தொடர்கள்
தொடர்கள்
நயத்தகு    நற்றிணை 42 - மரியா சிவானந்தம் 

2025931111056991.jpg

கொடைக்குணம் மிக்கவன் அத்தலைவன்.

வாரி வழங்கும் மனம் கொண்டவன் அவன் .

கேட்பவருக்கு அள்ளிக் கொடுப்பதற்காகவே அவன் பொருள் தேட அயலூர் சென்று இருக்கிறான்.

அவன் வரவுக்காக காத்திருக்கும் காதலி உடல் நலிந்துப் போகிறாள்.

காதலன் என்று திரும்பி வருவான்? என்று காத்திருந்து சோர்ந்துப் போகிறாள்.

அவளது நிலை கண்டு தோழி பெரிதும் கவலைக்குள்ளாகிறாள்.

"உன்னை விட்டுச் சென்ற காதலன் திரும்பி வரும் வரை நீ பொறுமை காத்தல் வேண்டும் " என்று தலைவிக்கு அறிவுரை கூறுகிறாள் அவள்.

" அவன் வரும் வரை என் உடல் நலம் கெடாமல் இருக்குமோ? " என்று பதில் மொழி கூறுகிறாள் அத்தலைவி.

" முழங்கும் கடல் நீரை முகந்த, சூல் கொண்ட கரிய மேகம் காணும் திசையெல்லாம் பரவி மழையாக பொழியும். அந்த மலைப்பகுதியில் மின்னல் ஒளிர, இடி முழங்க அங்குள்ள பாம்பு பயந்து ஒளிந்துக் கொள்ளும் . வானுயர்ந்த குன்றங்களில் பெருமழை பெய்திடும் .

முரசொலி எழுப்பும் புலையன் கைபட்டு ஒலிக்கும் "தண்ணுமை" முரசின் ஒலியைப் போல அந்த மலை அருவி எழுப்பும் ஒலி இருக்கும்.

இத்தகைய பெருமை மிக்க நாட்டின் தலைவன் என் காதலன் .

"அவன் தண்ணீரைப் போன்றவன். பேரன்பு கொண்டவன்" என்றெல்லாம் .அவனிடம் பரிசில் பெறும் புலவர்கள் அவனைப் புகழ்ந்துக் கூறும் மொழிகளை நான் கேட்கும் காலம் வரை என் உடல் நலம் கெடாமல் இருக்குமோ ? அல்லது மணலில் புதைந்த தேரையின் அழகு கெடுவது போல என் அழகு சிதைந்து , என் நலம் கெடுமோ ? " என்று கவலை கொள்கிறாள் தலைவி .

வள்ளல் குணம் கொண்ட ஒரு சங்கத்தமிழனை அறிமுகம் செய்யும் பாடல் இது . "தண்ணீரின் தன்மை கொண்ட நல்லவன், அனைவரிடமும் பேரன்பு கொண்டு வாழ்பவன்" என்ற பொருளில் வரும் “நீர் அன நிலையன் பேர் அன்பினன்” என்னும் வரி அழகானது.

முழங்கு கடல் முகந்த கமஞ் சூல் மா மழை

மாதிர நனந் தலை புதையப் பாஅய்,

ஓங்கு வரை மிளிர ஆட்டி, பாம்பு எறிபு,

வான் புகு தலைய குன்றம் முற்றி,

அழி துளி தலைஇய பொழுதில், புலையன்

பேழ் வாய்த் தண்ணுமை இடம் தொட்டன்ன,

அருவி இழிதரும் பெரு வரை நாடன்,

''நீர் அன நிலையன்; பேர் அன்பினன்'' எனப்

பல் மாண் கூறும் பரிசிலர் நெடுமொழி

வேனில் தேரையின் அளிய,

காண வீடுமோ தோழி! என் நலனே?

நற்றிணை 347

இப்பாடலை எழுதியவர் பெருங்குன்றூர் கிழார் என்னும் புலவர்.

மலைவளம் பாடும் குறிஞ்சித்திணை பாடல் இது

மேலும் ஓர் நல்ல பாடலுடன் சந்திப்போம்

தொடரும்