தொடர்கள்
வலையங்கம்
யாருக்கும் வெட்கமில்லை !!

20250812233347637.jpeg

சென்ற மாதம் நடந்த பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தில் மத்திய அரசு ஒரு சட்டத்தை அறிமுகப்படுத்தியது. கொடும் குற்றத்துக்கு ஆளாகி 30 நாட்களுக்கு மேல் போலீஸ் காவலில் இருந்தால் பிரதமராக இருந்தாலும் பதவியை பறிக்கும் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை பழி வாங்கும் நடவடிக்கை என்று ஆரம்ப நிலையிலேயே எதிர்க்கட்சிகள் எதிர்த்தாலும் பெரும்பான்மை காரணமாக மசோதா நிறைவேற்றப்பட்டது. பாராளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனைக்கு இந்த மசோதா அனுப்பப்பட்டிருக்கிறது.

இப்படி ஒரு மசோதா வருவதற்கும் காரணம் இருக்கிறது. ஏ.டி.ஆர் எனப்படும் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் என்ற அமைப்பு கிரிமினல் குற்றம் பின்னணி கொண்ட அமைச்சர்கள் பற்றி ஆய்வு நடத்தியது. இதற்காக 27 மாநிலங்கள் மற்றும் மூன்று யூனியன் பிரதேசங்கள் மற்றும் மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள அமைச்சர்கள் என 643 அமைச்சர்கள் தேர்தலின் போது தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தை ஆய்வு செய்தது. அதில் 302 அமைச்சர்கள் அதாவது 47 சதவீதம் பேர் மீது கிரிமினல் குற்றச்சாட்டுகள் இருப்பது தெரியவந்தது. அதில் 174 பேர் மீது தீவிரமான கிரிமினல் வழக்குகள் உள்ளதாக ஏ.டி.ஆர் அந்த அறிக்கையில் தெரிவித்திருக்கிறது.

பாஜகவை சேர்ந்த 336 அமைச்சர்களில் 136 பேர் (40%) மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. அவர்களின் தீவிர குற்ற வழக்கில் சிக்கியவர்கள் 88 பேர். நான்கு மாநிலங்களில் ஆட்சியில் உள்ள காங்கிரஸ் கட்சி அமைச்சர்களில் 45 பேர் (74%) மீது கிரிமினல் குற்றங்கள் பதிவாகியுள்ளன. அதில் 18 பேர் மீது தீவிர குற்ற வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. திமுகவின் 31 அமைச்சர்களில் 27 பேர் மீது (87%) கிரிமினல் குற்றங்களும் 14 பேர் மீது தீவிர வழக்குகளும் பதிவாகியுள்ளன. திரிணாமுல் காங்கிரஸ் தெலுங்கு தேசம் ஆம் ஆத்மி ஆகிய அமைச்சர்கள் மீதும் இதேபோல் வழக்குகள் பதிவாகியுள்ளன. 72 மத்திய அமைச்சர்களில் 29 பேர் மீது (40%) கிரிமினல் வழக்குகள் இருப்பது அவர்கள் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் தெரிய வந்துள்ளது.

இதில் முரண்பாடாக அரியானா, ஜம்மு காஷ்மீர் ,நாகாலாந்து, உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் ஒரு அமைச்சர் மீது கூட கிரிமினல் வழக்குகள் பதிவாகவில்லை. கிரிமினல் வழக்குகள் பதிவான அமைச்சர்கள் மீது கொலை, கடத்தல், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் உட்பட தீவிரமான கிரிமினல் குற்றச்சாட்டுகளுக்கு இவர்கள் மீது வழக்கு பதிவு செய்திருப்பது இந்த ஆய்வில் தெரிந்தது.

குற்றப் பின்னணி உடைய அரசியல் தலைவர்கள் குற்றங்களை தடுப்பது சம்பந்தப்பட்ட சட்டங்களை சட்டசபையிலும் பாராளுமன்றத்திலும் இயற்ற துணை போவது என்பது இந்திய ஜனநாயகத்திற்கு ஒரு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும். இவ்வளவு குற்ற பின்னணி உள்ள இந்த தலைவர்கள் இந்த நாட்டை நாங்கள் தான் காப்பாற்றப் போகிறோம் என்று பேசுவது யாருக்கும் வெட்கமில்லை என்பதுதான் நினைவுக்கு வருகிறது. இவர்களை தேர்ந்தெடுக்கும் வாக்காளர்கள் நினைத்தாலும் பரிதாபமாக இருக்கிறது.