தொடர்கள்
கலை
மும்பையில் நாதஸ்வர திருவிழா  – பால்கி

20250805222137549.jpg

நாதஸ்வர சக்கரவர்த்தி ஸ்ரீ டி.என்.ராஜரத்தினம் பிள்ளையின் 127 ஆவது பிறந்த நாள் திருவிழா மும்பையில் வெகு விமரிசையாக் கொண்டாடப்பட்டது.

ஆகஸ்ட் 30, 31 அன்று ஸ்ரீசண்முகானந்தா நாதஸ்வர திருவிழாவிற்கு வருக வருக என்று என்று மும்பையின் கலை பீடமான சண்முகானந்தா சபாவின் அழைப்பு.

முதல் நாள் 30.08.2025 அன்று சபாவில் யாழ்பாணம் நல்லூர் திரு. பாலமுருகனும், திரு சாரங்கனும் சேர்ந்து நாதஸ்வர கச்சேரி விருந்து வைத்தனர். நாதஸ்வரத் திரு விழாவிற்கு இதை விட ஒரு கிராண்ட் ஆரம்பம் எதுவாக இருக்க முடியும்!!!!.

20250805222219461.jpg

அடுத்த நாளின் நிகழ்வுகளும் முந்தைய நாளுக்கு ஈடு கொடுத்தன.

மட்டுங்கா சங்கர மடத்திலிருந்து மடத்தில் வாசித்த கையோடு

20250805222417698.jpg

20250805222452572.jpg

20250805222558778.jpg

காலை 7.30 மணிக்கு அங்கிருந்து வியாசர்பாடி கோதண்டராமன் தலைமையில் 50 ஃபெல்லோஷிப் அவார்ட் வாங்கும் நாதஸ்வரம் மாணவர்களும் திருப்பதி கார்வேட் நகரிலிருந்து காஞ்சி காமகோடி நாதஸ்வர பாடசாலையைச் சேர்ந்த 40 இளம் பெண் நாதஸ்வரம் வாசிப்பாளர்களும் இணைந்து மல்லாரி ராகத்தை காற்றில் இழைத்தவாரே அங்கிருந்து இரண்டு கி.மீ தொலைவில் சையான் பகுதில் இருக்கும் சபா வர, தெரு…. இல்லை, இல்லை, நகரத்தின் படு வேக சாலையெங்கும் இசை மழை பொழிந்துகொண்டே வந்தனர்.20250805222634491.jpg

20250805223553597.jpg

மும்பையில் இப்போது அடை மழைக்காலம். மல்லாரியில் குளிக்க, அதாவது, கேட்க வருணனும் ஒதுங்கிக்கொண்டான் என்று தான் சொல்லவேண்டும். ஆனால், அதற்கு முன், கால்களில் செருப்பின்றி இசை மழை பொழியும் இவர்களின் கால்களுக்கு இதமாக இருக்கட்டும் என்று வீதிகளை நன்றாக தூய்மைபடுத்தி விட்டிருந்தான் தனது கைங்கர்யமாக.

சீதா லக்ஷ்மண அனுமனுடனான இராம விக்கிரகங்களை தாங்கியவாரே வேத கோஷமும் உடன்வர ஊர்ந்தனர்.

20250805223640682.jpg

மும்பை நகர மக்களுக்கு அன்று தேவ லோக உணர்வு கண்டிப்பாக வந்திருக்க வேண்டும்.

20250805222746208.jpg

சபாவை அடைந்ததும், சபையின் முக்கிய வளாகத்தில் பொருத்தப்பட்டிருக்கும் இராஜரத்தினம் பிள்ளையவர்களின் உருவப் படத்திற்கு முன்னின்று முந்தய நாளில் வாசித்த இலங்கை விற்பன்னர்கள் தவிலுடன் இணைந்து அரை மணி நேர நாதஸ்வர விருந்து வழங்கினர்.

20250805223848168.jpg

பின்னர், அன்றைய நாள் நிகழ்வின் ஆரம்பமாக மராட்டிய தாய் வாழ்த்து சபையின் சங்கீதப்பள்ளியினரால் பாடப்பட்டது. அதற்கடுத்து தமிழ்த்தாய் பாட்டு பாடப்பட்டது. இரண்டிற்கும் சபையில் திரண்டிருந்த தமிழ் இசை பிரியர்கள் நின்று மரியாதை செய்தது நலம்மிக்க செயல் தான். நடக்குமிடம் மும்பை என மராட்டிய தாய்வாழ்த்துப் பாடலையும் மதித்ததும், தமிழுக்குப் பெருமை சேர்ப்பது போன்றே தமிழ்த் தாய் வாழ்த்து பாடியதும் பாராட்டத்தக்க செயலாகும். இந்த சபையில் இது தவறாது நடக்கும் நிகழ்வாரம்ப செயலும் ஆகும்.

தேர்வு செய்யப்பட்டிருந்த 50 மாணவர்களுக்கு பொன்னாடை போற்றி மாலைகள் சாற்றி இந்த ஆண்டிற்கான மானியத்தொகை காசோலைகள் வழங்கப்பட்டன.

20250805222933527.jpg

இந்த வாசிப்பாளர்கள் தங்கள் தங்கியிருந்த செம்பூர் சங்கராலயத்தில் சாஸ்தா சந்நிதி முன்பு வாசித்து இன்புறுகின்றனர்.

திருவிழா நாயகர், திருவிழா. ஜெயசங்கர், ஆமாங்க!, கேரளாவின் திருவிழா என்னுமிடத்தைச் சேர்ந்தவர், அவர்களுக்கு 2025 வருடத்திற்கான ஸ்ரீசண்முகானந்தா நாதஸ்வர சக்கரவர்த்தி டி.என்.ராஜரத்தினம் பிள்ளை சங்கீத கலா விபூஷண் (வாழ்நாள் சாதனையாளர் விருது) கொடுத்து கௌரவிக்கப்பட்டார்.

2025080522300169.jpg

சண்முகனந்தா சபாவில், மும்பையில் உள்ள அனைத்து கலைச் சங்கங்கள், நிறுவனங்கள், கோவில்கள், மற்ற கலை சபைகள், சமூக நிறுவனங்களும் தமது பிரதிநிதிகள் மூலம் தமது வகையில் அன்றைய சாதனையாளரை வரவேற்று பொன்னாடை போற்றி பரிசு பொருட்களையும் தந்து இன்னும் மரியாதை சேர்த்தனர்.

20250805223035276.jpg

கூடவே பொன்னாடையோடு ரூ 2,50,000/-க்கான பண முடிப்பு காசோலையும், ஆளுயர குத்துவிளக்கும் அளிக்கப்பட்டன.

2025080522310947.jpg

இறுதி நிகழ்ச்சியாக மேடையிலிருந்த, மானியப்பரிசு பெற்ற மாணவர்கள் அனைவரும் கூடி தேசீய கீதத்தை இசைத்தது சிலிர்க்க வைத்தது.

இந்த விழா இப்படி சிறப்புற அமைந்ததிற்கு காரணம் -

கொரோனா ஊழிக்காலத்தில் நலியத்தொடங்கியது பல கலைகள். அதில் ஒன்று இந்த நாதஸ்வரம்.

ஸ்ரீசண்முகானந்தா நாதஸ்வர சக்கரவர்த்தி டி.என்.ராஜரத்தினம் பிள்ளை சங்கீத கலா விபூஷண் என்ற விருது (வாழ்நாள் சாதனையாளர் விருது) ஒன்றை நிறுவி நாதஸ்வர சக்கரவர்த்தியின் 125 ஆவது பிறந்தநாளை (27 ஆகஸ்ட்) ஒட்டி வரும் நாளில் விழா எடுத்து வருடா வருடம் இந்த துறையில் அளப்பரிய சாதனையும் தொண்டாற்றிய கலைஞருக்கு அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த வருடம் திருவிழா ஜெயசங்கர் பெற்றது போன்று 2023 ஆண்டு செம்பனார் கோயில் ராமசமி கோவிந்தசாமி ராஜண்ணாவும், 2024 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ செஷம்பட்டி டி. சிவலிங்கமும் கௌரவிக்கப்பட்டனர்.

இது மட்டுமல்லாமல், நாட்டிலுள்ள குறைந்தது 50 வளர்ந்து வரும் இளம் வாசிக்கும் கலைஞர்களை தேர்வு செய்து அவர்களுக்கு அந்த ஆண்டு முதல் அடுத்த இரண்டாண்டுகளுக்கு வருடத்திற்கு ரூ 1,00,000/- வீதம் மானியம் அளிக்கவும் முடிவு செய்தது.

இது வரை 93 கலைஞர்கள் பயனடைந்துள்ளனர்.

அந்த முறையில் பார்க்கையில், இந்த வருடம் 18 நாதஸ்வர வித்வான்கள் மூன்றாமாண்டு மானியத்தையும், 10 பேர் இரண்டாமாண்டு மானியத்தையும், 22 பேர் இந்த ஆண்டின் புதிய தேர்வாக மானியத்தையும் பெற்றனர்.

இந்த இயக்கத்தில் சபா எடுத்துள்ள இன்னும் சில தொலை நோக்கு திட்டங்கள் :-

  • நாதஸ்வர பள்ளிகளுக்கு அங்கீகார வாரியத்தை உருவாக்குதல், சான்றளிப்பு தேர்வுகளை நடத்துதல், மற்றும் சான்றிதழ்களை வழங்குதல்,
  • நாதஸ்வரத்தை பிரதான கல்வியுடன் இணைக்கும் இரட்டைக் கல்வி முறை கொண்டுள்ள பள்ளியை உருவாக்க ஊக்குவித்தல்,
  • சபா நடமுறைப்படுத்திவரும் நலிந்த/ஏழை எளிய கலைஞர்களுக்கான மாதாந்திர வாழ்நாள் முழுவதும் ஓய்வூதியம் திட்டத்தில் ஏழை நாதஸ்வர வித்வான்களையும் இணைத்திடவும் நாதஸ்வர கலைஞர்களின் மாநில வாரியான பட்டியலைத் தயாரிப்பது.

கலை நிகழ்ச்சிகள் கொடுப்பதுதான் சபாவின் வேலை என்ற வேலையோடு நின்றிடாமல் சற்றே மாற்றி யோசிக்கும், சமூக அக்கறையோடு செயல்படும் இந்த ஸ்ரீசண்முகானந்தா ஃபைன் ஆர்ட்ஸ் & சங்கீத சபா நாட்டில் ஒரு அரிய கலைக்கூடமாக, சமூக சேவை அரங்கமாகவே செயல்படுகிறது.

இந்த சேவை மட்டுமல்லாது, இவர்களது மருத்துவ சேவையும் பாராட்டிற்குரியது.