அக்காதலி பெற்றோரைப் பிரிந்துக் காதலனைத் தேடி வருகிறாள்.
காதலன் அப்பெண்ணை ஒரு காட்டு வழியில் அழைத்து வருகிறான். வரும் வழியில் அங்கு ஓங்கி நிற்கும் ஓமை மரத்தடியில் நிழலுக்காக நின்றனர்,
அப்பகுதியே அவளுக்கு அச்சமூட்டுவதாக அமைந்தது.
சில நாட்களில் திருமண பந்தத்தில் அவர்கள் இருவரும் இணைந்தனர்.
அதுவரை கவலைகள் இல்லாமல் இருந்த ஆண்மகனுக்குப் புதிய பொறுப்பு வந்தது. பொருள் தேடச் செல்ல வேண்டிய தேவை ஏற்பட்டது.
அக்காட்டுப் பாதை வழியே அவன் பயணம் மேற்கொள்ள வேண்டும.
இதை அறிந்ததும் அவள் மனைவி அந்தப் பயணத்துக்கு முட்டுக்கட்டை போடுகிறாள்.
" நாம் முன்பொரு முறை ஓமை மரத்தடியில் இருந்த போது , ஒரு ஆண்யானை பிளிறியதைக் கேட்டு, அதனுடைய பெண் யானை பயந்துப் புலம்பியதைக் கேட்டு நாம் கேட்டு அதிர்ந்தோம் அல்லவா ? அந்த நினைவு உமக்கு இருக்கிறதா? " என்று பயணத்தடை போடுகிறாள்.
அன்றைய காதலனின் கையைப் பற்றிக் கொண்டு வந்தவள் தான், இன்று கணவன் அவ்வழி செல்ல தடை செய்கிறாள்.
அன்றைய காதலி, இன்றைய மனைவி .
இந்தக் காலமாற்றத்தைப் பதிவு செய்யும் நற்றிணைப் பாடல் இது
அவள் கூறுகிறாள் :
"அன்று நாம் காட்டு வழியில் வந்த போது , நமது களைப்பைத் தீர்த்துக் கொள்ள ஓமை மரத்தடியில் நின்றோம். அம்மரத்தின் தாழ்ந்த கிளைகள் உதிர்ந்ததால், அதன் நிழல் புள்ளிகளைக் கொண்டதாக தோற்றம் அளித்தது.
சற்று நேரம் அங்கு தங்கி இருந்தோம் .
அப்போது, அங்கு வந்த ஆண்யானை , நமக்குத் துன்பம் தராமல் அம்மரத்தின் தழையை ஒடித்துத் தின்றது. நீண்ட தந்தங்களை உடைய அந்த யானை, அதன் தும்பிக்கையைச் சுருட்டி தூக்கி , வேறு எதையோ கண்டதைப் போல பிளிறியது .
அந்த பிளிறல் ஓசையைக் கேட்ட பெண் யானை , என்ன நடக்கிறது என்பது புரியாமல் தானும் அச்சம் கொண்டு அலறியது '
அந்த யானைகள் எழுப்பிய சப்தம் , மலையில் எதிரொலித்தது அல்லவா ?
அந்த நிகழ்ச்சியின் நினைவு உமக்கு இருக்கிறதா ?
அந்த நினைவு இருந்தால், மீண்டும் அந்தக் கொடுமையான கானகம் வழியாகச் செல்லும் முடிவை நீர் மாற்றிக் கொள்ள வேண்டும்"
பாலைத் திணைக்குரிய இப்பாடலை எழுதியவர், :பாலை பாடிய பெருங்கடுங்கோ" என்னும் சங்கப்புலவர்.
மரத்தின் நிழலை "புகர் நிழல் " என்னும் தொடரில் , "புள்ளிகள் கொண்ட நிழல்" என்று குறிப்பது கவித்துவமானது .
நினைத்தலும் நினைதிரோ ஐய! அன்று நாம்
பணைத் தாள் ஓமைப் படு சினை பயந்த
பொருந்தாப் புகர் நிழல் இருந்தனெம் ஆக,
நடுக்கம் செய்யாது, நண்ணுவழித் தோன்றி,
ஒடித்து மிசைக் கொண்ட ஓங்கு மருப்பு யானை 5
பொறி படு தடக்கை சுருக்கி, பிறிது ஓர்
ஆறு இடையிட்ட அளவைக்கு, வேறு உணர்ந்து,
என்றூழ் விடர் அகம் சிலம்ப,
புன் தலை மடப் பிடி புலம்பிய குரலே? நற்றிணை 318
காதலின் வடிவமான பெண் மனதை எடுத்துரைக்கும் பாடல் இது.
மேலும் ஓர் அழகான பாடலுடன் சந்திப்போம்.
தொடரும்
Leave a comment
Upload