
நைவேத்திய பிரியர் என்று பக்தர்களால் பரவசத்துடன் அழைக்கப்படும் ஏழுமலையானுக்குக் காலை சுப்ரபாதம் தொடங்கி, இரவு ஏகாந்த சேவை வரை பலவிதமான நைவேத்தியங்கள் படைக்கப்படுகின்றன. ஏழுமலையானுக்கு நைவேத்தியம் என்பது ஆகம விதிப்படி இங்கே பின்பற்றப்படுகிறது. திருமலையில் பொங்கல், தயிர்ச்சாதம், புளிசாதம், சித்திரான்னம், வடை, முறுக்கு, ஜிலேபி, அதிரசம், போளி, அப்பம், லட்டு, பாயசம், தோசை, ரவாகேசரி, பாதாம் கேசரி, முந்திரிப்பருப்பு கேசரி போன்ற பிரசாதங்கள் தினமும் பெரிய அளவில் தயார் செய்யப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்படுகின்றன. இத்தனை விதவிதமான பிரசாதங்கள் செய்யப்பட்டாலும் தினமும் ஒரு புதிய மண் சட்டியில் தயிர்ச் சாதம் மட்டுமே நைவேத்தியத்திற்காகக் கோயில் கர்ப்பக்கிருகத்திற்குள் குலசேகரப் படியைத் தாண்டி எடுத்துச் செல்லப்படுகிறது. மற்ற எந்த பிரசாதமும் குலசேகர படியைத் தாண்டாது. இதுவே அவருக்கு மிகவும் பிடித்தமான உணவாகக் கருதப்படுகிறது. இது பல நூற்றாண்டுகளாகப் பின்பற்றப்படும் ஒரு மரபு. இப்படி மண்சட்டியில் தயிர்ச்சாதம் நிவேதனம் செய்யப்படுவதன் பின்னணியில் பக்தி பூர்வமான ஒரு வரலாறும் உண்டு.

ஏழுமலையானுக்குப் படைக்கப்பட்ட தயிர்ச்சாதம் மற்றும் மண் சட்டி ஆகியவற்றைப் பிரசாதமாகப் பெறுவது என்பது சாதாரணமான விஷயமல்ல. அவ்வாறு கிடைப்பது வாழ்வில் மிகப்பெரிய பாக்கியமாகப் பக்தர்களால் கருதப்படுகிறது.
திருமலை குலசேகர படி:
திருமலை குலசேகர படி என்பது திருப்பதி பெருமாள் கோயிலின் கருவறைக்கு முன்பு உள்ள படியாகும்.
பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான குலசேகர ஆழ்வார், திருப்பதிக்கு வந்து பெருமாளைத் தரிசித்தபோது, தன்னையே படிக்கல்லாக எண்ணி, பெருமானின் திருவடிகளை எப்போதும் சேவித்து மகிழும் வரத்தை இறைவனிடம் வேண்டிப் பெற்றதாகக் கூறப்படுகின்றது.

“செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே
நெடியானே வேங்கடவா நின்கோயி லின்வாசல்
அடியாரும் வானவரு மரம்பையரும் கிடந்தியங்கும்படியாய்க் கிடந்துன் பவளவாய் காண்பேனே”
- குலசேகராழ்வாரின் பெருமாள் திருமொழி
புதர்போல் மண்டிக்கிடக்கும் என் பாவ புண்ணியங்கள் என்னும் வலிமையான வினைப்பயன்களைத் தீர்த்து உன் திருவடிகளில் சேர்க்கும் திருமகள் தலைவனே! எல்லாவற்றிலும் விடப் பெரியவனே! உயரமானவனே! திருவேங்கடவா! உனது சந்நிதியின் திருவாசலில் அடியவர்களும் தேவர்களும் கால்வைத்து ஏறி இறங்கும் படியாகக் கிடந்து காலம் காலமாய் உனது பவளவாயின் அழகைக் கண்டு மகிழ்வேனே!
குலசேகர ஆழ்வாரின் பக்தியைப் போற்றும் வகையில், கருவறைக்கு முந்தைய படிக்கு அவருடைய பெயர் சூட்டப்பட்டது. படிக்கல்லாகத் தன்னை மாற்றிக்கொண்ட குலசேகர ஆழ்வாரின் பக்தியின் மகத்துவத்தை இது விளக்குகிறது.
புது மண்சட்டியில் தயிர்ச்சாதம்:
திருப்பதியில் பீமய்யா என்ற குயவன் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் ஏழுமலையானின் தீவிர பக்தர். தனது குலத்தொழிலான மண்பாண்டங்கள் செய்வதில் தன் நேர்மை தவறாமல் ஏழுமலையான் மீது அயராத பக்தி கொண்டு செய்து வந்தார்.
ஏழுமலையானும் அவரது பக்திக்கு மெச்சி, தன் திருவுருவத்தை அவருக்குக் கனவில் காட்டி பின்பு மறைந்து விட்டார். பீமய்யாவும், தனது கனவில் தோன்றிய ஏழுமலையானின் உருவத்தை மண்ணால் வடித்து வணங்கினார். பூஜிக்கப் பூக்கள் வாங்கக் கூட பணம் இல்லை. அதனால் தினமும் தன் வேலையில் மீதமாகும் சிறிதளவு களிமண்ணை வைத்து பூக்களைச் செய்து வந்தார். அப்படிச் செய்த பூக்களைக் கோர்த்து, மண் பூ மாலையாகச் செய்து பெருமாளுக்கு அணிவித்தார்.
இந்த நாட்டை ஆண்ட தொண்டைமான் சக்கரவர்த்தியும் ஏழுமலையானின் தீவிர பக்தர். இவர் சனிக்கிழமைகளில் தங்கப்பூ மாலையை அணிவிப்பார். அப்படி அவர் ஒரு வாரத்தில் பெருமாளுக்குத் தங்க பூ மாலை அணிவித்து விட்டு மறு வாரத்தில் சென்று பார்க்கும் போது தங்க பூ மாலைக்குப் பதிலாகக் களிமண்ணால் செய்யப்பட்ட மாலை பெருமாள் கழுத்தில் இருந்தது. இதனைக் கண்ட தொண்டைமான் குழப்பத்தில் ஆழ்ந்தார். அவர் கனவில் தோன்றிய பெருமாள், குயவனின் பக்தியால் களிமண் மாலையைத் தான் ஏற்றுக் கொண்டதாகவும், குயவனுக்குத் தேவையான உதவியைச் செய்யுமாறும் அரசனிடம் கூறினார். திருமாலின் ஆணைப்படி குயவன் இருக்கும் இடத்திற்குச் சென்ற அரசன், அந்த பக்தரைக் கௌரவித்தார்.

பெருமாள் மீது குயவன் வைத்திருந்த பக்தியைக் கௌரவிக்கும் பொருட்டு, திருமலையில் எழுந்தருளியிருக்கும் ஏழுமலையானுக்குக் கோடிக்கணக்கான ரூபாய் பெறுமானமுள்ள தங்கநகைகளை அணிவிக்கப்பட்டிருந்தாலும், இன்றும் ஏழுமலையானுக்குப் பிரசாதமாகத் தினம் ஒரு புது மண்சட்டியில் செய்யப்பட்ட தயிர்ச்சாதத்தைத்தான் நைவேத்தியம் செய்கின்றனர்.
திருப்பதி ஏழு மலையானே போற்றி.! போற்றி..!!
கோவிந்தா.! கோவிந்தா..!! ஓம் நமோ நாராயணா..!!!


Leave a comment
Upload