். ஜன்னல் வழியாக பார்த்த போது தெருவே வெறிச்சோடி இருந்தது . எங்கேயோ ஒரு ஜீப் வரும் சத்தம் கேட்க வேகமாக எழுந்து கருப்பி தூங்கிக்கொணடிருந்த இடத்துக்கு வந்தான். அதற்கும் சத்தம் கேட்டிருக்க வேண்டும். காது விரித்து முன்னங் கால்களைஒன்றின் மேல் ஒன்றை போட்டுக்கொண்டு நிமிர்ந்து அமர்ந்திருந்தது. ஜீப் கடந்துசென்றபின் இவனை திரும்பி பார்த்துவிட்டு மறுபடியும் படுத்துக் கொண்டது. உள்ளே சென்று வீட்டு சாவியை எடுத்துக் கொண்டான்.அதன் அருகே மாட்டி இருந்த கருப்பியின் கழுத்துக் கயிறும் எடுத்துக் கொண்டான்.கருப்பி வெடுக்கென்று எழுந்து அவன் அருகில் வந்து நின்று கொண்டது. அதன் கழுத்தில் கயிறை மாட்டி விட்டு மறு முனையை பிடித்துக் கொண்டு வெளியில் வந்து வீட்டுக் கதவை பூட்டினான்.

கருப்பியை பிடித்துக் கொண்டு நடந்தான். இரண்டு தெரு கடந்து தான் இருந்தது சுகாதாரக் கூடம். அதன் வாசலிலொரு ஐம்பது பேர் தன் தன் செல்ல பிராணிகளுடன் நின்று கொண்டிருந்தார்கள். இவனும் சேர்ந்து கொண்டான். உள்ளே சென்றவர்கள் தலையை குனிந்தபடியே வெறும் கையுடன் திரும்பினார்கள். கருப்பியை கையில் தூக்கிக் கொண்டான். கசங்கிய கடிதத்தை தடவிப் பார்த்துக் கொண்டான்.
அரசாங்கக் கடிதம். போர் வரப்போகிறது. உணவு பற்றாக்குறை வரப்போகிறது. செல்லப் பிராணிகளுக்கு இடம் இல்லை. ஒரு வாரத்தில் கிட்டத்தட்ட ஒரு லட்சத்திற்கு மேல் பிராணிகள் நீக்கப்பட்டிருக்கின்றன. கொல்ல பட்டிருக்கின்றன என்ற வார்த்தையை அவனால் யோசிக்ககூட முடிய வில்லை. அவன் முறை வந்ததும் கருப்பி திடீரென அவனை நோக்கி திரும்பி முகத்தை நக்கியது. அவர்களிடம் அதை கொடுத்துவிட்டு திரும்பி பார்க்காமல் நடந்தான். அவனை கூப்பிட்டு கழுத்து பட்டையையும், கயிறையும் கொடுத்தார்கள். கருப்பியின் வாசனையும் முடியும் நிறைந்திருந்தது. வாங்கி தன் கையிடுக்கில் வைத்துக் கொண்டான். கன்னத்தை தொட்டுப் பார்த்தான். கருப்பி நக்கிய இடம் காய்வதற்கு முன் வீட்டுக்கு ஓடிவிட வேண்டும் என்று நினைத்து ஓட ஆரம்பித்தான். வீடு வெகுதொலைவில் உள்ளது போல் தோன்றியது அவனுக்கு.