குந்தி
மகாபாரத மாந்தருள் வீரமும் நற்குணமும் கொண்ட நாயகர்களைப் பெற்ற போற்றத்தக்க முதல் பெண் குந்திதேவி ஆவார். குந்தி போசர் அரண்மனையில் கள்ளம் கபடமற்று விளையாடி வளர்ந்தாள். கோபம் மிக்க துர்வாச மனிதர் வருகை செய்தபோது, அவருக்கு நன்கு தொண்டு செய்ய, முனிவரே அவருக்கு சிறந்ததொரு வரத்தையும் அளித்து விட்டு சென்றார்.
அவள் சிறுவயதில் ஒரு நாள் முயற்சித்த வரத்தின் பிரயோகத்தால் கதிரவனின் அருளால் கர்ணனை ஈன்றாள். பின் பாண்டுவை மணந்தாள். பாண்டு மாத்ரியையும் மணந்தான். இருவருடன் சென்று, இமயமலை சாரலில், வேட்டையாடி மானைக் கொன்று, சாபம் பெற்றதால் பாண்டுவால் மக்கட் பேறு பெற தடை ஏற்பட்டு வருந்தினான். பின் காந்தாரி கருவுற்றது அறிந்து குந்தியிடம் தம் இயலாமை குறித்து வருந்த அவள் துர்வாச முனிவரின் வரம் குறித்து கூறினாள்.
பாண்டுவும் மிக மகிழ்ந்து சம்மதித்து தருமன், பீமன் மற்றும் அர்ஜுனனை குந்தி பெற்றதோடு இல்லாமல் அவள் மாத்ரிக்கும் மந்திரம் உபதேசித்து அவளுக்கு நகுலனும் சகாதேவனும் பிறக்க காரணமானாள். பாண்டு மற்றும் மாத்ரியின் மறைவுக்குப் பின் பஞ்சபாண்டவர்களை வளர்த்து ஆளாக்கி மணம் செய்துவிட்டு தன் கடமைகளை செவ்வனே செய்தாள். Single Parent என்று தற்காலத்தில் அறியப்படும் உறவுமுறைக்கு சிறந்த முன்னுதாரணமாக திகழ்ந்தார். அதனால் தந்தையின் கடமைகளையும் செய்து தந்தையும் ஆனார்.
இவ்வாறு குந்தி பாண்டுவுக்குப் பெருமை சேர்த்தார். அரச வம்சத்துக்கு அரசகுமாரர்களை கொடுத்தார். தான் மட்டுமே தாயாக வேண்டுமென்று எண்ணாது மாத்ரிக்கு மந்திரம் உபதேசித்தார். குந்தியின் மண வாழ்க்கையில் உற்று நோக்கினால் இல்லறம் இல்லை; நல்லறம் மட்டுமே! (செய்தார்)
எந்த சூழ்நிலையிலும் பொறாமை, ஆசை, கோபம், தீய சொற்கள் என்னும் குணங்களை வெளிப்படுத்தியதில்லை.
குறளும் பொருளும்
துறந்தவர்களுக்கும், ஏழைகளுக்கும், யாசிப்பவர்களுக்கும் கூட அவரே துணை.
துறந்தார்க்கும் துவ்வாதவர்க்கும் இறந்தார்க்கும்
இல்வாழ்வான் என்பான் துணை 42
இறந்து போன முன்னோர்கள், தெய்வம், விருந்தினர், உறவுக்காரர்கள், இவர்களையும் போற்றுதல் இல்லற வாழ்க்கைக்கு முக்கியம்.
தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தான் என்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை 43
இல்வாழ்க்கை நடத்துபவர் மற்ற எல்லோரையும் விட மேல்.
இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாருள் எல்லாம் தலை 47
வீட்டுக்கு ஏற்ற பெருமை உடையவரும் தன்னை மணந்தவரின் வளமைக்கு தகுந்தபடி நடப்பவரே சிறந்த வாழ்க்கை துணைவி ஆவாள்.
மனைத்தக்க மாண்புடையள் ஆகி தற்கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கை துணை 51
புகழைக் காப்பாற்ற விரும்பும் மனைவி இல்லாதவருக்கு இகழ்ச்சியாக பேசுபவர் முன்னே ஏறு போல் நடக்கும் பெருமித நடையும் இல்லை.
புகழ் புரிந்த இல்லிலோருக்கு இல்லை இகழ்வார் முன்
ஏறுபோல் பீடு நடை 59
மனைவியின் சிறந்த பண்பே இல்வாழ்க்கைக்கு மங்கலம்; அதற்கு அழகு செய்யும் அணிகள் நல்ல மக்களை பெறுதல்.
மங்கலம் எந்த மனைமாட்சி மற்றதன்
நன்கலம் நன்மக்கட் பேறு 60
தான் சேர்த்து நிரப்பிய செல்வத்தை தானே தனித்து யாருக்கும் எதுவும் கொடாது நுகர்வது யாசித்தலை விட மிகவும் கொடியதாகும் (மாத்ரியிடம் பகிர்தல்)
இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய
தாமே தமியர் உணல் 229
செய்யக்கூடியது அறம்; விளக்கக் கூடியது பழிச்சொல்.
செயற்பாலது ஓரும் அறனே ஒருவற்கு
உயற்ப்பாலது ஓரும் பழி 40
பொறாமை, ஆசை, கோபம், தீய சொற்கள் இவை நான்கையும் நீக்கி செயல்படுவதே அறம்.
அழுக்காறு அவா வெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம் 35
Leave a comment
Upload