
என் பொருட்டு...
நான் இன்னமும் இங்கே இருக்கிறேன்...
என் தோற்றத்தில் ஒன்றும் சிறப்பில்லை...
என் முகம் சொல்கிறது
என் வயதினை...!
என் தேகம் காட்டிடும் அதன் தேய்மான நிலை...!
என் ஆற்றல் அன்றுபோல் இன்றில்லை...!
என் ஞாபகம் பலமுறை எனை தோற்கச் செய்கிறது...!
என் உடைமைகள் பல நேரம்
தொலைக்க நேர்கிறது...!
செய்ய வேண்டியதை மனது திட்டமிடும் ஒரு நிமிடம்...!
அத்தனையும் மறந்து விடும்
மனது மறு நிமிடம்...!
சிலநேரம் கண்ணாடி பார்ப்பதை தவிர்ப்பேன்...!
சிலவற்றை பார்க்க வேண்டாம்
என்றிருப்பேன்...!
அது கணநேர என் பார்வையில்
சிக்கினால்,
எதுவும் இனங்கண்டு கொள்ளாது
என்னையே...!
அன்று சுலபமாய் செய்தேன் எத்தனை வேலைகள்...!
இன்று செய்கின்றேன் ஏனோ அத்தனை வேதனைகள்...!
அன்று போல் இல்லை என் வேலையின் தரம்...
இன்று இல்லையோ என் திறன் நிரந்தரம்...!
முதுமை பருவத்தை எப்போதும், இளமை உடன் ஒப்பிடுகிறேன்...
நேரத்தை வீணடித்து,அன்றிருந்த
என்னைத் தேடுகிறேன்...!
என்னுள் இருக்கும் வருத்தமே,
எவரும் எப்படி எனை பார்த்தாலும்,
தேய்ந்து கந்தலாகும் என் சருமத்துள்
நான் நானாகவே இருக்கிறேன்...
எல்லையற்ற அன்பை என் உள்ளம்
உணர்ந்த போதும்,
நிலையற்று சில நேரங்களில் அது
வலியைத் தருகிறது...!
உள்ளம் நிறைந்து மகிழ்ச்சியாய் திளைத்த போதும்,
சில்லாய் சில நேரங்களில் ஏனோ உடைந்து போகிறது...!
என் ஆன்மா அனுதாபத்தை உணர்ந்தாலும்,
மன்னிப்புக்கும் அமைதிக்கும்
ஏங்குகினாலும்,
சில நேரங்களில் ஒளியாக மின்னி என்னுள் பரவி,
விடுதலை பெற ஏங்குகிறது அது விலகி...!!
முதுமை என் நிலை, அதிலும் ஒரு
தனிமை, உண்மைதான்...!
இருந்தும் பக்குவம் வந்தது...
பழைய பகை மறக்க, மன்னிக்க..!
மூப்படைந்து முகம் சுருங்கி, நான்
பார்ப்பவர்க்கு இல்லாதிருந்தும்...
என்னுள் இருக்கும் அழகும் மதிப்பும்,
என்றும் புறம் தள்ளவிடமாட்டேன்...!
அழகும் வலிமையும் இழந்தது உண்மை...!
இருந்தும் வாழ்வதற்கு இன்னமும் ஆசை...!
என்னப் போல் ஒருவன் இவ்வுலகில் இல்லை...!
அள்ளித் தருதற்கு இதற்கு மேல்
யாரும் இல்லை...!
நான் இன்னமும் இங்கே இருக்கிறேன்...!
பாலா கோவை
குறிப்பு:
இது ஆங்கிலக் கவிஞர் பேட்ரிஷியா ஃபிளம்ங் அவர்களின் கவிதையை தமிழாக்க முயற்சி.
Poetry by Patricia A Fleming's " I am here still"

Leave a comment
Upload