
வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்’ என்பதை மற்றவர்களைவிட நிருபர்கள் நன்றாக உணர்கிறார்கள். நிருபர் செக்கு மாடு போல் ஒரே பாதையில் சுற்றாதவராக இருந்தால், அவருக்கு எப்போதும் புதுவழிகள் புலப்படும்.
அவனுக்கு சமயோஜிதம் கைகொடுத்த இரண்டு சந்தர்ப்பங்கள்: கடலூர் தந்தி அலுவலகத்தில் ஒரு ஞாயிற்றுக்கிழமை அவனையும் சேர்த்து ஆறு நிருபர்கள் முக்கியமான செய்தியைக் கொடுப்பதற்காகக் கூடியிருந்தார்கள். டைப்ரைட்டரை யார் முதலில் பயன்படுத்துவது என்பதில் அவர்களிடையே போட்டி. ஆனால் டைப்ரைட்டர் நிருபர்களை ஏமாற்றிவிட்டது. காரணம் ரிப்பன் காய்ந்து போயிருந்தது. ஒரு எழுத்து கூட அடிக்க முடியவில்லை.
ரிப்பன் வாங்குவற்கு இரண்டு கி.மீ. தொலைவில், திருப்பாதிரிப்புலியூருக்கு இண்டியன் எக்ஸ்பிரஸ் நிருபர் சென்றார். கடைகள் மூடியிருந்தன. ரிப்பன் கிடைக்கவில்லை என்று பொதுத்தொலைபேசியில் இருந்து தந்தி அலுவலகத்தில் இருந்த நிருபர்களுக்கு தகவல் கொடுத்தார் அவர்.
அப்போது அவன் ஒரு யோசனை சொன்னான். ‘ரயில்வே ஸ்டேஷன் அருகே என்.எஸ்.ரெங்கநாதன் என்பவர் நடத்தும் டைப்ரைட்டிங் இன்ஸ்டியூட் இருக்கிறது அங்கே சர்க்கரை அய்யங்கார் என்பவர் இருப்பார். அவரிடம் என் பெயரைச் சொல்லி ஒரு ரிப்பன் இரவல் வாங்கிக் கொண்டு வாருங்கள்’ என்றான். அவனது நட்பு வட்டம் பெரியது. கடையே திறக்காவிட்டாலும், பொருள் வாங்குவது எப்படி என்பது அவனுக்குத் தெரிந்திருந்தது.
எக்ஸ்பிரஸ் நிருபர் ரிப்பனை இரவல் வாங்கிக் கொண்டு வருவதற்குள் அவன் தந்தி அலுவலகத்தில் இருந்த டைப்ரைட்டரில் செய்தியை அடித்து முடித்துவிட்டான். அந்த செய்தி தந்தியில் போய்கொண்டிருந்தது. அதிசயப்பட்ட இண்டியன் எக்ஸ்பிரஸ் நிருபர் கேட்டார், ‘எப்படி சார் ரிப்பன் இல்லாமல் டைப் அடித்தீர்கள்?’ அவன் சொன்னான், ‘இரண்டு வெள்ளைத் தாள்களுக்கு இடையே ஒரு கார்பன் பேப்பரை வைத்தேன், காய்ந்த ரிப்பன் மீது பிழையில்லாமல் டைப் செய்தேன் வேலை முடிந்தது’ என்றான். எப்படியாவது ஒரு காரியத்தை செய்து முடித்துவிட வேண்டுமென்று நினைத்தால் தானாகவே வழி பிறக்கும்.
இதேபோல் சென்னையில் நடந்த ஒரு சம்பவம். ஒருநாள் அவன் அலுவலகத்தில் இருந்தபோது மதியம் 3 மணி அளவில் அவனது சித்தப்பா தாம்பரத்தில் காலமானார் என்று உறவினர் ஒருவர் சொல்லிவிட்டு தொலைபேசி இணைப்பைத் துண்டித்துவிட்டார். மேற்கொண்டு விபரங்கள் சொல்லவில்லை. சித்தப்பா கிழக்கு தாம்பரத்தில் இருந்தார் என்பது தெரியும். ஆனால் வீட்டு முகவரி அவனுக்குத் தெரியாது. தொலைபேசி எண்ணும் தெரியாது. அந்தக் காலத்தில் செல்போனும் கிடையாது.
இடையில் பழவந்தாங்கலில் தூரத்து உறவினர் ஒருவர் வீட்டிலும் முகவரி கிடைக்கவில்லை. வீட்டிற்கு திரும்புவதைத் தவிர வேறு வழியில்லை. இருந்தாலும் முன் வைத்த காலை பின்வைக்கக் கூடாது என்று தாம்பரத்திற்குச் சென்றான்.
தாம்பரம் ரயில் நிலையத்தில் இறங்கியதும் ஏழு எட்டு மின்சார ரயில்களில் யாரேனும் உறவினர்கள் வருகிறார்களா என்று பார்த்தான். சுமார் அரைமணி நேரம் ஆகியும் உறவினர்கள் யாரும் எந்த ரயிலிலும் வரவில்லை. சரி பஸ்ஸில் வருகிறார்களா என்று பார்ப்போம் என்று பஸ் ஸ்டாண்டிற்குச் சென்றான். கால் மணிநேரம் ஒவ்வொரு பஸ்ஸாக பார்த்தான், உறவினர்கள் யாரும் வரவில்லை. ஆனால், அவன் மிகச்சரியாக சித்தப்பா வீட்டிற்குச் சென்றான். ஈமச் சடங்குகள் அதுவரை தொடங்கப்படவில்லை. அவனது இளைய சகோதரன் உறவிலான ஒருவர் கேட்டார், ‘நீ வரமாட்டாய் என்று நினைத்தோம், உனக்கு தகவல் கொடுத்தோமே ஒழிய முகவரி தரவில்லையே என்று வருந்தினோம். எங்கள் பதற்றம் அப்படி. ஆனால் நீ சரியாக வந்து சேர்ந்துவிட்டாயே எப்படி?’
‘ரயிலில் உறவினர் யாரும் வரவில்லை, பஸ்சிலும் யாரும் தட்டுப்படவில்லை. உங்கள் வீட்டு முகவரியும் தெரியாது, தொலைபேசி எண்ணும் தெரியாது. பஸ் ஸ்டாண்டு அருகே இருந்த தபால் தந்தி அலுவலகத்தைப் பார்த்தேன். மூளையில் பளிச்சென்று ஒரு மின்னல் வெட்டியது. நேரே உள்ளே சென்று போஸ்ட் மாஸ்டரைப் பார்த்து, ‘சார் ஒரு துக்க வீட்டிற்குச் செல்ல எனக்கு முகவரி வேண்டும். அதற்கு நீங்கள் உதவ முடியும்! உதவி செய்யுங்கள்’ என்று கேட்டான், தன்னை இன்னார் என்று அறிமுகப்படுத்துக் கொண்டு.
அவர் ‘உங்கள் உறவினர் வீட்டு முகவரி எனக்கு எப்படி சார் தெரியும்?’ என்று கேட்டார். அவன் சொன்னான், ‘சார் இன்று காலையோ, மதியமோ உங்கள் அலுவலகத்தில் இருந்து கரூர் அருகே உள்ள கிருஷ்ணராஜபுரம் என்ற ஊருக்கு வி.எஸ்.சம்பந்தம் என்ற பெயருக்கு ஒரு தந்தி போயிருக்கலாம். அதில் அனுப்பியவரின் முகவரியும் இருக்கும். அதை எனக்குத் தெரிவிக்க முடியுமா?’
போஸ்ட் மாஸ்டர் தந்தி அலுவலரை அழைத்து, அனுப்பப்பட்ட தந்திகளின் படிவங்களை எடுத்து வரச் சொன்னார். அவன் எதிர்பார்த்த தந்தி படிவத்தில் அந்த முகவரி இருந்தது. எண்.7, துரைசாமி ரோடு, கிழக்கு தாம்பரம்’. போஸ்ட் மாஸ்டருக்கு நன்றி சொல்லி, அந்த முகவரிக்கு வந்து சேர்ந்ததை உறவினரிடம் சொன்னான். அவர்கள் எல்லோரும் ஆச்சரியப்பட்டு, ‘முகவரியைத் தேட இப்படி ஒருவழி இருக்கிறது என்பது எங்களுக்குத் தெரியாமல் போயிற்றே என்று ஒருவர் சொல்ல, நாங்கள் அதை யோசித்தே பார்த்திருக்க மாட்டோம். உனக்கு மட்டும் இந்த ஐடியா எப்படித் தோன்றியது?’ என்று கேட்டார். அவன் சொன்னான், ‘இப்போது நான் பத்திரிகையாளன் இல்லையென்றாலும் தகவல்கள் திரட்டுவதில் பழக்கப் பட்டவன். ஒரு நிருபர் எந்த நேரமும் எப்படியாவது தகவல் திரட்டியாக வேண்டும். வளமான மூளை அதற்கு உதவும். இப்படி அவன் சொன்னதை சோதித்துப் பார்க்கவும் விரைவில் ஒரு சந்தர்ப்பம் வாய்த்தது.
நள்ளிரவில் விரைந்து தகவல் திரட்டுவதில் ஒரு சம்பவம். அப்போது அவன் அமெரிக்க தூதரகத்தின் அரசியல் ஆலோசகர். இரவு சுமார் 11 மணி வாக்கில் துணைத்தூதர் ஹெர்னஸ்டைன் ஹெக் அவனைத் தொலைபேசியில் அழைத்து, ராஜீவ் காந்தி சென்னை அருகே படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். இது பி.பி.சி.செய்தி. விரைவில் தகவல் திரட்டி வாஷிங்டனுக்கு ரிப்போர்ட் அனுப்ப வேண்டும். நான் அலுவலகம் புறப்படுகிறேன். உனக்கு கார் அனுப்பட்டுமா? என்று கேட்டார். அவன் கார் வேண்டாமென்று சொல்லிவிட்டு, ஸ்கூட்டரில் ஜெமினி அருகே உள்ள அலுவலகத்திற்கு விரைந்தான். இரவு 11.15 மணியில் இருந்து 12.15 மணிவரை ஒரு மணி நேரத்தில் முக்கியமானவர்களையெல்லாம் தொடர்பு கொண்டு கிடைத்த விபரங்களை செய்தியாக்கி துணைத்தூதரிடம் கொடுத்தான். அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ்புஷ். அவருக்கு எத்தனை ஏஜென்சிகளில் இருந்து செய்தி வந்தாலும் அமெரிக்க வெளியுறவுத் துறையில் பணியாற்றிய அவனும் துணைத்தூதரும் கொடுக்கும் செய்தியே ஷிஜீஷீt ஸிமீஜீஷீக்ஷீt. எனவே ஜனாதிபதி அலுவலகம் இவர்களது செய்திக்காக காத்திருந்தது.- அலுவலகம் சென்ற ஒரு மணி நேரத்திற்குள் வாஷிங்டனுக்கு செய்தி அனுப்பியாகிவிட்டது.
மறுநாள் காலை செய்தித்தாளில் வரக்கூடிய அத்தனை தகவல்களையும் அவன் நள்ளிரவில் ஜனாதிபதிக்கு அனுப்பிய செய்தியில் இருந்தன. அப்போது அவன் பத்திரிகையாளன் இல்லையென்றாலும் விரைவான நிருபர் பணியைச் செய்தான்.- மறுநாள் காலை செய்தித் தாள்களை படித்துப் பார்த்த அவனது மேலதிகாரியான துணைத்தூதர், ‘பத்திரிகையில் வராத சில தகவல்களையும் நீங்கள் நேற்று இரவே கொடுத்துவிட்டீர்கள். உங்கள் நட்பு வட்டம் பெரிது’ என்று பாராட்டினார். ஒரு நிருபரின் தொழில் அனுபவம் எல்லா பணிகளிலும் எப்போதும் கை கொடுக்கும்.

Leave a comment
Upload