தொடர்கள்
கதை
" குற்றம் பார்க்கின்.. " - மீனா சேகர்

2025930181938636.jpg

அன்றைய பொழுது மிக இனிமையாக விடிந்தது மாலதி சுந்தரேசன் தம்பதிகளுக்கு. மார்கழி மாசத்து சில்லென்ற குளிரோடு சேர்ந்து, இனிமையான திருப்பாவை பாடல்கள் கோயிலிருந்து ஒலிக்கவும் மனதுக்கு ரொம்ப ரம்மியமாக இருந்தது. இருக்காதா பின்னே! இரண்டு வருடங்கள் கழித்து பிள்ளை அரவிந்தனும் மருமகள் பூஜாவும் பேரபிள்ளையுடன் வருகிறார்களே!

ஒரு வாரத்துக்கு மேலாக வீட்டை பார்த்து பார்த்து சுத்தம் செய்து, வெள்ளையடித்து... மேலும் கொஞ்சம் அலங்கரித்து..அவர்களுக்குப் பிடித்த மாதிரி சமைக்க எல்லாவற்றையும் வாங்கி வைத்து, காலில் சக்கரம் கட்டிக்கொண்டு இரண்டு பேரும் பறந்தார்கள். அடுப்பில் சூடாக இட்லி வெந்து கொண்டிருந்தது, ஒரு பக்கம் மணக்க மணக்க சாம்பார் கொதித்துக் கொண்டிருந்தது. சுவாமி நிவேதனத்திற்கு வெண்பொங்கலும் கேசரியும் ரெடியாகிவிட்டது.

வாசலில் ஹாரன் அடிக்கும் சத்தம். பிள்ளை வந்து விட்டான் போலிருக்கிறது. அம்மாவும் அப்பாவும் வாசலுக்கு ஓடினார்கள். காரை திறந்து கொண்டு இறங்கிய அரவிந்தன் அம்மா அப்பாவை நெருங்கி தோளை சேர்த்து அணைத்துக் கொண்டான். ஆனந்த பெருக்கில் கண்கள் கசிய அம்மாவும் அப்பாவும் வாங்க வாங்க என்று வரவேற்க, மூவரும் அவர்களை நமஸ்கரிக்க வீடே கலகலவென்று ஆகிவிட்டது. ஹாய் பாட்டி, ஹாய் தாத்தா என்று பேத்தி ஸ்ரேயா கட்டி முத்தமிட்டாள். பேச்சும் சிரிப்புமாக,மெதுவா குளித்து, சாப்பிட்டு, பிரயாண அலுப்பு தீர மூவரும் மதியம் நன்கு உறங்கி விட்டார்கள்.

மாலை எழுந்து காப்பி குடித்துவிட்டு ஹாலில் மறுபடியும் பேசிக் கொண்டிருந்தபோது பெரிய மாமா எப்படி இருக்காங்க. மார்கழி மாசம் உற்சவத்துக்கு வந்திருக்காங்கன்னு கேள்விப்பட்டேன். நான் நாளைக்கு காலைல மாமாவ பாத்துட்டு வரலாம்னு இருக்கேன்.பூஜாவும் பார்க்கணும்னு சொல்றா.. என்று அரவிந்தன் சொன்னதும் அப்பாவின் முகம் கறுத்தது. அம்மாவின் முகத்தில் லேசான ஒரு பளபளப்பு தெரிந்தது. செல்ல அண்ணன் இல்லையா! அந்த பாசத்தை தான் குறை சொல்ல முடியுமா?.. கண்ணோரம் லேசாக நனைய.. சுதாரித்துக் கொண்டாள்
அப்பாவின் முகத்தைப் பார்த்து அரவிந்தனுக்கு சங்கடமாகி விட்டது மனைவி பூஜாவும், மாறி மாறி இருவரையும் கூர்ந்து கவனித்தாள்...

அப்பாவின் முகத்தைப் பார்த்து அரவிந்தனுக்கு சங்கடமாகி விட்டது மனைவி பூஜாவும், மாறி மாறி இருவரையும் கூர்ந்து கவனித்தாள்...

" பழசெல்லாம் மறந்துட்டு அங்க போகனுங்கறீங்க.. எனக்கு இதுல சுத்தமா இஷ்டம் இல்ல " என்கிறார் அடிக் குரலில்.

" கமான் அப்பா.. அஞ்சு ஆறு வருஷம் ஆகி இன்னும் அதையே நினைச்சுட்டு இருக்க முடியுமா. " என்கிறான் அவர் கையை பிடித்துக் கொண்டு..
" நீ வேணா மறந்து இருக்கலாம்டா ஆனா எனக்கு மறக்கல.. என் பொண்ணு ரம்யா உங்க பிள்ளை அரவிந்தனுக்கு தான் அப்படின்னு வாக்கு கொடுத்துட்டு ஏமாத்தினவன்!"

" அவர் ஏமாத்தினார் எப்படி சொல்ல முடியும் பா? இன்னுமா உங்களுக்கு அப்படி தோணுது?!ரம்யாக்கு அதுல விருப்பமில்லை!.. அவ அப்ப டாக்டருக்கு படிச்சுக்கிட்டு இருந்தா.. தன்னை மாதிரியே ஒரு டாக்டரைக் கல்யாணம் பண்ணிக்கலாம்னு நினைச்சிருந்தா... அதுல என்ன தப்பு இருக்க முடியும்?

தவிர நீங்க பெரியவங்க தான் பேசிகிட்டு இருந்தீங்களே தவிர எனக்கும் அதுல வந்து ஒண்ணும் வருத்தம் கிடையாது.. என்னிக்குமே நாங்க நல்ல கசின்ஸ்.. More than that we are good friends.. "

" நீ லேசா சொல்ற தம்பி என்னால அப்படி இருக்க முடியல" என்றார்

அம்மா முகம் சிவந்து போயிருந்தது. குழந்தை ஒன்றும் புரியாமல் அவள் மடியில் ஏறி உட்கார்ந்து கொண்டது.

அப்பா எனக்கே அதுல வருத்தம் இல்ல அப்படிங்கற போது நீங்க ஏன் அதை மனசுல வச்சுட்டு இருக்கணும்? நம்ம எல்லாருக்கும் புடிச்ச மாதிரி பூஜா எனக்கு மனைவியா வந்ததில் சந்தோஷம் தானே .. அவளும் என்னை மாதிரியே எம் எஸ் படிச்சு என் கூடவே லண்டன்லயே வேலை பாக்குறா.. தோ..உங்க பேத்திக்கும் அஞ்சு வயசு ஆயிடுச்சு.. அக்காவோட கல்யாணத்துக்கு என்னோட படிப்புக்கு அப்படின்னு மாமா எவ்வளவோ உதவி பண்ணி இருக்காரு இல்லையாப்பா.. நல்லதை எடுத்துக்குவோமே..

" அது சரி ஆனந்தி அத்தை எப்படி இருக்காங்க? " என்று நாசுக்காக பேச்சை மாற்றினான்

ஆனந்தி சுந்தரேசனுடைய தங்கை. பக்கத்து டவுனில் தான் இருக்கிறார்.

" எங்கடாப்பா... அத்தையை பார்த்து ரொம்ப நாள் ஆச்சு.. உன் தங்கச்சி கல்யாணத்துல நாங்க என்னமோ சரியா மரியாதை கொடுக்கலன்னு அத்தான் முறுக்கிட்டு இருக்காரு. எனக்கும் அவள பாக்காம கஷ்டமா இருக்கு, போகவும் தயக்கமா இருக்கு... அவளும் புருஷனுக்கு கட்டுப்பட்டு... பாவம்.. " என்றவர் குரல் கம்ம.... சட்டென்று நிறுத்தினார்..

" அங்கிள்" என்றாள் பூஜா மெதுவாக..


அவர் திரும்பி அவளைப் பார்க்க

" நம்ம ஆன்டிக்கும் அண்ணனை பார்க்கலேன்னு அதே மாதிரி வருத்தமா தானே இருக்கும்.. "

பொட்டில் அடித்தாற் போலிருந்தது சுந்தரேசனுக்கு....
பூஜா அப்படி கேட்டவுடன் லேசாக துணுக்குற்ற அம்மா மாலதி பேசாம இரு பூஜா என்றாள்.
அவ சொன்னதுல ஒன்னும் தப்பு இல்லையே அம்மா என்றான்.. அரவிந்தன் மெதுவாக.

அப்பா மெதுவாக எழுந்து உள்ளே சென்று விட்டார். அங்கு ஒரு கனத்த மவுனம் நிலவியது... அந்த இரவு உறக்கம் பிடிக்காமல் அரவிந்தன் பழைய நினைவுகளை அசை போட்டுக் கொண்டிருந்தான். மாமாவின் பிள்ளைகளான விக்னேஷ் ராஜேஷ் மற்றும் ரம்யா மூவருடன் ஒன்றாக ஒரே பள்ளியில் படித்தது, ஏரிக்கரை ஓரங்களில் விளையாடியது.. நாயர் கடையில் டீ வாங்கி நால்வரும் பகிர்ந்து சாப்பிட்டது.. மாமன் தோட்டத்தில் மரமேறி மாங்காயை பறித்து கீழே விழுந்து அடிபட்டது.. பிறந்தநாள் பரிசாக சின்ன சைக்கிளை மாமா அவனுக்கு வாங்கி கொடுத்து ஓட்டவும் சொல்லிக் கொடுத்தது.

பின்னாடி கல்யாணப்.பேச்சு வந்த போது " ரம்யா உன்ன பிரண்டா தான் நினைக்கிறாளாம்பா நான் என்ன பண்றதுன்னு தெரியல" என்று …

அவன் கையை பிடித்துக் கொண்டு லேசாக அழுதது..

மாமா உங்கள பாக்கணும் போல இருக்கு மாமா..என்று மருகியபடி எப்போது உறங்கினானோ தெரியவில்லை...

பொழுது விடிந்தது.. தோட்டத்துச் செடிகளையும் மரங்களையும், பின்புறம் பனி படர்ந்து இருந்த பச்சை மலையையும் பார்த்து கொஞ்சம் மனசு லேசானது. பேப்பர் படித்துக் கொண்டிருந்த அப்பா அவனைக் கண்டதும், " அரவிந்தா இங்க வாப்பா.. உன் விருப்பப்படியே நீ போய் உங்க மாமன பாத்துட்டு வா. எத்தனை நாளைக்கு இங்கே தாமசம்னு கண்டுகிட்டு வா... அதுக்கப்புறம் அம்மாவை கூட்டிட்டு நானும் வரேன் " என்றார் புன்னகைத்தபடி

ஐய்யா!! அப்பா, அப்பா தான் என்று அவர் கழுத்தை கட்டிக்கொண்டான்
உற்சாகமாய் விசில் அடித்தபடி அவனுக்கு மிகவும் பிடித்த, மாமன் வாங்கத் தந்த சைக்கிளை துடைத்து, பக்கத்து கடையில் கொடுத்து சரி செய்து எடுத்துக் கொண்டு நாலு தெரு தள்ளி இருக்கும் மாமனைப் பார்க்க கிளம்பி விட்டான்.

பூஜாவையும் அம்மா அப்பாவையும் மதியம் காரில் அழைத்துப் போகலாம் என்று நினைத்தபடி..

"தென்மதுரை வைகை நதி" என்று பாடல் ஒன்று உல்லாசமாய் அவன் வாயில் மிதந்து வந்தது... மாமன் வீட்டை நெருங்கும்போது ஜன்னலில் ரம்யா அவனை பார்த்து சந்தோஷமாகக் கை அசைத்தாள்!