தொடர்கள்
தொடர்கள்
மஹாபாரத மாந்தர்கள் குறள் வழி ! தருமன் - தமிழ்நந்தி

20251001082926750.jpg

பஞ்சபாண்டவர்களில் மூத்தவனான தருமன் பொறுமையின் அடையாளமாக விளங்கினான். எந்நிலையிலும் கோபப்படாத தருமன் ராஜசூய யாகம் செய்து புகழடைந்து இந்திரப்ரஸ்தத்தில் ஆட்சி செய்தான். சகுனியின் திட்டப்படி துரியோதனனின் அழைப்பை ஏற்று தந்தையின் கட்டளைப்படி அஸ்தினாபுரம் வந்து மண்டபத்தில் சூதாட்டத்தில் பங்கேற்று தருமன் (உடை, செல்வம், உணவு) இழந்தது ஊழ் வினையால். பின் குருஷேத்திரப் போரில் கௌரவர் அனைவரும் மாண்டனர்

எந்நிலையிலும் தருமன் கோபம் கொண்டதில்லை. "தம்பி சகாதேவா எரி தழல் கொண்டு வா அண்ணன் கையை எரித்திடுவோம்" என பீமன் ஆவேசப்பட்டபோதும், அஞ்ஞான வாசத்தில் கங்கராக விராடனிடம் பகடையால் அடிபட்ட போதும் கோபம் கொள்ளவில்லை. துரோணர், பீஷ்மர், விதுரன் ஆகியோரால் பயிற்றுவிக்கப்பட்ட தருமன் வியாசர் போன்ற முனிவர்களிடம் நல்லதை கேட்டு அதன்படி விளங்கி யட்சகனுடனும் பீமனைப்பிடித்த மலைப்பாம்புடனும்(நகுஷன்) கோபப்படாமல் அறிவுப்பூர்வமாக சரியான விளக்கங்களை வனவாச காலத்திற்கு கூறி ஆபத்துகளில் இருந்து காப்பாற்றினான்.

தங்களை வனவாசத்துக்கு அனுப்பிய துரியோதனன் கந்தர்வர்களால் சிறைபிடிக்கப்பட்டபோதுகூட அர்ஜுனனை அனுப்பி விடுவித்தான். வனவாச காலத்தில் வறுமையில் உழன்ற போதும் நற்பண்புகள் உதவின. அஞ்ஞான வாசத்திலும் கூட. பெரியோர்களின் துணை கொண்டு அரசாட்சி செய்வதில் வல்லவரான தருமருக்கு அஞ்ஞான வாச காலத்தில் அந்த குணம் திறமை உதவியாக இருந்தது. பெரியோர்களின் இனத்தில் சேர்ந்ததால் எளிதாக மன்னர்களின் உதவி கிடைத்து. ஏழு அக்ரோணி எண்ணிக்கை கொண்ட பாண்டவ சேனையை அமைக்க முடிந்தது.

போர்க்களத்தில் பீமன் அஸ்வத்தாமன் என்ற யானையை கொன்றதை துரோணர் ஐயத்துடன் தருமரை கேட்க தருமர் பொய்யுரைக்க உடன் தேர் நாலு அங்குலம் கீழ இறங்கி மண்ணை தொட்டது.

கௌரவர்களின் வீழ்ச்சிக்கு பின் அரச பதவி ஏற்று நல்லாட்சி செய்தான்

குறளும் பொருளும்

உடை, செல்வம், உணவுகள், படிப்பு எதுவுமே சூதாடுபவருக்கு கிடையாது.

உடை செல்வம் ஊண் ஒளி கல்வி என்று ஐந்தும்

அடையாவாம் ஆயம் கொளின் 939

இழக்கும் விதி பேதையாக்கும்; ஆவதற்கு காரணமான விதி அறிவை அதிகரிக்கும்.

பேதைப்படுத்தும் இழ ஊழ் அறிவகற்றும்

ஆகல் ஊழ் உற்றக்கடை 372

நாணம் ஓர் ஆபரணம் போல; இது இல்லையேல் பெருமிதத்துடன் தெருவில் நடக்க முடியாது.

அணி அன்றோ நாணுடைமை சான்றோர்க்கு அஃதின்றேல்

பிணியன்றோ பீடு நடை 1014

மனதில் கோப எண்ணங்களை இல்லாதவனுக்கு நினைப்பதெல்லாம் உடனே அவனை வந்தடையும்.

உள்ளியது எல்லாம் உடன் எய்தும் உள்ளத்தால்

உள்ளான் வெகுளி எனின் 309

கோபப்படுபவர்கள் செத்தவர்களுக்கு சமம்; அதை விட்டவர்கள் துறவிகளுக்கு சமம் ஆவார்.

இறந்தார் இறந்தார் அனையர் சினத்தை

துறந்தார் துறந்தார் துணை 310

ஒருவன் பலமாக கொழுந்து விட்டு எரியும் நெருப்பில் விழுந்ததைப் போன்ற துன்பத்தை செய்த போதும் கூடுமானால் அவனிடம் கோபம் கொள்ளாதிருப்பது நல்லது.

இணர் எரி தோய்வு அன்ன இன்னா செயினும்

புணரின் வெகுளாமை நன்று 308

கெடுதல் செய்பவர்களுக்கு தண்டனை அவர்கள் வெட்கப்படும்படி நன்மை செய்து விடுவது தான்.

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண

நன்னயம் செய்துவிடல் 314

திரும்ப அடித்தவர்களுக்கு ஒரு நாள் சந்தோஷம்; பொறுத்துக் கொண்டவர்களுக்கு உலகம் அழியும் வரை புகழ்.

ஒறுத்தார்க்கு ஒரு நாளை இன்பம் பொறுத்தார்

பொன்றும் துணையும் புகழ் 156

கெடுதல் செய்பவர்களுக்கும் நன்மை செய்யாவிட்டால் நற்குணம் பயனற்றது.

இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யாக்கால்

என்ன பயத்ததோ சால்பு 987

கேள்வி அறிவால் துளைக்கப்படாவிட்டால் காது கேட்டு என்ன பிரயோசனம்?

கேட்பினும் கேளாத் தகையவே கேள்வியால் தோட்கப்படாத செவி 418

எந்த அளவுக்கு நல்லவைகளை கேட்கிறோமோ, அந்த அளவுக்கு நிறைந்த பெருமை தரும்.

எனைத்தானும் நல்லதை கேட்க அனைத்தானும்

ஆன்ற பெருமை தரும் 416

நற்குணத்தின் வலிமை உள்ளவர்களுக்கு வறுமை இழிவானதல்ல.

இன்மை ஒருவற்க்கு இளிவன்று சால்பென்னும்

திண்மை உண்டாகப் பெறின் 988

பெரியவர்களை போற்றி நட்பு கொள்வது பெரிய பலமும் ஆகும்.

தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்

வன்மையுள் எல்லாம் தலை 444

பெரியவர்களின் இனத்தில் சேர்ந்து விட்டால் பகைவர்களால் எதுவும் செய்ய முடியாது.

தக்கார் இனத்தனாய் தான் ஒழுக வல்லானை

செற்றார் செயற்கிடந்ததில் 446

ஒரு செயலை யாரைக்கொண்டு நடத்துவது?

அதில் அவருக்கு பழக்கம் உண்டா?

அவரால் செய்து முடிக்க முடியுமா?

இன்ன பிற காரணங்களை முன்கூட்டி எண்ணி ஆராய்ந்து அவற்றிற்கு பொருத்தமானவர்களிடம் அந்த செயலை விட்டு விட வேண்டும். அதில் தான் பிறகு தலையிடாமையும் வேண்டும்.

இதனை இதனான் இவன் முடிக்கும் என்றாய்ந்து

அதனை அவன்கண் விடல் 517

உள்ளம் அறிய பொய் சொன்னால் மனசாட்சி சுடும்.

தன்நெஞ்சு அறிவது பொய்யற்க பொய்த்தபின்

தன்நெஞ்சே தன்னைச் சுடும் 293