
ஊட்டியில் நடந்த 122 வது மலர்க்காட்சியை முடித்து வைக்க ஊட்டி வந்தார் மாநில ஆளுனர் பன்வாரிலால் ப்ரோகித்.
திங்கட்கிழமை சென்னையில் இருந்து மாலை 4 .30 மணிக்கு விமானம் மூலம் கோவை வந்த ஆளுனர் கோத்தகிரி சாலை வழியாக ஊட்டிக்கு அழைத்து வரப்பட்டார். கவர்னரின் ‘கன்வாய்’ செல்ல வசதியாக மேட்டுப்பாளையம் - ஊட்டி கோத்தகிரி சாலை மூடப்பட்டு, அனைத்து வாகனங்களும் குன்னூர் வழியாக திருப்பி விடப்பட, சுற்றுலா வந்தவர்களும் உள்ளுர்வாசிகளும் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கினார்கள்.

குடும்பத்துடன் முதல் முறையாக ஊட்டி வந்த கவர்னர் 22 ஆம் தேதி காலை ராஜ் பவனை சுற்றி பார்த்து ரசித்தார். தமிழகத்திலும் ஷில்லாங்கிலும் தான் இரண்டு ராஜ் பவன்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மாலை 3 மணிக்கு மலர்க் கண்காட்சி நிறைவு விழாவில் ஆளுனர் கலந்துகொண்டார். ராஜ்பவனில் இருந்து பூங்காவினுள் வந்த ஆளுனர் மலர்க் கண்காட்சியைப் பார்த்து பிரமித்து போனார். உடன் தமிழக வேளாண்மைத் துறை அமைச்சர் துரை கண்ணு ஆஜர்.
பத்திரிகையாளர்கள் ஆளுனரை நெருங்காமல் பார்த்துக்கொண்டனர் அதிகாரிகள். விழாமேடைக்கு வந்த ஆளுனரை மலர்க் கொத்து மற்றும் நீலகிரி வாசனைப் பொருள்கள் கொடுத்து வரவேற்றார் மாவட்ட ஆட்சியர் .
ராஜ்ய சபா எம். பி . அர்ஜுனனின் கார் பூங்கா புல் தரையில் நிறுத்தப்பட இயற்கை ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவிக்க கார் அப்புறப்படுத்தப்பட்டது .
நீலகிரி மக்களவை உறுப்பினர் கோபாலகிருஷ்ணன் மற்றும் ஊட்டி எம்.எல்.ஏ. கணேஷ் மிஸ்ஸிங். கூடலூர் எம்.எல்.ஏ. திராவிட மணி எந்த விழாவிலும் கலந்து கொள்வது இல்லை. காரணம் அவருக்கு சரியான அழைப்பு செல்வது இல்லையாம்.
இந்த விழாவினைத் தொகுத்து வழங்கினார் நீலகிரி மாவட்ட கல்வி துறை ஆய்வாளர் சுகுமார்.
எம்.பி. அர்ஜுனன் மற்றும் வேளாண்மைத் துறை அமைச்சர் துரைக்கண்ணு தங்களின் பேச்சை வாசித்த பின் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தன் உரையை வாசித்தார்.
ஆளுனர் பன்வாரிலால் தன் உரையை வாசிக்கும் முன்

"எப்படி இருக்கீங்க .... சௌக்கியமா இருக்கீங்களா? தமிழ் இனிமையான மொழி.. அதனால் தமிழனாக வாழ விரும்புகிறேன்’’ என்று கூறி கைதட்டலைப் பெற்றார். ( அதே சமயம் தூத்துகுடியில் தமிழ் மக்கள் சுட்டு கொல்லப்பட்டு கொண்டிருந்தது ஆளுனருக்குத் தெரியுமா? தெரியாதா? என்று புரியவில்லை). தன் ஆங்கில உரையை அவர் தொடர்ந்து வாசிக்க, அமர்த்திருந்தவர்கள் இடத்தை காலி செய்தனர்.
வீட்டுப் பூங்காக்களை பராமரிப்பவர்களை பாராட்டினார் கவர்னர் . பின்னர் 200 பரிசுகளை வழங்கினார். பரிசுகளை மாவட்ட ஆட்சியர் ஆளுனருக்கு எடுத்துக் கொடுத்தார் .


மாவட்ட ஆட்சியர் உட்பட பரிசுகள் பெற்று சென்றனர். கடந்த பன்னிரண்டு வருடமாக தொடர்ந்து வீட்டுப் பூங்காவிற்காக முதல் இரண்டு பரிசுகளை தட்டி செல்லும் விக்டர் பிரபு ராஜ் கூறும் போது, "வருடம் தோறும் இந்த பரிசு பெறுவது பெருமையான விஷயம். அதிலும் மாநில ஆளுனரின் கரத்தால் பெறுவது இனிமையான ஒன்று. என் வீடு லவ்டேல் பகுதியில் உள்ளது. என் வீட்டுக்கு முன்பு பசுமைப் புல்தரை மற்றும் சுற்றிலும் நிறைய பூக்கள் நானே வளர்த்துளேன் . தோட்டக்கலை அதிகாரிகள் நேரில் வந்து பார்வையிட்டு பரிசுக்குத் தேர்வு செய்வார்கள். எனக்கு எப்போதும் முதல் அல்லது இரண்டாவது பரிசு கிடைத்து வருகிறது" என்றார் உற்சாகமாக.
விழா முடிந்தவுடன் ஆளுனரை தூத்துகுடி துயரம் குறித்து பேட்டி கேட்க.. ஆளுனர் நழுவிச் சென்றார். மாலை 6 மணிக்கு பழங்குடியினர் கலாச்சார மையத்தில் பழங்குடிகளின் கலை விழாவை ஆளுனர் துவக்கி வைக்க இருந்த நிலையில் அவர் மாவட்ட ஆட்சியரிடம் பேசினார். மாவட்ட ஆட்சியர் இந்த விழா ரத்து செய்யப்படுவதாக கூறினார்.
23 ஆம் தேதி காலை கவர்னர் தன் குடும்பத்துடன் ஊட்டி ரோஜா பூங்காவிற்கு சென்று கிறீன் ரோஸ் மற்றும் பிளாக் ரோசை பார்த்து அசந்து போய்விட்டாராம். ஒரே இடத்தில நாலாயிரம் வகை ரோஜாக்களா என்று வியந்தார்.

பின்னர் ஊட்டி படகு இல்லத்திற்கு சென்றார் கவர்னர். உடகாக் சாலையில் ஆளுனர் செல்ல அந்தப் பகுதி வீடுகளில் இருந்து யாரும் வெளியே வராமல் பார்த்துக் கொண்டனர் காவல் துறையினர். புனித சூசையப்பர் பள்ளியின் கதவை இழுத்து மூடிவிட்டனர் காவல்துறையினர்.
ஏற்கனவே போக்குவரத்து நெரிசலில் ஊட்டி தத்தளிக்க கவர்னரின் விஜயத்தால் மேலும் போக்குவரத்து நெரிசலில் திணறினர் பொது மக்கள் .
குந்தா சாலையில் உள்ள சமராஜ் டீ எஸ்டேட்டில் உள்ள கிருஷ்ணர் கோயில் , பைக்காரா படகு சவாரி, அவலாஞ்சி. ஊட்டி நகர் வலம்.... மாவட்ட ஆட்சியர் அலுவலக விசிட் என்று ஏகப்பட்ட திட்டங்களில் இருந்தார் ஆளுனர்.. 31 ஆம் தேதி வரை நீலகிரியைச் சுற்றி வர இருந்த அவர் தூத்துகுடி பிரச்சனை ஏற்பட அவசரமாகச் சென்னை திரும்பினார்.
ஊட்டிவாசிகளும் சுற்றுலாவாசிகளும் நிம்மதியடைந்தனர்.
.

Leave a comment
Upload