தொடர்கள்
வலையங்கம்
இது சரியல்ல

2025903163636134.jpeg

பட்டாசு வெடிப்பதற்கு தடை என்பதில் நீதிமன்றங்கள் எப்போதும் குறியாக இருக்கின்றன. சமீபத்தில் உச்ச நீதிமன்றம் பட்டாசுக்கு ஏன் நாடு முழுவதும் நிரந்தர தடை விதிக்க கூடாது என்று கேட்டிருக்கிறது. ஏற்கனவே டெல்லியில் பட்டாசு வெடிக்க அரசு தடை விதித்திருக்கிறது. இதற்கு அவர்கள் சொல்லும் காரணம் சுற்றுச்சூழல்.

சுற்றுச்சூழல் பாதிப்புக்கு பட்டாசு மட்டும்தான் காரணமா ? தலைநகர் டெல்லியின் சுற்றுப்புற ஆலைகளில் இருந்து வெளியேறும் புகை அறுவடைக்குப் பிறகு வீணாக இருக்கும் பதர்களை அருகில் இருக்கும் மாநிலங்கள் குறிப்பாக அரியானா, பஞ்சாப் எரிப்பதால் ஏற்படும் புகை மாசு அபரிதமான வாகன புகை இவற்றைப் பற்றி எல்லாம் உச்ச நீதிமன்றம் யோசிக்காமல் ஆண்டுக்கு ஓரிரு நாட்கள் மட்டும் வெடிக்கும் பட்டாசுகளால் புகை மாசு என்பது முரணாகத்தான் இருக்கிறது. பட்டாசுக்கு தடை என்ற நிலையிலும் டெல்லியில் சுற்றுப்புற சூழல் இன்று வரை மோசமாகத்தான் இருக்கிறது. அப்படி இருக்கும் போது டெல்லியை அளவுகோலாக வைத்து ஒட்டுமொத்த இந்தியாவிலும் தடை என்பது எந்த வகையிலும் நியாயமில்லை.

அதே சமயம் பட்டாசுகளால் சுற்றுச்சூழல் பாதிப்பு இல்லை என்று யாரும் வாதிடவில்லை. அதற்கு மாற்று வழியை தேடுவது தான் சரியான தீர்வு. இப்போது பசுமை பட்டாசுகள் அறிமுகம் ஆகிறது. அது தவிர பட்டாசு வெடிப்பதற்கான காலக்கெடு நேரக் கட்டுப்பாடு போன்றவற்றை அரசாங்கம் அறிமுகம் செய்திருக்கிறது. மாசு தடுப்பு நடவடிக்கைகளுக்கு பட்டாசு ஆலை அதிபர்கள் நிச்சயம் ஒத்துழைப்பு தருவார்கள். சிவகாசி மற்றும் சுற்று பகுதிகளில் ஆண்டுக்கு கிட்டத்தட்ட 6000 கோடி ரூபாய்க்கு பட்டாசு தயாரிக்கப்பட்டு விற்பனையாகிறது இந்த தொழில் மூலம் மூன்று லட்சம் ஏழை மக்கள் பயன் அடைகிறார்கள். அதேசமயம் இதில் உள்ள ஒரு ஆபத்தை தெரிந்தும் தங்கள் வாழ்வாதாரத்துக்காக இந்தத் தொழில் ஈடுபடுகிறார்கள். கடந்த பத்து ஆண்டுகளில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 500 பேர் இறந்து போயிருக்கிறார்கள். பட்டாசு தொழிற்சாலை பாதுகாப்புக்கான வழிமுறைகளை அரசாங்கம் பாரபட்சமின்றி கண்காணித்து நடைமுறைப்படுத்தினால் மட்டும் போதும். நீதிமன்றமும் இதை ஒரு வாழ்வாதார பிரச்சனையாக பார்த்து நியாயம் வழங்க வேண்டும்.