தொடர்கள்
தொடர்கள்
நான் ஒரு ரசிகன் (27) - மதன்

20180425183128847.jpeg

டேப் பகோடா முடி! நூடுல்ஸ் முடி!

என் அப்பா திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது ஒரு பயங்கரமான காரியத்தைச் செய்தார். அதைச் செய்துவிட்டு (சொந்த ஊரான) தஞ்சாவூர்ப் பக்கமே தலைகாட்டாமல் கோடை விடுமுறை நாட்களில்கூட திருச்சியிலேயே பதுங்கிக் கொண்டு காலத்தைக் கடத்தினார்.

‘அதைச் செய்துவிட்டு எப்படி என் அப்பா முன்னால் போய் நிற்க முடியும்? அவர் பெரிய மானஸ்தர். கோபக்காரர். பிரம்பை எடுத்து என்னை விளாசித் தள்ளி விடுவார். அந்த பயம் என் வயிற்றைக் கலக்கியது!’ என்று பிற்காலத்தில் (நான் பிறந்து வளர்ந்து கல்லூரிக்குப் போனபோது) அப்பா என்னிடம் குறிப்பிட்டார். அப்பா செய்த ‘பயங்கர காரியம்’ தன் குடுமியை நீக்கி கிராப் வைத்துக் கொண்டதே!

கல்லூரிக் காலத்தில் அப்பா திருச்சியைச் சேர்ந்த அழகிய பெண்களை ‘சைட்’ அடித்திருக்க வேண்டும். குடுமி அதற்குப் பெரிய இடையூறாக இருந்திருக்கிறது. தவிர, கல்லூரிக்குப் போனவுடன் மற்ற கிராப் நண்பர்களின் ‘ப்ரெய்ன் வாஷிங்’கும் நடந்திருக்கும். ‘ஜிட்டுக் குடுமி... ஜிட்டுக் குடுமி... சேதி தெரியுமா?’ என்று பாடிக் கிண்டல் செய்திருக்கக் கூடும்.

தஞ்சாவூரில் வீட்டில் தாத்தா, சின்னத்தாத்தா எல்லோரும் கட்டுக்குடுமியுடன் நடமாடினார்கள். கிராப்போடு வீட்டில் போய் நின்றால் அவ்வளவுதான்! பிற்பாடு ‘சனியனே ஒழிஞ்சு போ’ என்று தாத்தா சாபத்தோடு விட்டு விட்டதாகவும் அப்பா என்னிடம் சொன்னார்.

நல்ல காரியமாக நம்ம ஜெனரேஷனில் அந்தப் பிரச்னை இல்லை. ஆனாலும் இஷ்டப்படி கிராப் வைத்துக் கொள்ள முடியாது. நான் பள்ளியில் படித்தபோது, அப்பா கூடவே சலூனுக்கு வந்து முடிவெட்டுபவரிடம் ஒரு ‘டிஸ்கஷனே’ நடத்துவார். தலையின் கீழ்ப் பகுதியில் காதுகளுக்கு ஓர் அங்குலம் உயரம் வரை சுற்றிலும் மெஷின் கட் மூலம் மொட்டை. உச்சந்தலையில் மட்டும் ‘ஷார்ட்’ ஆக க்ராப்! (அண்மையில் இந்த க்ராப் பெரிய பாஷனாக இருந்தது!) தவிர, தினமும் ‘ஹைவே’ மாதிரி படு கச்சிதமான, நீண்ட வகிடு எடுத்து அப்பாதான் தலை வாரியும் விடுவார்.

பத்தாம் கிளாஸ் படிக்கும்போது எனக்கு ‘கிராப் சுதந்திரம்’ வந்துவிட்டது (சுதந்திரம் வராது, நாமதான் எடுத்துக் கொள்ள வேண்டும்!). போகப் போக தலைமுடி எனக்கு ஒரு ‘அப்ஸெஷ’னாகப் போய்விட்டது. அரை டம்ளர் தண்ணீரைத் தலையில் தெளித்துக் கொண்டு வாரிக் கொள்வேன். நான் தலை வாரும்போது அக்கம்பக்கத்தில் நிற்பவர்கள் மீதெல்லாம் மழை மாதிரி (அல்லது கோகுலாஷ்டமி உரியடி மாதிரி) தண்ணீர் தெறிக்கும். தலையில் பின்புறம் அழுத்தி வாரி முன்பக்கம் சுனாமி அலை மாதிரி பஃப் எடுத்துக் கொள்வதுதான் அப்போது ஃபாஷன். அதிலிருந்து கொஞ்சூண்டு கொத்து முடியை நெற்றியில் பெரிய ‘கமா’ மாதிரி தவழ விட்டுக் கொள்ள வேண்டும்!

நான் 11-ம் வகுப்புக்கு வந்தபோது ஜெமினி கணேசன் டைப் சுருள் முடி ஃபாஷன் ஆனது. நண்பன் சுந்தர் தன் சுருள் முடியை அப்படி அழகுபடுத்திக் கொள்வான். பின்னந்தலை வரை அலை அலையாகச் சுருண்டு நிற்கும் கிராப் அவனுடையது. குஞ்சலம் போல நெற்றியில் முடி ஸ்டைலாகத் தொங்கவிட்டுக் கொள்வான்.

சுருள்முடி ஆசை என்னைத் தொற்றிக் கொண்டு விட்டது. எனக்கோ நீளமான (Straight) கோடு போட்டது போல முடி. ‘உன்னாலும் சுருள்முடி பண்ணிக் கொள்ள முடியும்’ என்று நம்பிக்கையூட்டினான் சுந்தர். அவன் சொல்படி இரவு தூங்கும்போது தலையின் குறுக்கே வரிசையாக மெல்லிய கயிறுகளால் கட்டிக் கொண்டேன். தாடையில் முடிச்சு. மறுநாள் காலை நான்கைந்து இடங்களில் தலைமுடி அமுங்கியிருந்தது. ‘சுருள்முடி வர ஆரம்பித்து விட்டதோ?’ என்று கொஞ்ச நேரம் மகிழ்ச்சியடைந்ததோடு சரி, குளித்து விட்டுத் தலைவாரிக் கொண்டால் பழையபடி முடி நீளமாகி விடும்.

ஒரே ஒரு முடியை மைக்ராஸ்கோப் வழியாகப் பார்த்தால் சுருள் முடி ‘பாஸ்டா’ அல்லது டேப் பகோடா மாதிரி தட்டையாகவும், நீளமுடி நூடுல்ஸ் மாதிரி உருண்டையாகவும் இருக்கும். இந்த ஜெனடிக் விஷயங்களெல்லாம் புரிய பல வருஷங்கள் ஆனது தனிக்கதை!

மனித நாகரிகங்களில் தலைமுடி முக்கியப் பங்கு வகித்து வந்தது. ஒவ்வொரு காலகட்டத்திலும் ஹேர் ஸ்டைல் மாறிக் கொண்டே இருந்தது. பண்டைய எகிப்தியர்கள் (நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு) உடலில் ஒரு முடிகூட இல்லாமல் இருப்பதை நாகரிகமாகக் கருதினார்கள். அதற்காக மெனக்கெட்டு தேன், டர்பன்டைன் கலந்த ஒரு ‘பேஸ்ட்டை’ பயன்படுடத்தி முடிகளை (வேக்ஸிங் மூலம்!) அகற்றிக் கொண்டார்கள்.

அதே சமயம் எகிப்திய மன்னர்களின் சிற்பங்களையும், ஓவியங்களையும் பார்த்தால், அவர்கள் எல்லோரும் முகவாய்க் கட்டையில் ஒட்டிக் கொண்டிருக்கும் டார்ச் லைட் மாதிரி நீண்ட தாடியோடு காணப்படுவார்கள். நன்றாக ஷேவ் செய்து கொண்டு, ஒட்டுத்தாடி வைத்துக் கொள்வது எகிப்திய மன்னர்களின் சம்பிரதாயம்! மகாராணி கூட அரசவையில் உட்காரும்போது, ஒட்டுத்தாடி வைத்துக் கொள்ள வேண்டும்.

லாங் ஹேர் வைத்துக் கொள்வது அவமானகரமான செயல் என்று செயின்ட் பால் பிரசாரம் செய்ததால் ஐரோப்பாவில் ஷார்ட் கட் ஆக முடிவெட்டிக் கொள்வது வழக்கமானது. புனித பால் சொன்னார் என்பதற்காக 12-ம் நூற்றாண்டில் ஃபிரான்ஸ் மன்னர் ஏழாவது லூயி தன் முடியை ஷார்ட் ஆக வெட்டிக் கொண்டு அந்தப்புரத்துக்குச் சென்றார். ‘இது என்ன கண்றாவி’ என்று திடுக்கிட்ட மன்னரின் மனைவி எலினார், மூட்டை முடிச்சுகளோடு வேறு அரண்மனைக்குச் சென்று தங்க, முடியை மீண்டும் வளர்த்துக் கொண்டு கெஞ்சிக் கூத்தாடி மகாராணியைத் திரும்ப அழைத்துக் கொண்டு வந்தார் லூயி!

முதன் முதலில் ஐரோப்பாவில் விக் அணிந்தவர் ஃபிரான்ஸ் மன்னர் பதின்மூன்றாம் லூயி. சின்ன வயசிலேயே வழுக்கை விழுந்து விட்டது குறித்து மன்னர் கூச்சப்பட்டதுதான் காரணம். புகழ்பெற்ற பதினான்காம் லூயியும் வழுக்கை! காலையில் கட்டிலைச் சுற்றியிருந்த திரைச் சீலைகள் வழியாக மெய்க்காப்பாளர் மன்னருக்கு ‘விக்’கை நீட்ட வேண்டும். மன்னரின் வழுக்கையைப் பார்க்க யாருக்கும் அனுமதியில்லை. பிறகு வெள்ளை நிற ‘விக்’குகள் பேஷனாக வந்தது. இளைஞர்கள் கூட வெள்ளை நிற வெள்ளை விக் அணிந்தனர். அது அறிவின் அடையாளமாகக் கருதப்பட்டது. ஆகவேதான் இன்றும் பிரிட்டனில் நீதிபதிகள் வெள்ளைநிற விக் அணிகிறார்கள்.

புராண காலத்து ஸாம்ஸனுக்குப் (சாம்ஸன் - டெலைலா புகழ்!) பிறகு

18-ம் நூற்றாண்டில் நிஜ முடியை ‘லாங்’ ஆக வளர்த்துப் பிரபலப்படுத்தியது கவிஞர் லார்டு பைரன், பிறகு ஹிப்பிக்கள். தமிழ்நாட்டு பத்திரிகையாளர்களில் (அட்லீஸ்ட் கார்ட்டூனிஸ்ட்டுகளில்) முதன்முதலில் தோள்பட்டை வரை நீண்ட தலைமுடியும், குறுந்தாடியும் வைத்துக் கொண்டு அலைந்தது நான்தான் என்பது என் தாழ்மையான கருத்து.