தொடர்கள்
கவர் ஸ்டோரி
நிலத்தடி நீர் உயர்ந்தது !! துப்பாய தூஉம் மழை !! - ப.ஒப்பிலி

20251106092015139.jpeg

நகரின் பல பகுதிகளில் பெய்த மழை, நிலத்தடி நீர்மட்டத்தை மேம்படுத்த உதவியுள்ளதாக நீரியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். பல்வேறு புவியியல் அமைப்புகளில், நிலத்தடி நீர்மட்டம் 0.59 மீட்டர் முதல் 0.71 மீட்டர் வரை உயர்ந்துள்ளது. கடந்த சில நாட்களில் குறைந்த முதல் மிதமான அளவில் பதிவான மழை, மண்ணில் நீர் உட்செல்ல உகந்த சூழலை உருவாக்கியுள்ளது. இந்த நீடித்த ஊடுருவல், மெட்ரோ வாட்டர் மாதந்தோறும் செய்யும் மதிப்பீட்டுகளில் நேர்மறை விளைவுகளை அளிக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

முன்னாள் சென்னை குடிநீர் வாரிய நீரியல் நிபுணர் சுப்பிரமணியன், நிலத்தடி நீர் உயர்வு புவியியல் அமைப்புகளின் தன்மையைப் பொறுத்தது என விளக்கினார். மணல் அதிகம் உள்ள இடங்களில் நீர்தாங்கும் திறன் அதிகமாய் இருப்பதால், பெய்த மழையின் பெரும்பங்கு நிலத்தடிக்கு ஊடுருவும். கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள குடியிருப்புகள், திருவல்லிக்கேணி, மைலாப்பூர், அடையார், பெசன்ட் நகர்,திருவான்மியூர் மற்றும் அக்கரை பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் 2.59 மீட்டரில் இருந்து 3.30 மீட்டராக உயர்ந்து, 0.71 மீட்டர் உயர்வைக் காட்டியுள்ளது.

களிமண் பகுதியான அம்பத்தூர், வளசரவாக்கம், கே.கே.நகர், பெரம்பூர், கொளத்தூர், அண்ணாநகர் போன்ற இடங்களில் 1.12 மீட்டரில் இருந்து 1.73 மீட்டராக 0.61 மீட்டர் உயர்வைக் கண்டுள்ளது. களிமண் மண் அதிக ஊடுருவலைத் தடுக்கக் கூடியதாயினும், இந்த முறை மழை மிதமானதும் இடைவிடாததும் என்பதால் நீர் உறிஞ்சுதல் அதிகமாக இருந்தது.

கடின பாறை அமைப்புகள் உள்ள சைதாப்பேட்டை, சின்ன மலை, கிண்டி, வேளச்சேரி, ஆலந்தூர், மடிப்பாக்கம் போன்ற இடங்களில்2.20 மீட்டரில் இருந்து 2.79 மீட்டராக 0.59 மீட்டர் உயர்வுப் பதிவாகியுள்ளது. இத்தகைய பகுதிகளில் பாறைகளின் கூட்டு பிளவுகளில்தான் நீர் சேர்வதால், மழை காலம் நீண்டிருப்பது முக்கிய காரணமாகும்.

நீரியல் நிபுணர் ஜே. சரவணன், இந்த ஆண்டு மழை சமமாகவும் மிதமானதாகவும் இருந்ததால் நல்ல நிலத்தடி நீர் ஊடுருவல் ஏற்பட்டுள்ளது என்றார். கடந்த மழைக்காலங்களில் இடியுடன் கூடிய கடுமையான மழைவீழ்ச்சிகள் அதிகம் பதிவாகி, நிலத்தடிக்கு நீர் செல்லாமல் ஓடிப்போகும் நிலை உருவானது என அவர் குறிப்பிட்டார். “இந்த வருடம் பரவலாகவும் சீரான முறையில் பெய்த மழை நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த உதவியுள்ளது,” என்றார்.

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்

துப்பாய தூஉம் மழை.