தேசத்தின் தொன்மை விழுமங்கள் காலப் போக்கில் மந்தைச் சிந்தனையில் அடிபட்டு, சிதைந்து போய், சிதறிவிடுகின்றன. அவற்றில் சனாதனம், மனுநீதி என்ற இரண்டையும் எடுத்துக் கொள்ளலாம். இரண்டும் விபரம் புரியாத வேண்டுமென்றே பழமையைப் பழிக்கும் சுயநலம் கொண்ட அரசியல்வாதிகளின் தேர்தல் கால ஆயுதங்கள்.
இந்த நிலைமையில் சென்னை மணிவாசகர் பதிப்பகம் மலிவு விலையில் வெளியிட திட்டமிட்டிருந்த புத்தகங்களுக்காக 14 புத்தகங்களை எழுதிக்கொடுத்தான். அவற்றில் ‘விதுரநீதி’யும், ’மனுநீதி’யும் முக்கியமானவை. மனுநீதி புத்தகத்தை படித்த காஞ்சி மடாதிபதி அவனிடம் சொன்னார், ‘இது கத்திமேல் நடப்பது போன்ற சாகசம், நீங்கள் அருமையாக எழுதியிருக்கிறீர்கள்’.
அவ்வப்போது எழும் பழைமை பற்றிய அரசியல் சர்ச்சைகளில் மனுநீதியும் ஒன்றாக பேசப்பட்டு வந்தபோது, அவன் ‘மனுவுக்கு ஏன் எதிர் மனு’ என்று தினமணியில் ஒரு கட்டுரை எழுதினான். அந்த நடுப்பக்க கட்டுரை வந்த மறுநாளே, பொள்ளாச்சியில் இருந்த அவனது நண்பரும், முன்னாள் சக கல்லூரி பேராசிரியருமான சிற்பி பாலசுப்பிரமணியன் அவனது கட்டுரையின் பார்வையை எதிர்த்து, தினமணியில் வாசகர் கடிதங்கள் பகுதியில் தன் கருத்தை வெளியிட்டார்.
இந்த இருவருக்கும் நண்பரான கோயம்புத்தூர் விஜயா பதிப்பகத்தின் உரிமையாளர் வேலாயுதம், அவனது கூற்று சரியே என்று வாசகர் கடிதம் பகுதியில் தன் கருத்தை பதிவு செய்தார். அதில் அவர் கட்டுரையாளர் சரியாகவே எழுதியிருக்கிறார், வாசகர்களுக்குத்தான் சரியான புரிதல் வேண்டும் என்று சொல்லியிருந்தார். ஒரு தமிழறிஞர் திருவள்ளுவரை அவன் தாக்கிவிட்டதாக வாசகர் கடிதம் பகுதியில் குற்றம் சாட்டியிருந்தார்.
தன் கட்டுரையில் மனுவும் திருவள்ளுவரும் பெண்களைப் பற்றி சொன்னதை குறிப்பிட்டிருந்தான்.
திருவள்ளுவர் ‘பெண்வழிச் சேறல்’ என்ற ஒரு அதிகாரத்தில் பெண்களின் யோசனைகளை ஏற்றுக்கொள்வதில் கொஞ்சம் தயக்கம் காட்ட வேண்டும் என்றும் அவன் தன் கட்டுரையில் குறிப்பிட்டிருந்தான். இது பெண் வாசகர்களை உசிப்பிவிட்டதோ இல்லையோ, தமிழறிஞர்களை எகிற செய்தது. அவர்கள் சட்டப்பூர்வமாக அவன் மீது நடவடிக்கை எடுக்க முன்னேற்பாடுகள் செய்தார்கள். அந்தப் பட்டியலில் அவனுக்கு நன்கு பழக்கமான தமிழறிஞர்களும் உண்டு.
கட்டுரையின் நோக்கம் மனுவையோ, திருவள்ளுவரையோ குறைத்து மதிப்பிடுவது அல்ல. சில ஆயிரம் வருடங்களுக்கு முன்பு பெண்களின் பேச்சிற்கு மதிப்புக் கொடுக்க வேண்டாம் என்ற எண்ணமே சமுகத்தில் நிலை பெற்றிருந்தது. ஔவையாரும் கூட “தையல் சொல் கேளேல்’’ என்றார். பிற்காலத்தில் பாரதியார் ‘தையலை உயர்வு செய்’ என்றார்.
ஒவ்வொரு காலகட்டத்திலும் சமுதாயத்தின் ஏதாவது ஒரு அம்சத்தினைப் பற்றி மதிப்பீடுகள் மாறுகின்றன. இதைப் புரிந்து கொள்ளாமல், ‘விட்டேனா பார்’ என்று சொற்சிலம்பம் ஆடுவது அறிவுக்கு அழகல்ல. ஆனால் அப்படிச் செய்பவர்களும் இருக்கிறார்கள். ஒருவர் சொன்னால், பலர் தலை ஆட்டுகிறார்கள்.
மேற்சொன்ன கட்டுரை வெளிவந்த சில நாட்களில், அவனுக்கு மூன்று வக்கீல்கள், 60 தமிழ் அறிஞர்கள் சார்பாக கையெழுத்திட்டு ஒரு நோட்டீஸ் அனுப்பியிருந்தார்கள். அந்த 60 அறிஞர்களில் சிலர் அவனது நண்பர்களே. அவர்களில் ஒருவர் முன்னாள் துணை வேந்தர். அவர் அவன் சிட்னியில் நடைபெற்ற உலக தமிழ் மாநாட்டில் திருவள்ளுவர் ஒரு நிர்வாகவியல் நிபுணர் என்ற அவனது கட்டுரையைப் பாராட்டி பேசியவர். பாவம் மந்தை சிந்தனையில் அவரும் சிக்கிக் கொண்டார். முன்பு ஒரு ஆய்வு அரங்கத்தில் தன் கட்டுரையின் சாராம்சத்திற்கு அவன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரியிருந்தார்கள்.
மிக நீளமான வக்கீல் நோட்டீஸ் அது. அவன் படித்துப் பார்த்தான். வக்கீலாக உள்ள தன் எழுத்தாள நண்பரை அழைத்து நோட்டீசுக்கு பதில் கொடுக்க அவரது ஆலோசனையைப் பெற விரும்பினான். அவரோ 60 தமிழ் அறிஞர்களுக்கு பயந்து கொண்டு, அவனுடன் தொலைபேசியில் பேசுவதைத் தவிர்த்தார்.
ஒரு வக்கீலே பிற வக்கீல்களுக்கும், தமிழ் அறிஞர்களுக்கும் பயந்து ஒதுங்கிய நிலையில் அவன் வக்கீல்கள் எவருடைய ஆலோசனையும் இல்லாமல் தானே மனதிற்கு பட்டதை பதிலாக எழுத விரும்பினான், கச்சிதமான வார்த்தைகளுடன்.
இது தொடர்பாக அரசாங்கத்தின் தமிழ்த்துறையைச் சேர்ந்த ஒருவர், தொலைபேசியில் அவனை அழைத்து ‘மன்னிப்புக் கேளுங்கள்’ என்றார். ‘கேட்க மாட்டேன்’ என்று அவன் உறுதிபடச் சொன்னவுடன், அவர் ‘கேளுங்களேன் சார், அது உங்களுக்கு நல்லது’ என்றார். அது கேட்காவிட்டால் கெட்டது என்பது மென்மையான மிரட்டல். அரசு அதிகாரி என்பதால் தனக்கு அவன் பயப்படுவான் என்று நினைத்து விட்டார்.
உண்மை சார்ந்த தைரியமான எழுத்து, பயம் அறியாது.அவன் பதில் சொன்னான்: ‘பின்விளைவுகள் நல்லதா கெட்டதா என்பது பற்றி நான் கவலைப்படவில்லை. மனுநீதியை தூக்கிப் பிடிக்கவில்லை. ஒவ்வாத கோட்பாடுகளை ஒதுக்கி விடலாம் என்றுதான் எழுதியிருந்தேன். என் நிலைப்பாடு சரியே’ என்றான். இவன் பதிலை அடுத்து அந்த மூன்று வக்கீல்களிடமிருந்து, இரண்டாவது நோட்டீஸ் வந்தது.
அதில் ‘திருக்குறள் பள்ளி வகுப்பறைகளில் சொல்லித் தரப்பட வேண்டும் என்று உயர்நீதிமன்றம் சொல்லியிருக்கிறது. அதை நீங்கள் மீறியிருக்கிறீர்கள், உங்கள் மீது வழக்கு தொடரப்படும்’ என்ற மிரட்டல் இருந்தது.
‘உயர் நீதிமன்றம் என்ற சொல்லே தன் கட்டுரையில் இடம் பெறவில்லை. திருக்குறள் கற்றுத்தருவது பற்றியும் எதுவும் குறிப்பிடவில்லை. இந்த நிலையில் உயர்நீதிமன்றத்தின் பெயரைச் சொல்லி நீங்கள் மிரட்டுவது, குறிப்பிட்ட சில செக்ஷன்களின்படி தண்டைனைக்குரியது. நீங்கள் வழக்கு தொடரலாம், நானும் உங்கள் மீது கோர்ட் பெயரைச் சொல்லி என்னை மிரட்டுவதால் ‘‘Contempt of Court, Coercion” என்ற பிரிவுகளில் வழக்கு தொடருவேன். நீங்கள் என்னை நீதிமன்றத்தில் சந்திக்கத் தயாரா’ என்று கேட்டு எழுதியிருந்தான்.
எதிர்தரப்பிலிருந்து பதில் ஏதும் வரவில்லை. அவன் துணிந்து இருந்ததனால் அந்த விவகாரம் அத்துடன் முடிந்தது.
பாரதியார் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரை, ஒரு மலருக்கு அனுப்பிய கட்டுரையில், பெயர் குறிப்பிடாமல் “கோணல் கொம்பு’’ என்று குறிப்பிட்டிருந்தான் அவன். அவர் அதற்காக ஒரு வக்கீல் நோட்டீஸ் கொடுத்தார். அவன் பதில் எழுதினான், நான் பெயரே சொல்லாதபோது உங்களை நீங்கள் அடையாளப்படுத்திக் கொள்வது விந்தைதான். அப்படியானால் நீங்கள் கோணல் கொம்பு என்று ஒப்புக் கொள்கிறீர்களா என்று கேட்டிருந்தான். அந்த விவகாரம் அத்துடன் முடிந்தது.
ஒரு முன்னாள் மத்திய மந்திரியும் துக்ளக்கில் அவன் எழுதிய கட்டுரைக்காக நோட்டீஸ் அனுப்பினார். அப்போது அவன் துக்ளக் ஆசிரியர் சோ.ராமசாமியிடம் அதுபற்றி பேசியபோது அவர் சொன்னார், ‘அந்த முன்னாள் மந்திரி எனக்கும் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார், கவலைப்படாதீர்கள் என்னுடைய வக்கீல் உங்கள் வழக்கையும் சேர்த்து நடத்துவார் என்றார். ஆனால் மாஜி மந்திரி வழக்கு தொடரவில்லை. இப்படி சிலமுறை மிரட்டல்களைச் சந்தித்தும் அவன் உண்மைகளையே எழுதி வருகிறான்.
உண்மைகளை எழுதுபவன் மிரட்டல்களுக்கு பயப்பட மாட்டான். வழக்குகள் அவனுக்கு எதிராக இருக்காது.
Leave a comment
Upload