தொடர்கள்
தொடர்கள்
போகிற போக்கில் - 8

20180425143241129.png

வ்வளவு தான் நீதிமன்றம் தடை போட்டாலும் ‘பெப்பே’ காட்டுறவுங்க நம்ம ஆளுங்க” என்று நொந்து போய் பேசினார் நண்பர் ஒருவர்.

“விளக்கமாக சொல்லுங்க...” என்றேன்.

“சொல்றதென்ன, நேரிலேயே பாருங்க” என்னை அழைத்துக்கொண்டு அந்த டாஸ்மாக் கடைக்குள் நுழைந்தார்.

“தீர்த்தம் தீர்ந்திடப்போகுது... சீக்கிரம் போய் வாங்குங்க” ஒரு மூத்த‘குடிமகன்’ எங்களை பார்த்து சொல்லிவிட்டுப்போனார்.

“இந்தக் கடையை நீதிமன்ற உத்தரவுப்படி வெளிப்பக்கம் ஷட்டரை இழுத்துவிட்டு மூடிட்டாங்க. ஆனால் பின்பக்கச் சுவரை உடைச்சு அந்த பக்கம் விற்பனை கனஜோராக நடக்குது” என்று விளக்கினார் நண்பர்.

அவர் சொன்னது உண்மைதான். செவ்வக வடிவில் பின்புற சுவர் பாகம் உடைக்கப்பட்டு, அதன் வழியே விற்பனை நடந்துகொண்டிருந்தது. குடிமகன்கள் அவசரப்படாமல், ராணுவ வரிசையோடு நின்று உற்சாகபானம் வாங்கிச்சென்ற வண்ணம் இருந்தனர்.

“குடிக்கிறவுங்களுக்கு தெரியாமலேயே மாத்திரை கொடுத்து குணப்படுத்தலாம்னு விளம்பரம் வருதே அதெல்லாம் உண்மையா?” நண்பர் ஆரம்பித்தார்.

இந்த சந்தேகத்திற்கு பதில் கூறும் விதமாக, நண்பரும் மனநல மருத்துவருமாகிய மோகன வெங்கடாஜலபதி ஒரு முறை என்னிடம் கூறியதை அவருடைய வார்த்தைகளிலேயே கூறினேன்.

‘இது தவறான முரட்டு வைத்தியம் என நான் சொல்வேன். ஒரு சில மாத்திரைகள் இதற்காகவே இருக்கிறது. இதை சாப்பிட்டால் மது அருந்த முடியாது என்பதும் உண்மைதான். Disulfiram என்கிற இந்த மாத்திரையை உட்கொண்டு விட்டு மது அருந்த முடியாது. ஒருவேளை அப்படிச் செய்தால் பக்கவிளைவுகள் ஏற்படும். இதை நோயாளிகளிடம் நன்கு புரியவைத்து கையெழுத்து வாங்கிய பின்னரே இந்த மாத்திரையை நாங்கள் கொடுக்கிறோம்.

“மாத்திரை ஒரு பக்கம்... குடி இன்னொரு பக்கம் இருந்தால் என்ன ஆகுமாம்?” வினவினார் நண்பர்.

“மாரடைப்பு வந்தவர்களுக்கு என்னவெல்லாம் நடக்குமோ அது அத்தனையும் நடக்குமாம். வாந்தி, மயக்கம், கண்கள் சிவந்து போதல், இடி இடிக்கிற மாதிரியான தலைவலி, மார்பில் யாரோ உட்கார்ந்து அழுத்துவது போல பாரம் இதெல்லாம் ஏற்படுமாம். உடனே அவசர சிகிச்சை எடுத்துக்கிட்டால் உயிரை காப்பாத்தலாமாம். இதையும் மீறி குடிச்சா சாகுறதுக்குகூட சான்ஸ் இருக்குனு நண்பர் சொன்னார்” அங்கிருந்து விடைபெற்றுக்கொண்டு புறப்பட்டேன்.

சைதாப்பேட்டையைத் தாண்டும் பொழுது பெரியவர் மகாலிங்கத்தின் ஞாபகம் வந்தது. ‘லைப்ரரி தாத்தா’ என்று அப்பகுதி மக்களால் செல்லமாக அழைக்கப்படும் அவரின் வயது 87. தன்னுடைய இருபத்து இரண்டாவது வயதில் வெறும் முப்பது புத்தகங்களுடன் நூலகத்தை ஆரம்பித்தாராம். தற்போது முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் இங்கே இருக்கின்றன. பல அரிய நூல்களும் இந்நூலகத்தில் கிடைக்கின்றன.

“நிறைய ரேர் புக்ஸ் எல்லாம் சேகரிச்சு வெச்சிருந்தேன். எடுத்துட்டு போறவுங்க திரும்ப கொண்டுவந்து தர்றதில்லை” என்று சொல்லிவிட்டு அப்படிப்பட்டவர்கள் யார் என்பதையும் கூறினார்.

திடுக்கிட்டுப்போனேன். அந்த லிஸ்டில் நிறைய பிரபலங்களின் பெயர்கள் இருந்தன.

லைப்ரரி தாத்தாவிற்கு வயதாகிவிட்டதால், முன்பு போல் நெடு நேரம் நூலகத்தை திறந்து வைத்திருப்பதில்லை. காலையில் எட்டு மணியிலிருந்து பத்து வரையிலும், மாலையில் ஆறிலிருந்து எட்டு வரையும் திறந்து வைக்கிறார்.

அவரிடம் பேசிவிட்டு நூலகத்திற்குள் நுழைந்து புத்தகங்களை தேடினேன். ‘நடந்தாய் வாழி காவேரி’ என்னும் பழைய புத்தகம் ஒன்று கண்ணில் பட்டது. பேப்பர்கள் உடைந்துவிடும் அபாயம் இருந்ததால் ஜாக்கிரதையாகவே புரட்ட வேண்டி இருந்தது. வீட்டில் போய் படித்துக்கொள்ளலாம் என்கிற நினைப்போடு பெரியவருக்கு டாட்டா காட்டினேன்.

வீட்டிற்கு வந்து சேரும் இடைப்பட்ட பத்து கிலோமீட்டர் தூரத்திற்குள், சரியாக எட்டு நபர்கள், செல்போன்களை கழுத்திற்கும் தோள்பட்டைக்கும் இடையே வைத்து பேசியபடியே சென்றனர். ‘அழைப்பது எமனாகவும் இருக்கலாம்’ என்கிற விழிப்புணர்வு விளம்பரங்களை பார்த்தும் இவர்கள் திருந்தாவிட்டால் என்ன செய்வது என்றே நினைக்கத் தோன்றியது. தான் ‘போய்ச்சேர்வது’ மட்டுமல்லாமல் மற்றவர்களையும் துணைக்கு கூட்டிப்போய் விடுவார்களோ என்கிற பயமும் எட்டிப் பார்த்தது.

வீடு வந்து சேர்ந்ததும், ‘நடந்தாய் வாழி காவேரி’யை மேய்ந்தேன். சிட்டி தி.ஜானகிராமன் அப்புத்தகத்தை எழுதி இருந்தார். காவிரி உற்பத்தியாகும் தலைக்காவிரியில் தொடங்கி சங்கமமாகும் காவிரிப்பூம்பட்டினம் வரை புத்தக ஆசிரியர்களை உள்ளடக்கிய குழு ஒன்று பயணப்படுகிறது. காவிரியை பின்தொடர்ந்து இவர்களும் செல்கிறார்கள். இப்பயணத்தில் ஏற்படும் அனுபவங்களையே புத்தகமாக்கி இருக்கிறார்கள். கிட்டத்தட்ட நாற்பத்தி எட்டு வருடங்களுக்கு முன்னால் எழுதப்பட்டிருப்பதாக கூறுகிறது இப்புத்தகம்.

- ஊர் சுற்றி