ஔவை உண்ட கதை

ஔவை பிராட்டியின் தமிழ் செய்யுள்கள் எளிமையும் கூர்மையும் உள்ளவை. மெல்லிய எள்ளலும் குறும்பும் கொண்டவை.
இதோ ஔவையின் சுவையான பாடல் ஒன்று.
பாண்டிய மன்னன் வழுதி திருமணத்தில் பங்கேற்ற ஔவை களைத்து தள்ளாடியபடி வந்து கொண்டிருந்தார். எதிரே வந்த ஒருவர் ஔவையைப் பார்த்து,
"என்ன பாட்டி! அரசன் வீட்டுக்கு கல்யாணத்தில் வயிரார உண்டாயா? என்னவெல்லாம் இலையில் போட்டார்கள்?" என்று ஆவலாக்க் கேட்டார்.
அவருக்கு பதிலாக இந்தப் பாடல் சொன்னாராம் ஔவை!
வண்டமிழைத் தேர்ந்த வழுதி கல்யாணத்து
உண்டபெருக்கம் உரைக்கக்கேள் - அண்டி
நெருக்குண்டேன் தள்ளுண்டேன் நீள்பசியினாலே
சுருக்குண்டேன் சோறுண்டிலேன்.
விளக்கம்
வண் தமிழை கற்றுணர்ந்த வழுதியின் இல்லத் திருமணத்தில் நான் நிறையவே உண்டேன் .அந்தக் கதையை சொல்கிறேன் கேள்!
அரசனைத் தேடிச் சென்றபோது கூட்டத்திலே நெருக்குண்டேன்; சோற்றுப் பந்திக்கான முட்டல்மோதலில் தள்ளுண்டேன்; நீண்ட நேரக் காத்திருப்பிலும், அதிகப் பசியினாலும் என் மேனி சுருக்குண்டேன். இவ்வளவு 'உண்ட' நான் சோற்றை மட்டும் உண்ணவில்லையே !
செவிக்கு உணவளிப்பவர்களின் வயிற்றுக்கு உணவளிப்பவர் அற்றை நாள் தொட்டே குறைவு தான்!
பாடல் எழுதப்பட்ட காலம், மக்கள் சோற்றுக்கு அலையும் வகையில் பஞ்ச காலமாக இருந்திருக்கலாம் . அல்லது ஆட்சியின் திறமையின்மை, வரிக்கொடுமை என்று மக்கள் பிழியப்பட்ட காலமாகவும் இருந்திருக்கலாம்.
ஔவை இதில் மன்னன் பேரை உரைத்ததால், அவர் நோக்கம் அரசின் செயலின்மையை பதிவு செய்வதாகத் தோன்றுகிறது. ஊடகக் கேமரா இருந்தால் 'காச் காச்' என்று காய்ச்சியிருப்பார். ஓலை மட்டுமே கிடைத்ததால் பாட்டு மட்டும் எழுதினார் போலும்!
கூழுக்கும் பாடியவள் ஔவை. பசியின் கொடுமையையும் வயிற்றுப் பாட்டினையும் நன்குணர்ந்தவள்.
‘நல்வழி’யில் ஔவை வயிறு படுத்தும் பாட்டைப் பற்றிச்
சொல்வதைப் பார்ப்போம்
ஒருநாள் உணவை ஒழியென்றால் ஒழியாய்
இருநாளுக்கு ஏலென்றால் ஏலாய்-ஒருநாளும்
என்னோ வறியாய் இடும்பைகூர் என்வயிறே
உன்னோடு வாழ்தல் அரிது.
அதாவது,
உணவு கிடைக்காமல் போகும் நேரத்தில், ஒரு நாள் உணவின்றி கிடப்போம் என்றாலும் போகட்டுமென வாளாயிருக்க மாட்டாய்!
இருக்கும் போதோ, இரண்டுநாள் உணவைப் புசி என்றாலும் ஏற்கமாட்டாய்!
ஒரு நாளேனும் நான் படும்பாட்டை அறியாய்!
துன்பமே தரும் என் வயிறே! உன்னோடு சேர்ந்து வாழ்வதோ என்னால் ஆவதில்லை!
வயிற்றின் நியாயம் என்றுமே ஒன்றே ஒன்று தானோ!

Leave a comment
Upload