
இந்து மத வழிபாட்டில் நவகிரகங்கள் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த நவகிரகங்களைத் தமிழில் கோள்கள் என்கிறோம். ஒருவரது வாழ்க்கையைத் தீர்மானிக்கின்ற ஜாதகம் இந்த நவகிரகங்கள் அமைந்துள்ள கட்டத்தின் நிலையைப் பொறுத்தே அமைகிறது. நவக்கிரகங்களே மனிதர்களின் செயல்களிலும், உலகில் நடக்கும் நிகழ்வுகளிலும் பெரும் ஆதிக்கம் செலுத்துகின்றன.
நவகிரகங்களை உரியத் துதிகளை நாம் தினமும் சொல்லி வணங்குவதின் மூலம் நமக்கு அந்தந்த நவகிரக நாயகர்களினால் ஏற்படும் இன்னல்கள் குறையும். ஒன்பது நாயகர்களுமே அவரவர்களுக்கு இட்ட கடமையைச் செய்கின்றார்களே தவிர எவருக்கும் கெடுதல்கள் புரிவது இல்லை. நாம் செய்துள்ள பூர்வ ஜென்ம பாப, புண்ணியங்களின் கணக்கின்படி நமக்கு ஒரு குறிப்பிட்ட பிறப்பு தரப்படுகின்றது. அப்பிறவியில் நாம் அனுபவிக்க வேண்டிய நற்பலன்கள், தீயபலன்கள் யாவும் நிர்ணயம் செய்யப்படுகிறது.
ஒவ்வொரு கிரகத்திற்கு என தனிப்பட்ட பலன்கள் உண்டு. அதன் அடிப்படையில் ஆரோக்கியத்துக்குச் சூரியனும், புகழுக்குச் சந்திரனும், மன வலிமைக்குச் செவ்வாயும், புத்திக் கூர்மை பெறப் புதனும், குறையில்லா செல்வம் பெற குரு பகவானும், இல்வாழ்க்கை, மனை யோகம் பெறச் சுக்கிரனும், ஆயுள் பலம் அதிகரிக்கச் சனி பகவானும், வெற்றிக்கு ராகு பகவானும், ஆன்மிக ஞானம் பெற, கேது பகவானும் அருள் புரிவார்கள்.

எல்லா சிவன் கோயில்களிலும், ஈசானிய(வடகிழக்கு) மூலையில் நவக்கிரகங்கள் மேற்கு திசை முகமாக அமைக்கப்பட்டிருக்கும். நடுவில் சூரியன் கிழக்கு முகமாகவும்,, சூரியனுக்குக் கிழக்கில் சுக்கிரன் கிழக்கு முகமாகவும், மேற்கில் சனி மேற்கு முகமாகவும், வடக்கில் குரு வடக்கு முகமாகவும், தெற்கில் செவ்வாய் தெற்கு முகமாகவும், வடகிழக்கில் புதன் வடக்கு முகமாகவும், தென் கிழக்கில் சந்திரன் மேற்கு முகமாகவும், வட மேற்கில் கேது தெற்கு முகமாகவும் தென் மேற்கில் ராகு தெற்கு முகமாகவும் இடம் பெற்றிருக்கும். சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி போன்ற ஏழு கிரகங்களும் வலமிருந்து இடமாகச் சுற்றுவதால் வலதுபுறமாகச் சுற்றவேண்டும். ராகு, கேது கிரகங்கள் இடமிருந்து வலது புறமாகச் சுற்றுவதால், இடமிருந்து வலமாகச் சுற்றவேண்டும் என்று நினைக்கின்றனர். ஆனால் இப்படிச் சுற்றுவது தவறானது. நவகிரகங்களைச் சுற்றும்போது வலத்துப்புறம், இடத்துப்புறம் என்று பிரித்துச் சுற்ற வேண்டியதில்லை. நவக்கிரகங்களை ஒன்பது முறை சுற்றினாலே போதுமானது என்றும் அதே போலக் கோயிலில் உள்ள எல்லா தெய்வங்களையும் வழிபட்ட பின்னர் கடைசியாக நவக்கிரகங்களைச் சுற்றி வருவது முறையாகும் என்றும் எந்த கிரகத்தையும் கையால் தொட்டு வணங்கக் கூடாது என்பதும் ஐதீகமாக உள்ளது. சில கோயில்களில் நவக்கிரகங்களின் அமைப்பு சற்று வித்தியாசமாகவும், ஒரே வரிசையிலும் அமைந்திருக்கும். இந்த அமைப்புகள், கோயில் ஆகமங்கள் மற்றும் வைதீக விதிகளின்படி மாறுபடும்.
திருவாரூர் தியாகராஜர், பந்தநல்லூர் பசுபதீஸ்வரர், திருக்குவளை கோளிலிநாதேஸ்வரர் கோயில், திருவாய்மூர் வாய்மூர்நாதர், வேதாரண்யம் வேதநாதர் கோயில், கோடியக்கரை குழகர், வைத்தீஸ்வரன் கோயில், சிவகங்கை மாவட்டம் பிரான்மலை உமாமகேஸ்வரர் கோயில்களில் நவக்கிரகங்கள், தங்களது திசையில் இல்லாமல் நேர் வரிசையில் காட்சி அளிப்பது அபூர்வமானது. அம்பாளின் திருமணக் கோலத்தினை காணவே இவ்வாறு இருப்பதாகக் கூறப்படுகிறது.

நவக்கிரக சந்நிதி இல்லாத சில சிவன் கோவில்கள்:
சிவன் கோயில் என்றாலே அங்கு நவகிரகங்களுக்குத் தனி சந்நிதி இருக்கும். அதே போல் நவகிரக பரிகார தலங்கள் அனைத்திலும் சிவனே மூலவராக இருந்து அருள்பாலிக்கின்றார். நவகிரகங்கள் உள்ளிட்ட அண்டச் சராசரங்கள் அனைத்தும் சிவனுக்குள் அடக்கம் என்பது ஆன்றோர் வாக்கு. ஆனால் பல இடங்களில் விதி விலக்காக நவகிரக சந்நிதிகள் இல்லாத சிவன் கோயில்கள் உள்ளன. எங்கெல்லாம் எமன், சிவனை வழிபட்டுள்ளாரோ அந்த ஸ்தலங்கள் அனைத்திலும் நவகிரகங்கள் இருக்காது.
திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயிலில் நவகிரகம் இல்லை. ஏனென்றால் அங்கு எமன் வந்து வழிபட்ட தலம்.

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலிலும் நவக்கிரக சந்நதி இல்லை. அங்கும் எமன் வந்து வழிபட்டதாகக் கூறப்படுகிறது.
ஸ்ரீவாஞ்சியம் வாஞ்சிநாதசுவாமி கோயிலில் எமனுக்கு முக்கியத்துவம். இங்கு எமன் சிவனை வழிபட்டதாக ஐதீகம். அதனால் இந்த கோயிலிலும் நவக்கிரகம் சந்நிதி இல்லை.
திருச்சிக்கு அருகே உள்ள திருப்பைஞ்சீலி ஞீலிவனேஸ்வரர் கோயிலில் நவக்கிரகங்கள் தனி சந்நிதியாக இல்லை. இங்கே எமனுக்குத் தனிச் சந்நிதி உள்ளது. இங்கு நவக்கிரகங்கள் ஒன்பது படிக்கட்டுகளாக அமைந்திருக்கின்றன என்பது சிறப்பு.
திருவாவடுதுறை கோமுக்தீஸ்வரர் கோயிலில் நவகிரகங்களுக்குத் தனி சந்நிதி இல்லாவிட்டாலும், சிவபெருமானை வழிபடுவதன் மூலம் நவகிரக தோஷங்கள் நீங்கி நல்ல பலன்கள் கிடைக்கும்.
திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் நவகிரகங்களுக்கான தனி சந்நிதி இல்லை. இதற்குக் காரணம், எமதருமன் சிவபெருமானை வழிபட்ட ஸ்தலங்களில் இதுவும் ஒன்று. இங்கு மானிடர்களின் உயிரைப் பறித்த எமனுக்குச் சிவன் இங்கு மறுபடியும் உயிரை எடுக்கும் அதிகாரம் வழங்கியதாக ஐதீகம்

காளஹஸ்தி காளஹஸ்தீஸ்வரர் கோயில் கிரக தோஷ ஸ்தலம் என்பதால் நவக்கிரகங்கள் இல்லை. விதிவிலக்காக இதுவும் எமன் வழிபட்ட ஸ்தலம். சிவன், பார்வதி, மற்றும் மூலவர் சுயம்பு லிங்கங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது,
திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் தனி நவகிரக சந்நிதி கிடையாது, ஏனெனில் இங்குள்ள சிவபெருமான் நவகிரகங்களையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக ஐதீகம்,
திருப்புறம்பியம் சாட்சிநாதேஸ்வரர் கோயிலில் சிவபெருமானை எமதருமன் வழிபட்டுள்ளதால், நவகிரகங்கள் இங்கும் இல்லை.
நாகப்பட்டினம் நல்லாடை அக்னீஸ்வரர் கோயிலில் சிவனே நவக்கிரக நாயகனாக இருப்பதால், இங்கும் நவகிரகங்களுக்குத் தனி சந்நிதி இல்லை.
திருமழபாடி வைத்தியநாதர் கோயிலில் சிவன் மற்றும் நந்திக்கு இடையே உள்ள மூன்று குழிகளைப் பக்தர்கள் நவகிரகங்களாகக் கருதி வழிபடுகிறார்கள். சனிக்கிழமைகளில் இந்தக் குழிகளுக்கு முன்பு எள் எண்ணெய் தீபம் ஏற்றுவது நவகிரக தோஷங்களை நீக்கும் என்பது நம்பிக்கை.

மீண்டும் அடுத்த வாரம் நலம் தரும் நவகிரக நாயகர்களுடன் தொடர்வோம்….

Leave a comment
Upload