தொடர்கள்
சோகம்
ஹாங்காங்கில் உயிர்களை விழுங்கிய தீ !! - ராம்

20251106100018655.jpg

ஹாங்காங் போன்ற ஒரு வளர்ந்த நகரில் இப்படி ஒரு பேரிடர் நிகழ்ந்திருக்கிறதென்றால்...

சென்னை போன்ற நகரங்களில் தீயணைப்பு கருவிகளும், சிஸ்டமும் என்னேரமும் தயார் நிலையில் இருக்க வேண்டியது அவசியம்.

தாய் போ என்ற இடத்தில் எட்டு கட்டிடங்கள் எரிந்து போக 159 உயிர்கள் பறி போயிருக்கிறது.

இது உயிர் பறித்த தீ விபத்து அல்ல. சுமார் 2000 குடும்பங்களை நடுத்தெருவிற்கு கொண்டு வந்து வாழ்க்கையையே சூன்யமாக்கி விட்ட கோர சம்பவம்.

ஒரு வயது முதல் 97 வயது வரை வித்தியாசம் பார்க்காமல் மென்று விழுங்கி விட்டது தீ.

முப்பதாவது மாடியில் லிஃப்ட் வேலை செய்யாமல் இறங்க வழி தெரியாமல் மூதாட்டி தவிக்க அவரை விட்டு விட்டு தப்பிக்க மனமில்லாத இந்தோனேசிய பணிப்பெண் அவரை கட்டியணைத்த படி இறந்து போயிருக்கிறார். அந்த கதை மனதை பிழியும் சோகக்கதை.

இவர் மட்டுமல்ல இவர் போல பத்து பேருக்கு மேல் உள்ள பணிப்பெண்கள் இறந்திருக்கின்றனர். இந்தோனேசியா மற்றும் பிலிப்பைன் நகரை சேர்ந்த பணிப்பெண்கள் பலியாகியிருக்கின்றனர்.

ஒருவர் ஒரு வருடமே ஆன குழந்தையை கட்டிப் பிடித்துக் கொண்டு தீக்கிரையாயிகிருக்கிறார்.

அந்தக் குழந்தை இந்த உலகை பார்க்காமலேயே சென்று விட்டது சோகத்திலும் சோகம்.

செளத் சைனா மார்னிங் போஸ்ட் வீடியோ இங்கே என்ன நடந்தது என்பதை சுருக்கமாக சொல்கிறது...

இதனிடையே ஒரு சமூகமாக ஹாங்காங் மக்கள் எத்தனை தூரம் இணைந்திருக்கிறார்கள் என்பது இந்த தீ விபத்தில் தெரிய வருகிறது.

சத்தியமாக பக்கத்து ஃபிளாட்டில் யார் இருக்கிறார்கள் என்பது கூட தெரியாத தெரிந்து கொள்ள விரும்பாத ஹாங்காங் சமூகம் இந்த தாய் போ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, போதும் இனி வேண்டாம் என்று சொல்லும் வகையில் உதவிப் பொருட்களை நிறைத்து விட்டனர். 1.2 பில்லியன் டாலர்கள் வரை நன்கொடை வசூலாகியிருக்கிறது. இது போக பல நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களிடமிருந்து நன்கொடை பெற்று தாய் போ தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்து வருகிறார்கள்.

2025110610135074.jpg

ஹாங்காங் கம்யூனிட்டி செஸ்ட், குதிரை பந்தயம் நடத்தும் ஜாக்கி கிளப் போன்ற தொண்டு நிறுவனங்கள் மனமுவந்து உதவ வந்திருக்கிறது.

இதனிடையே....

ஒரு வேலையாள் வீசிய சிகரெட் துண்டு தான் மராமத்துக்காக சுற்றியிருந்த வலையில் விழுந்து தீ பற்றிக் கொண்டது என்கிறார்கள் சிலர்.

ஸ்டைரோபாம் என்ற எளிதில் தீப்பிடிக்கக் கூடிய வஸ்துவால் செய்த ஜன்னல், கதவு சீல்கள் தான் காரணம் என்கிறார்கள் வேறு சிலர்.

இப்படி ஆளாளுக்கு குற்றச்சாட்டு வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அந்த கட்டிடத்தில் குடியிருந்தவர்கள் இது போன்ற தீ விபத்து வாய்ப்பு இருப்பதாக பல முறை எச்சரித்ததும் தெரிய வருகிறது.

அரசு தன் இரும்புக் கரங்களால் அனைத்து கட்டிட மராமத்து வேலைகளையும் கண்காணிக்க துவங்கியிருக்கிறது. ஏன் தற்காலிகமாக நிறுத்தி வைத்திருக்கிறது.

கட்டிட வேலை தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அந்த கட்டிட பகுதி மொத்தமும் பொதுமக்கள் நுழையாத வண்ணம் தடை செய்யப்பட்டிருக்கிறது. இதில் எரியாத ஒரே ஒரு பிளாக்கில் உள்ள உடமைகளை எடுத்துக் கொண்டு வருவதற்கு 90 நிமிடங்கள் கொடுத்து அனுமதித்திருக்கிறார்கள்.

என்ன செய்து என்ன, சென்ற உயிர்கள் திரும்ப வரவா போகிறது.

ஹாங்காங் வரலாற்றில் தாய் போ நெருப்பு ஒரு அணையாத களங்கமாக, சோகமாக என்றும் இருக்கும்.