தொடர்கள்
அழகு
விஷ வாயுவை கண்டறியும் கருவி ! மாணவி அசத்தல் !! - மாலா ஶ்ரீ

20251106094229626.jpeg

செப்டிக் டேங்க் மற்றும் கிணறு, கழிவுநீர் கால்வாய்களில் வேலை பார்ப்பவர்களின் உயிர் பாதுகாப்பை முன்னிறுத்தி, முன்கூட்டியே நச்சுவாயுவை கண்டறிந்து எச்சரிக்கும் வகையில் புதிய மின்-மின்னணு கருவியை குமரி மாவட்டம், சுண்டபற்றிவிளை அரசு மேல்நிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஜி.எம்.கனிஷ்கா கண்டுபிடித்துள்ளார். தனது கருவியின் செயல்பாடு குறித்து அரசு பள்ளி மாணவி கனிஷ்கா கூறுகையில், ‘‘மனிதர்களின் தொழில்நுட்ப வளர்ச்சி அதிகரித்தபோதிலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பில் நாம் காட்டிய அலட்சியத்தால் காற்றின் தரம் வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளது. நிலநீர் மாசுவை நேரடியாக காண முடிந்தாலும், காற்று மாசை எளிதில் உணர முடியாது.

எனது புதிய கருவி, பல நச்சுவாயுக்களை ஒரே நேரத்தில் கண்டறியும் பன்முக சென்சார் அமைப்புடன் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இது, பயன்படுத்தப்பட்ட ஹார்ட்வேர் அர்டினோ மைக்ரோ கண்ட்ரோலர் ஆகும். இதன்மூலம் மீத்தேன், கார்பன் மோனாக்சைடு, ஹைட்ரஜன் சல்பைடு பரவலை கண்டறிய முடிகிறது. மேலும், எனது கருவி எல்டிஇ டிஸ்பிளே, ரிலே, பஸ்ஸர், எல்சிடி எச்சரிக்கை விளக்ககள், 5 வோல்ட் மின்சாரம் ஆகிய கட்டமைப்புகளின் மூலம் செயல்படுகிறது. இதன் மைக்ரோ கண்ட்ரோலர் அனலாக் மற்றும் டிஜிட்டல் பிகள் மூலம் சென்சார் அளிக்கும் தரவுகளை வாசித்து எச்சரிக்கையை உருவாக்குகிறது.

இந்த முன்மாதிரி அமைப்பு சாதனம் முதலில் வடிகால் அல்லது கிணறுகளில் இறக்கப்படுகிறது. இதன் சென்சார்கள், அதன் சுற்றப்புற வாயுநிலகைளை நேரடியாக கண்காணிக்கும். அதில் நச்சுவாயு கண்டறியப்பட்டால், டிஜிட்டல் அவுட்-புட் பஸ்ஸர் ஒலி எழுப்பும், எல்இடி விளக்கு சிவப்பாக மாறும். எல்சிடியில் ‘டேஞ்சர் டாக்சிக் கேஸ் டிடெக்டட்’ என்று எச்சரிக்கை தகவல் வெளியாவதால், உயிருக்கு ஆபத்தான மீத்தேன், கார்பன் மோனாக்சைடு, ஹைட்ரஜன் சல்பைடு போன்ற விஷவாயு தாக்குதல்களில் இருந்து தொழிலாளர்களின் பாதுகாப்பை அதிகரிக்க முடியும். விஷவாயு இல்லையெனில் ‘அவுட்-புட்’ என்ற தகவலுடன் பச்சை விளக்கு எரியும்!’’ என்று மாணவி கனிஷ்கா தெரிவித்தார்.

முன்னதாக, அனைத்து மாநிலங்களிலும் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களின் அறிவியல் சிந்தனை மற்றும் புதுமை திறன்களை மேம்படுத்தும் நோக்கில், மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்துறை செயல்படுத்தும் ‘இன்ஸ்பயர்’ அவார்டு திட்டத்தில், தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களிலும் 5 முதல் 10-ம் வகுப்புவரை படிக்கும் மாணவ-மாணவிகளின் புதுமையான அறிவியல் யோசனைகள் மற்றும் கண்டுபிடிப்புகள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றன. இதற்காக இவர்களுக்கு ₹10 ஆயிரம் வழங்கப்பட்டு, அவர்களின் புதிய மாதிரிகள் மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவிலான கண்காட்சிகளில் வெளியிடப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற நம் நாட்டிற்கு தேவையான கண்டுபிடிப்புக்களை கொண்டாட வேண்டும்.