
கடந்த 18 ஆம் திகதி உலகம் முழுவதுமுள்ள தமிழ் மக்களால் முள்ளிவாய்க்கால் இனவழிப்பின் நினைவேந்தல் தினம் அனுஷ்டிக்கப்பட்டது. கொல்லப்பட்ட தமது உறவுகளுக்காக அஞ்சலி செய்வதற்கு இலங்கையின் முள்ளிவாய்க்காலிலும் முக்கள் திரளாகக் கூடியிருந்தனர்.
வீடுகளிலும், பாடசாலை, பல்கலைக்கழகங்கள், அலுவலகங்களிலும் இந்த நாளானது மக்களால் நினைவு கூரப்பட்டிருந்தது.
கிளிநொச்சியிலுள்ள தனியார் வங்கி ஒன்றிலும் ஊழியர்கள் விளக்கேற்றி, மெழுகுதிரிகளைக் கொழுத்தி தமது அஞ்சலிகளைச் செலுத்தியிருந்தனர். இந்த நிகழ்வு தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருந்தது. அதனை அவதானித்த சிங்கள இனவாத செய்தித்தளமொன்று அந்த விடயத்தை முன்னிலைப்படுத்தி, 'விடுதலைப் புலிகளுக்கு அஞ்சலி செலுத்திய வங்கி' என்று செய்தியிட்டது. அந்தச் செய்தி, சமூக வலைத்தளங்களின் ஊடாக சிங்கள இனவாதிகளிடையே வேகமாகப் பரவியது. அதையடுத்து, குறித்த வங்கிக்கு பல தரப்பிலிருந்தும் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டன.
அந்த வங்கியும்கூட சிங்களவர்களையே உரிமையாளர்களாகவும் நிர்வாகிகளாகவும் கொண்டது என்பதால், நினைவேந்தலைச் செய்த கிளிநொச்சிக் கிளையின் உதவி முகாமையாளர் மற்றும் இன்னுமொரு ஊழியர் என இரண்டு பேரை பணியிடை நிறுத்தம் செய்திருக்கிறது. அவர்கள் மீதான விசாரணை விரைவில் முன்னெடுக்கப்படும் எனவும் கூறியிருக்கிறது. இந்தச் செய்தி வந்த பின்னரே சிங்கள இனவாதிகள் தமது ஆக்ரோஷத்தைக் குறைத்துக் கொண்டார்கள்.
ஆனால், மறுபுறமாக இது தமிழர்களிடத்திலே கோபக் கனலைத் தூண்டிவிட்டது. “எமது பணம் வேண்டும். ஆனால், எங்கள் உணர்வுகளை மதிக்க மாட்டீர்களா? அரசாங்கமே அனுமதிக்கிறது. அலுவலகத்தில் அஞ்சலி செலுத்தினால் தண்டனையா?” என்று கொதித்த தமிழர் தரப்பு, உடனடியாக செயலில் இறங்கியது. குறித்த வங்கியில் வைத்திருக்கும் “கணக்குகளை மூடுவோம், அந்த வங்கியைப் புறக்கணிப்போம்” என்று தீயாக பரவிய தகவல்களின் காரணமாக இலங்கையின் பல பாகங்களிலுள்ள குறித்த வங்கியின் கிளைகளில் தமிழர்கள் வைத்திருந்த ஆயிரக்கணக்கான கணக்குகள் இன்று மூடப்பட்டன.

குறிப்பாக வடக்கு கிழக்கில் உள்ள அந்த வங்கியின் கிளைகளுக்கு மதியப் பொழுதில் சென்றவர்களை “கணக்கை மூடவா வருகிறீர்கள்?” என்று வங்கிப் பணியாளர்களே கேட்கும் நிலையை அவதானிக்க முடிந்தது. அந்த அளவுக்கு இந்த விடயம் தமிழர்களால் தீவிரமாகக் கையாளப்பட்டதால் வங்கி நிர்வாகம் மட்டுமல்ல, இலங்கையின் பங்குச் சந்தையே ஆடிப்போயிருக்கிறது.
வெளிநாட்டிலிருந்து ஊருக்குப் பணம் அனுப்பும் தமிழர்களும் இனிமேல் ”இந்த வங்கியின் ஊடாக நாம் பணம் அனுப்பமாட்டோம்” என்று உறுதியெடுத்திருப்பதால் வணிகச் சந்தையில் இந்த வங்கி பாரிய அடியை வாங்கப் போவது உறுதி.
இது தொடர்பாக கிளிநொச்சியில் குறித்த வங்கிக் கிளையில் பணியாற்றும் ஊழியர் ஒருவரோடு பேசினோம்.
“சம்பவம் நடந்தது உண்மைதான். அது தொடர்பாக வங்கியின் உத்தியோகபூர்வ இணையத் தளத்திலும் செய்தி வெளியிட்டிருந்தார்கள். அதில், சொல்லியிருந்த காரணமும் இப்போது தெரிவிக்கும் காரணமும் வேறு வேறாக இருக்கின்றன. முதலிலேயே அந்த செய்தித் தளம் வெளியிட்டிருந்த தகவலுக்கு மறுப்புத் தெரிவித்து, இறந்த மக்களுக்குத்தான் அஞ்சலி செய்யப்பட்டது என்று குறிப்பிட்டிருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது. அந்த அஞ்சலி நிகழ்வில் பயன்படுத்தப்பட்ட படத்தில் சிங்கம் ஒன்று வாளோடு பாய்வதுபோல இருந்தது. அதுவும் சிங்களவர்களைக் கொதிப்படைய வைத்திருக்கிறது.
எமது நிறுவனத்தின் தலைமை அதிகாரிகளாகவும் சில இனவாதிகள் இருக்கிறார்கள். அவர்கள் எடுத்த அவசர முடிவால் இப்போது மொத்த நிறுவனமே பாதிப்புக்குள்ளாகியிருக்கிறது. கிளிநொச்சியில் இந்த வங்கிக் கிளை அமைக்கப்பட்டமைக்கு முக்கிய காரணமே முன்னாள் விடுதலைப் புலிப் போராளிகள்தான். அங்கவீனமடைந்த போராளிகளைக் கொண்ட ஃபேக்டரி ஒன்று இங்கே இயங்குகிறது. அதற்கான நிதிப் பரிமாற்றம், சம்பளப் பட்டுவாடா எல்லாம் எமது கிளையின் ஊடாகத்தான் நடக்கிறது. அப்படியிருக்க, இறந்த உறவுகளுக்கு அஞ்சலி செய்ததற்கு தண்டனை கொடுப்பதை என்னவென்று சொல்வது?” என்று வேதனைப் பட்டார் அவர்.
இந்த விடயம் தமிழ் அரசியல்வாதிகளின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது. பணி இடை நிறுத்தம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு நியாயம் கிடைப்பதோடு இனிமேலும் இப்படியான அடக்குமுறைச் செயற்பாடுகளை யாரும் மேற்கொள்ளக்கூடாது எனவும் தமிழர் தரப்பால் வலியுறுத்தப்பட்டிருக்கிறது.

Leave a comment
Upload