
திரை உலகமே கண்ணீரில் மிதக்க, தன்னுடலை நீத்தார் ஏவிஎம் சரவணன்.
ஏவிஎம் என்ற மூன்றெழுத்து தமிழ் சினிமாவின் வரலாற்றில் முக்கியமான பெயர்.
'பூம்' ஒலியுடன் சுழலும் உலக உருண்டை திரையில் சுழலும் போதே ரசிகர்கள் நிமிர்ந்து அமர்வார்கள்.

பலவிதமான கதை அமைப்பு, பல கதாநாயகர்கள் , இயக்குனர்கள் ஒன்று சேர்ந்திட வெற்றி பெற்ற பல திரைப்படங்களை வழங்கிய நிறுவனம் ஏவிஎம்.
அந்த வெற்றிகளுக்குப் பின்னால் இருப்பது அதை நிறுவிய மெய்யப்ப செட்டியாரின் உழைப்பும் , அதை தக்க வைக்க அவர் மகன்கள் காட்டிய அர்ப்பணிப்பு கலந்த முயற்சிகளும்

ஏவிஎம் ஸ்டூடியோ திரைத்துறையில் இரை தேடும் ஆயிரக்கணக்கான பறவைகளின் வேடந்தாங்கல்.
ஏவிஎம் மெய்யப்பச் செட்டியாரால் 1945 ஆம் ஆண்டில் துவக்கப்பட்டு ஆலமரமாக கிளை பரப்பி இருக்கும் கனவுத் தொழிற்சாலையின் திருத்தலம் . இங்கு கால் படாத நடிகரோ ,இயக்குனரோ, தொழில் நுட்ப கலைஞனோ இருக்க முடியாது.
மெய்யப்பச் செட்டியார் இருக்கும் போதே அவரது மகன்கள் திரைத்துறைக்கு வந்து ஸ்டூடியோ நிர்வாகம் மற்றும் திரைப்படத் தயாரிப்புகளில் ஈடுபட்டனர் .
ஏவிஎம் சரவணன் முதலில் மாமியார் மெச்சிய மருமகள் , தெய்வப்பிறவி என்ற படங்களில் தயாரிப்பு நிர்வாகியாக திரைத்துறையில் நுழைந்தார்.
தொடர்ந்து கமலஹாசனை குழந்தை நட்சத்திரமாக அறிமுகப்படுத்திய களத்தூர் கண்ணம்மா, பாவமன்னிப்பு ,பச்சை விளக்கு , அன்னை, சர்வர் சுந்தரம், குழந்தையும் தெய்வமும் , மேஜர் சந்திரகாந்த்,அன்பே வா, உயர்ந்த மனிதன் என்று பல படங்களில் பணியாற்றினார் .

கறுப்பு வெள்ளை காவியங்களைத் தொடர்ந்து, அவரது தந்தை மறைவுக்குப் பிறகு சரவணனின் தயாரிப்பில் பல வெற்றிப்படங்கள் வந்தன.
கமலின் சகலகலாவல்லவன், உயர்ந்த உள்ளம் , ரஜனியின் முரட்டுக்காளை , போக்கிரி, ராஜா சின்ன ரோஜா, சிவாஜி , பாரதிராஜாவின் ஏவிஎம்மின் புதுமைப்பெண் , பாக்யராஜின் முத்தானை முடிச்சு , மகேந்திரனின் முள்ளும் மலரும், விசுவின் சம்சாரம் அது மின்சாரம், ராஜிவ் மேனனின் மின்சார கனவு என்று ஏவிஎம்மின் வெற்றிப்பட பட்டியல் முடிவின்றி நீள்கிறது.

கதைத் தேர்வு, கதாபாத்திரங்களுக்கு ஏற்ற நடிகர்கள் தேர்வு, பூஜையின் போதே ரிலீஸ் தேதியை அறிவித்தல் , பிரும்மாண்ட செட்களுடன் படங்களைத் தயாரித்தல் என்று அவர் திரைப்படத் தயாரிப்பில் காட்டிய அக்கறையில் பிறந்த படங்கள். மின்சார கனவு , சம்சாரம் அது மின்சாரம் இரண்டும் தேசிய விருது பெற்றன.
மாநகர ஷெரிப் ஆக இரண்டு ஆண்டுகள் பதவி வகித்தார்.
கலைமாமணி பட்டம் பெற்றவர் ஏவிஎம் சரவணன்.ராஜா சின்ன ரோஜாவில் முதல் முதலாக அனிமேஷன் காட்சிகளைப் புகுத்தியவர் அவர்

சினிமா எடுக்க பயன்படுத்திய திரைப்பட கருவிகளை கொண்டு உருவக்கப்பட்ட ஏவிஎம் ஹெரிடேஜ் மியூசியம் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு சினிமாவின் வரலற்றைச் சொல்லும் முயற்சி.

77 ஆண்டுகள் .....
177 திரைப்படங்கள், மற்றும் தொலைக்காட்சித் தொடர்கள் என்று வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையில் ஏவிஎம் நிறுவனத்தின் சாதனை சிறியது அல்ல, அதைச் சாத்தியமாக்கியதில் சரவணனின் பங்கும் பெரியது

ஏவிஎம் சரவணன் சிறந்த நிர்வாகியாக , வெற்றிபெற்ற தயாரிப்பாளர் என்ற அடையாளங்களால் மட்டும் அறியப்படுபவர் அல்லர்.
அவரது கண்ணியம் மிக்க பண்புகளும் , அடக்கம் மிக்க பேச்சும் எல்லோரையும் மதித்து நடக்கும் எளிமையும் அவரது தனித்துவம் மிக்க பண்புகளாக மிளிர்கின்றன. அவரைப் பற்றி பேசும் ஒவ்வொரு நடிகரும் , கலைஞரும் அவரது நற்பண்புகளை புகழ்கிறார்கள். அவரது எளிமையைப் பாராட்டுகிறார்கள்.
அவர் தந்தை மெய்யப்ப செட்டியார் , ஜெமினி எஸ்.எஸ் வாசன், விஜய வாகினி நாகிரெட்டி என்ற மூவரும் சினிமாவில் பெரும் சாதனைகளைப் புரிந்தவர்கள். மிகப் பெரிய புகழை , செல்வத்தை தம் வாழ்நாளில் அனுபவித்தவர்கள் . எளிமையாக உடுத்தி, கண்ணியமாக வாழ்ந்தவர்கள் அவர்கள் மூவரையும் தானும் பின்பற்றுவதாக சரவணன் ஒரு நேர்க்காணலில் சொல்கிறார்.
எப்போதும் தூய்மையான வெண்ணிற ஆடை, பணிவின் அடையாளமாக கைகளைக் கட்டி, மரியாதைக்குரிய தோற்றத்துடன் வாழ்ந்தவர்.
திரைத்துறையில் அவரைப் போல நல்ல பண்புகளுடன் வாழ்பவர்கள் குறைவு .
எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
செல்வர்க்கே செல்வம் தகைத்து (குறள் 125)
என்ற குறள் கூறும் மொழிக்கேற்ப தன்னடக்கத்தை ஒரு செல்வமாக சேர்த்து வைத்தவர் சரவணன்.
அவர் வாயில் இருந்து அமங்கலமான சொல்லோ , கெட்ட வார்த்தைகளோ வந்ததே இல்லை என்பதைக் கேட்கையில் நாம் நெகிழ்கிறோம். ஆர்ப்பாட்டங்களும் , ஆரவாரமும் வாழ்க்கை முறையாகிப் போன இக்காலத்தில், இவரைப் போன்றவர்களைக் காண்பது அரிது.
பூமிப் பந்து சுழல்வது போல ஏவிஎம்மின் உலக உருண்டையும் சுழல வேண்டும் என்று விரும்புகிறோம், அதை அவரின் வாரிசுகள் நிகழ்த்திக் காட்டுவார்கள் என்றும் நம்புகிறோம்.
அஞ்சலிகள்

Leave a comment
Upload