தாயிற் சிறந்த கோவிலும்
இல்லை என்றாலும்...
தந்தை சொல்மிக்க மந்திரம்
இல்லை என்றாலும்...
குரு சொல்லும் மொழிதான்,
வாழ்வின் வழிகாட்டும் என்பார்...
தத்தி நடக்கும் பிள்ளைக்கு
தாய் துணை இருப்பாள்...!
எட்டி நடை போடும்போது
தந்தை தோள் கொடுப்பார்...!
ஆயுளின் பயணப் பாதையை
ஆசான் வகுத்துக் கொடுப்பார்...!
கல்விச் சாலையில் கல்வியோடு
காலத்தின் பாடமும் போதிப்பார்...!
கற்றதை வாழ்வின் வளமாக்கும்
வித்தையை கற்றுத் தருவார்...!
பெற்றவரை பேணிக் காத்திடும்
உற்றதொரு குணம் உரைப்பார்...!
உலகைக் காட்டி பெற்றவர்கள்,
பிள்ளைகளை உருவாக்குவார்..!
அப்பிள்ளைகளை மெருகேற்றி, ஆசான் உலகுக்கு காட்டிடுவார்...!
காணும் வெற்றிக்கும் புகழுக்கும்,
வேணும் என்றுரிமை கோரமாட்டார்!
கடவுள்சிலை செய்து மனிதர்கள்,
கடவுள் கண்களை திறப்பார்கள்...!
கடவுள் நல்லாசிரியர்கள் உருவில்,
மனிதர்கள் கண்களை திறப்பார்கள்!
கெட்டவனாய் ஒருவன் இருப்பது,
நல்ல ஆசிரியர் கிடைக்காத வரை...!
பள்ளி, கல்லூரி பாடம் கற்பித்து,
பட்டங்கள் பெற வைத்தார்...!
வாழ்க்கை கல்வி அறிவை புகட்டி,
மனிதனாய் மாற்றி வைத்தார்...!
நல்லவர்களை இனம் கண்டு,
நல்லிணக்கம் செய்ய வைத்தார்...!
புத்தரை நான் கண்டதில்லை...!
போதிமரமும் நான் கண்டதில்லை...!
புத்தராய் ஆசிரியரைக் கண்டேன்...
பள்ளி மரத்தடியில் போதித்த அன்று..!
நாளும் நன்றி சொன்னாலும், இன்று
ஆசானை வாழ்த்தி வணங்கும் நாள்..!
ஆசிரியர் தின வாழ்த்துகள்...!!
Leave a comment
Upload