தொடர்கள்
கொடுரம்
17 லட்சம் பேர் பலி ஆண்டு தோறும் - மாலா ஶ்ரீ

20251001080028998.jpeg

இந்தியாவில் காற்று மாசுபாட்டின் தாக்கங்கள் குறித்து ஐ.நா-வின் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த 128 நிபுணர்கள் மற்றும் 71 கல்வி நிறுவனங்கள் இணைந்து, சமீபத்தில் விரிவான ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின்படி, கடந்த 2022-ம் ஆண்டில் மட்டும் இந்தியாவில் சுமார் 17 லட்சத்துக்கும் அதிகமானோர் காற்று மாசுபாடு காரணமாக உயிரிழந்துள்ளனர் என்ற தகவல் தெரியவந்துள்ளது. இது, கடந்த 2010-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 38 சதவிகிதம் அதிகரிப்பாகும். இந்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை, அதே காலகட்டத்தில் பதிவான கொரோனா நோய்தொற்று மரணங்களின் மொத்த எண்ணிக்கையைவிட மிக அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், ஃபாசில் ஃபுயல் என்று சொல்லப்படும் புதை வடிவ எரிபொருட்களை தொடர்ந்து சார்ந்திருப்பதே இப்பேரழிவுக்கு முக்கிய காரணம் என்று ஆய்வு தகவல்கள் குறிப்பிடுகின்றன. குறிப்பாக, அனல் மின்நிலையங்களில் பயன்படுத்தப்படும் நிலக்கரியால் சுமார் 4 லட்சம் பேரும், சாலை போக்குவரத்தில் பயன்படுத்தப்படும் பெட்ரோலால் சுமார் 2.7 லட்சம் பேரும் உயிரிழந்துள்ளனர். இதுதவிர, கிராமப்புறங்களில் சமையலுக்கு விறகு, சாணம் போன்ற திட எரிபொருட்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் வீட்டு உபயோக மாசுபாடும் மிகப்பெரிய அபாயமாகத் தொடர்கிறது. இந்த மாசுபாட்டினால் ஏற்படும் உடல்நலக் கேடுகள் மட்டுமின்றி, நாட்டின் பொருளாதாரமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளது.

காற்று மாசுபாட்டின் பேரழிவு தாக்கங்களுக்கான ஆதாரங்கள் வலுப்பெற்று வருகின்றன. சுத்தமான காற்றுக்கான உத்திகளை தேசிய சுகாதாரம் மற்றும் வளர்ச்சி திட்டமிடலில் ஒருங்கிணைக்க வேண்டும் என்று சுற்றுச்சூழல் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்து வலியுறுத்துகின்றனர்.

ஐம்பூதங்களையும் கெடுப்பதில் மனிதனுக்கு இணையே இல்லை.

இந்த பூமி நம் முன்னோர்களிடமிருந்து பெற்ற சொத்து அல்ல, நம் வருங்கால சந்ததிகளிடமிருந்து நாம் வாங்கியிருக்கும் கடன் என்பது புரிந்தால் மட்டுமே இது மாறும்.