தொடர்கள்
கதை
மனசு - ராஜஸ்ரீ முரளி (முத்திரை கதை)

20251001070235721.jpeg

குணாவும், குழலி தம்பதி சென்னைக்கு மிக அருகில் உள்ளது என்று நம்பி வாங்கியிருந்த இடத்தில், வேறு வழியின்றி வீடு கட்டி குடியேறினர். அங்கங்கே வீடுகள் முளைக்கத் தொடங்கின.

அன்று மதியம், குணா ஆபீஸுக்கு சென்றிருந்தான். நான்காம் வகுப்பு படிக்கும் மகள் பள்ளிக்குச் சென்றிருந்தாள். குழலிக்கு தூக்கம் கண்களைச் சுழற்றியது.

அந்த நேரத்தில், கதவைத் தட்டும் சத்தம் கேட்டது. புருவத்தைச் சுருக்கி, “யாரு இந்த நேரத்துல?” என்று நினைத்து, அலுத்தபடியே கதவைத் திறந்தாள்.

வாசலில் — வறுமையின் மொத்த உருவாக, இடுப்பில் பெண் குழந்தையுடன், கிழிசலான புடவையை அணிந்திருந்த ஒரு பெண் நின்றிருந்தாள்.

“அம்மா, ஏதாவது பழைய புடவையும், பாப்பாவுக்குப் கவுனும் இருந்தா தாங்க… நீங்க நல்லா இருப்பீங்க,” என்றவளை,
“போறயா… அதெல்லாம் ஒன்னும் இல்லை!” என்று குழலி துரத்தினாள்.

அதன்பின், பாத்திரக்காரனுக்கு போட வேண்டிய மூட்டையைப் பிரித்து, ஏதாவது தரலாமா என்று தேடினாள். அவளுக்கு தருவதற்கு மனசு வரவில்லை. ஆனால் பாத்திரக்காரனுக்குச் எல்லாவற்றையும் போட்டுவிட்டாள்.

“பெரிய டப்பா ஏமாந்து தந்துட்டான்…” என்று சிரித்தபடியே ஜன்னல் வழியாகப் பார்த்தாள்.

அங்கே —

சற்றுமுன் வாசலில் நின்ற பெண், தனது வெளுத்துப் போன நீலப் புடவையை கையில் வைத்தபடி, குழந்தைக்கு ரோஸ் நிறக் கவுனை அணிவித்து, அழகைப் பார்த்து மகிழ்ந்தாள்.

தூரத்தில், பாத்திரக்காரன் சைக்கிளில் செல்வதைப் பார்த்தாள்.