
பூபதியின் குடும்பம் இரண்டு மகள்கள், மனைவியை உள்ளடக்கியது. ஒவ்வொரு முறையும் அடுத்தது பையனாக இருக்கும் என்று நினைத்தவருக்கு தொடர் இணைப்புகளாக பெண்களாகவே அமைந்தது காலம் செய்துவிட்டக் கோலம். மகள்களை கரை சேர்ப்பது பற்றிய கவலை அவருடைய மனைவி கமலாவுக்கு இருந்துக் கொண்டே இருந்தது.
சென்னையில் அவர் வசித்து வந்த அந்த வாடகை அடுக்ககத்தில் இருந்த எல்லா குழந்தைகளும் தனியார் பள்ளியில் படித்து வந்தனர். இவர்கள் குழந்தைகள் மட்டும் கார்ப்பரேஷன் பள்ளியில் இலவசமாக படித்தால், மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ? என்ற மனக் கவலை வேறு.அதனால் அவரின் மகள்களுக்கு இலவச கல்வி இல்லாமல் போனதால் ஆன கூடுதல் செலவு வேறு.
வாடகை ஆட்டோ ஓட்டி அன்றாட பிழைப்பை நடத்தி வரும் பூபதிக்கு கடன் வாங்குவது வாடிக்கையாகி விட்டது. ஒரு வழியாக முதல் மகளுக்கு எப்படியோ கல்யாணத்தை முடித்து விட்டார்.
அடுத்த மகள் ஒருத்தி பட்டப் படிப்பை முடித்து இருந்தாள். அவருடைய மச்சானுக்கு பையன் இருந்தாலும் அவர் இவருடைய பெண்ணுக்கு தன்னுடைய மகனை கொடுக்கத் தயாராக இல்லை. சொந்தம் என்பது பணத்தால் மட்டும் அளக்கப்படுவது என்பதை பூபதி நன்கு புரிந்து வைத்திருந்தார். வழக்கமாக இருக்கும் அண்ணி- நாத்தனார் உறவில் சுமூகம் இல்லை. எனவே தன்னுடைய மகள் அங்கு வாழ்க்கைப்பட்டால் எதிர்காலத்தில் உறவில் பிரச்சனைகள் பெரிதாக விடும் என்ற கவலை அவளுக்கு. அதனால் அவள் அதில் அதிக அக்கறையைக் காட்டவில்லை.
அவருடைய மனைவி அவ்வப்பொழுது இலவச மாதத் தவணை என்ற பெயரில் மாதந்தோறும் பல பொருட்களை வாங்கி அவனை மேலும் கடனாளி ஆக்குவதில் பெரும்பங்கினை எடுத்துக் கொண்டாள். இப்படியே கொஞ்சம் கொஞ்சமாக வாங்கி, வாங்கி எல்லா கடனையும் சேர்த்து பூபதிக்கு ரூபாய் 6 லட்சம் கடன் இருந்து வந்தது.
இதில் பெரிய கடன் அவனுடைய மச்சானிடம் வாங்கிய ஐந்து லட்ச ரூபாய் கடன்தான்.அதற்கு அளிக்கும் அவன் டார்ச்சர் அதிகம்தான். இந்தக் கடனை எப்படி அடைப்பது என்ற கவலையில் மூழ்கி இருந்தார் பூபதி.
அந்தவேளையில்தான் அவருடைய இரண்டாவது மகள் கல்பனாவுக்கு மாப்பிள்ளை பார்க்கும் வைபவம் தொடங்கியது. அப்பொழுது பார்த்து பெண்களுக்கு கல்யாணச் சந்தையில் தேவை அதிகமாக இருந்தது. வரிசையாக மாப்பிள்ளை பையன்கள் வந்து நின்றார்கள்.ஆனால் அவரின் மகள் கல்பனா போட்ட நிபந்தனைகளுக்கு யாரும் அசைந்து கொடுக்கவில்லை கடைசியாக ஐ.டி.துறையிலிருந்து ஒரு பையன் வந்தான். அந்த மகேஷ் கல்பனாவுடன் கல்லூரியில் ஒன்றாக படித்தவன். கல்பனாவுக்கு கல்லூரியில் சீனியர். அப்போதே கல்பனாவின் ஓர விழிப் பார்வைக்கு ஏங்கித் தோற்றவன்.
‘இன்று அவனே எதிர்ப்பார்க்காமல் கல்பனாவை பெண் பார்க்க வந்திருக்கிறான். தரகரை கூடுதலாக கவனித்து, ’எப்படியாவது இந்த கல்யாணத்தை முடித்து வைச்சுடுங்க”என்று மன்றாடினான்.
கல்யாணத் தரகர் பெண் வீட்டிற்கு தூது சென்றார். ’நானே கல்யாணம் பண்ணிக் கொள்கிறேன். செலவை எல்லாம் நானே பார்த்துக் கொள்கிறேன்.’என்று மாப்பிள்ளைப் பையன் மகேஷ் சொன்ன செய்தி பெண் வீட்டார் காதில் தேனாய் இனித்தது.
இந்த நேரத்தில்தான் கல்யாணப்பெண் கல்பனாவுக்கு ஓர் ஐடியா தோன்றியது. ’கல்யாணத்தை ஒரு கோவிலில் சிம்ப்பிளா பண்ணிடுங்க. ஓர் ஆறு லட்சம் ரூபாய் மட்டும் எங்களுக்கு கொடுத்து விடுங்கள்’ என்ற ஒரு நிபந்தனையை கல்பனா போட்டாலே பார்க்கலாம். பெண்கள் வரதட்சனை வாங்கக் கூடாதா என்ன?
நிபந்தனைகளுக்கு மகேஷ் ஒப்புக் கொண்டான்.பெண் கிடைக்காத நிலையில் அவனுக்கு வேறு வழி தெரியவில்லை.அவனுக்கு பிடித்த பெண் கல்பனாவைச் சுற்றியே வந்தது அவன் மனம்.
அடுத்த ஒரு வாரத்தில் ஒரு கோவிலில் மிக எளிமையாக அவர்களின் திருமணம் நடந்தது. 6 லட்ச ரூபாய் மகேஷிடமிருந்து வாங்கிய மணப்பெண் தன் அப்பாவிடம் கொடுத்து மாமாவின் கடனை அடைக்கச் சொன்னாள். ஐந்து பெண் பெற்றால் அரசுனும் ஆண்டி என்ற சொல்லாடலை கல்பனா பொய்ப்பித்தாள். பெற்றோர் இல்லாத மகேஷ் கல்பனாவின் அப்பா,அம்மாவை தம் சொந்த பெற்றோர்களாய் பாவித்தான்.
அவன் வாழ்க்கையில் வசந்தம் வீசத் தொடங்கியது.

Leave a comment
Upload