
அவர்களைப் பார்த்ததும் திடுக்கிட்டேன். அன்று பார்த்த அதே ஜோடிதான்.என்னைத் தேடி எதற்கு வந்தனர் ? பழைய நினைவில் கரைந்தேன்..
மாமல்ல புரம். சாலை ஓரம் உளியல் சத்தம். சில கற்களில் முகம் மட்டும் தெரிந்தது. சில கற்கள் முழு உருவம் ஆனது.
கலைஞர்கள் கற்களில் கை வண்ணம் காட்டிக் கொண்டிருந்தனர்.
மெல்ல மெல்ல நகர்ந்தோம்.
“தாத்தா… அந்த இடம் எங்கே இருக்கு ”
அந்த பாடலின் வரிகள் அவளைத் தூண்டி, துரத்திக் கொண்டிருந்தது.
“எந்த இடம் கண்ணு” என் பேத்தியிடம் கேட்டேன்.
“சிலை எடுத்தான் ஒரு சின்ன பெண்ணுக்கு”,அந்த பாட்டில் வருமே.
“லவ்லி சாங். பாட்டு மட்டு மல்ல,படம் எடுத்த இடமும் தான்”.
“அது காதல் பேசும் கண்களின் பாரடைஸ்”.
அந்த இடத்தை நெருங்கினோம்.
“தாத்தா …..அங்க பாரு”. என் பேத்தி
சந்தோஷத்தில், அவர்கள் ஆடுவதைக்காட்டி,
“ஹை. ஷூட்டிங்…. சினிமா ஷூட்டிங்”. துள்ளி குதித்தாள்.
“மாமல்லபுரத்தில் தினம் ஒரு ஷூட்டிங் நடந்துகிட்டு இருக்கும்” நினைத்துக்கொண்டேன்.
“தாத்தா !… கிட்ட போய் பார்க்கலாம் வா”.
அவள் ஆசைக்காக அருகில் சென்றேன். நடிகர்,நடிகை யார் என்று தெரிந்து கொள்ளவும் ஆசை.
கடற்கரை ஓரம்,.
கல் தேரின் மேல்,
கற் கோயிலின் நடுவில்,
உயிர்கொண்ட சிலையை உரசிக் கொண்டு, புல் பரப்பில்,
பல வித ஃபோஸ்களில் படம் எடுத்தனர்.
வண்ண, வண்ண ஆடைகள். வெவ்வேறு லொகேஷன்கள்… குதூகலத்தில் இருந்தனர்.
பக்கத்தில் நின்றவரிடம் கேட்டேன்,
“படத்தின் பெயர் என்னப்பா”.
“ படமில்லை சார். அது pre wedding shoot. இப்பெல்லாம், சினிமா ஷூட்டிங் குறைஞ்சு போச்சு.
சிரிசுகளும்,புதுசுகளும் வந்து போட்ற ஆட்டம் தான் இங்க பெரிசா இருக்கு சார்” .
“சமீபத்தில் வந்து தொத்திக் கொண்ட கலாச்சாரம் இது”.
ஆட்டிப் படைக்குது.நினைத்துக் கொண்டே நகர்ந்தேன்.
“அந்த நடிகை பெயர் என்ன தாத்தா” என் பேத்தியின் தொண தொணப்பு தாங்கல.
”புதுப்படம். படத்துக்கும் பேர் வைக்கல.நடிகைக்கும் பேர் வைக்கல”. என் பேத்தியிடம் ஏதோ பொய் சொல்லி
சமாளிச்சேன்.
அவனும் அழகு. அவளும் அழகு. அவர்கள் நின்றது ,நடந்தது,சிரித்தது, அத்தனையும் அழகு.
ஒரு டைரக்டர் பார்த்திருந்தால், நிச்சயம் அவர்களை சிக்கலில் மாட்டி விட்டிருப்பான்.
கிரேட் லக்.அவர்கள் தப்பித்தார்கள் என்ற சந்தோஷத்தில் அங்கிருந்து நகர்ந்தேன்.
இன்று அவர்கள் என்னைத் தேடி வந்ததும் ஷாக்கானேன்.
விவாகரத்திற்கு கவுன்ஸலிங் செய்யும் என்னிடமா?
“மூத்த ஆலோசகர். அவர்கிட்ட போங்க”
கோர்ட்டுதான் சொல்லி அனுப்பிச்சுது சார்.
பிரச்சனையை புரிந்து கொண்டேன்,
“உங்கள் பிரச்சனையை, ஓபனாக சொன்னால்,சரியாக வழி நடத்த முடியும்” என்றேன்.
“உங்களை ஒரு தரம் மகாபலிபுரத்துல பார்த்த ஞாபகம்” என் நினைவில் தேடினேன்.
“ ஆமாம் சார். கல்யாணத்துக்கு முன்,ஒரே ஒரு தரம் போட்டோ ஷூட் எடுக்க போயிருந்தோம்”.
“நல்லது.உங்க பிரச்சனை என்னன்னு சொல்லுங்க”.
அவள்தான் தொடங்கினாள்.
“என்னை ஒரு டைரக்டர் டி.வி.சீரியல்ல நடிக்க கூப்பிடரார். இவர் அதுக்கு ஒத்துக்கலை.நான் நடிக்கப்போறேன்னு பிடிவாதமா சொல்லிட்டேங்க.அப்ப உன் முடிவு அதுவானால், நாம்ப பிரிஞ்சுடலாம்னு, கறாரா சொல்லிட்டாருங்க. எனக்கு நடிக்கணும்னு ஆசை. நானும் சரின்னு சொல்லிட்டங்க.”
நான் சிரித்தேன்.
“அந்த pre wedding album த்தை நாளைக்கு கொண்டு வாங்க.அப்புறம் பேசலாம்”. என்றேன்.
மறுநாள் அந்த ஆல்பத்தோடு வந்தனர்.
ஆல்பத்தை பிரித்து, அவர்களின் படங்களைப் பார்த்தேன்.
“ஆஹா…என்ன அன்யோன்யம். உங்கள் உள்ளத்தில் இருந்தது அத்தனையும் அப்படியே பதிவாகி இருக்கே”.
இதையெல்லாம் இழந்த பின், அந்த வாழ்வுக்கு அர்த்தம் இருக்குமா? நீங்களே தீர்மானித்து, ஒரு முடிவுக்கு வாங்க”.
நான் அழுத்திச் சொன்னேன்.
வெளியே வந்ததும், அவனை, அவள் இழுத்து அணைத்துக் கொண்டாள்..
அந்த ஆல்பத்தின் பக்கங்கள், அவர்கள் உள்ளத்தில், திறந்தே இருந்தது.

Leave a comment
Upload