தொடர்கள்
கதை
இதுவே என் தேசம். சுந்தர மணிவண்ணன்

20260023234020621.jpeg

“என்ன சார் இது?

சென்னையைத் தாண்டி இருநூறு கிலோமீட்டர் தூரம்…

ஊருக்கே ஒதுக்குப்புறமான இந்த இடத்த்தி்ல்,

வருஷா வருஷம், சுதந்திர தினத்துக்கு மட்டும் வந்து,

தேசியக் கொடியை ஏத்திட்டு போறீங்க?”

என் கார் டிரைவர் ஆச்சர்யம் கலந்த குரலில் கேட்டான்.

அவன் கேள்வியில் ஒரு நியாயம் இருந்தது.

நான் சென்னையில் வாழும் ஒரு தொழிலதிபர்.

வேலைகளையும், கூட்டங்களையும், வசதிகளையும் விட்டுட்டு,யாருமே இல்லாத இந்த இடத்துக்கு வருவது,அவனுக்குப் புரியாத விஷயம்.

ஆனால்,

இந்த இடத்தின் புனிதத்தை நான் மட்டுமே அறிவேன்.எங்கள் பள்ளிக்குச் செல்லும் பாதையில்,ஏரிக்கரையின் இறக்கத்தில் பழம் பெரும் ஆலமரத்தடியில் தான்,ஆறுமுக கோனாரின் வாசம்.

கிழிந்து போன கதர் சட்டை.நெற்றி நிறைய விபூதி.கால ஓட்டத்தில் பதிந்த அழுக்கு.

அந்த அழுக்குக்குள்ளேயே ஒரு பழைய தேசியக் கொடி.

அதைத் தன் சட்டைப் பைமேல்,சேஃப்டி பின்னால் தைத்து வைத்துக் கொண்டு, தினமும் அதற்கு வணக்கம் செலுத்துவார்.

பாரதியின் தேசியப் பாடலை, உரத்த குரலில் பாடும் போது,

பள்ளிக்குச் செல்லும் மாணவனான நானும்

அந்தக் குரலுக்குள் கரைந்து போவேன்.

பள்ளி முடிந்து திரும்பும் நேரம், நாங்கள் எல்லாரும் அவரை நோக்கி ஓடுவோம்.

“பிள்ளைகளே… வாங்க… வாங்க…”

“மாலை முழுதும் விளையாட்டு”

இதைத்தானே பாரதி சொன்னான் என்று சிரிப்பார்.

“தாத்தா, போரடிக்குது…” ஏதாவது கதை சொல்லுங்க…”

எங்களுக்கு கேட்க ஆசை. அவருக்கும் சொல்ல ஆசை.

“உட்காருங்க… கண்ணுங்களே.”

அந்த ஆலமரத்தடியில் அவர் கதை சொல்லத் தொடங்குவார்.

கதை அல்ல. அது நிஜம்.

மூச்சிருக்கும் வரை மூவர்ணக் கொடியை விடாத, திருப்பூர் குமரனின் சரிதையை,

நடித்துக் காட்டிச் சொல்லும் போது,

“என் தேசம்” என்ற சொல் எங்கள் ரத்தத்தில் இறங்கிவிடும்.

சின்னதும் பெரியதுமாக அவர் சிறைப் பட்டக் காலங்கள் மொத்தம் பத்து ஆண்டுகள்.

“அதோ பாரு…”

இடிந்து விழுந்த கான்க்ரீட் கட்டிடத்தைச் சுட்டுவார்.அங்கே தான்…”

தேசியக் கொடியைச் சுமந்து போராடிய போது,

தடியடிபட்ட தோள்களின் தழும்புகளை,

அவர் பெருமையோடு காட்டிய தருணங்கள்,

இன்றும் கண்களில் நிற்கின்றன.

சொத்து, சுகம் —எல்லாவற்றையும் இழந்து,

இந்த ஆலமரத்தடியில் ஒரு குடிசையில் வாழ்ந்தவர்.

“நெஞ்சம் பொறுக்குதில்லையே

இந்த நிலை கெட்ட மாந்தரை நினைத்தால்…”

உணர்ச்சி குரலில் வழியும் போது,

நாங்கள் உறைந்து போவோம்.

அவர் தந்த அந்த தேச உணர்வே,

என்னை என்னாட்டிலேயே தங்க வைத்து,

இந்த தேசத்தின் சேவையில்,

என்னைக் கட்டிப் போட்டது.

வசதியும் வாய்ப்பும் நிறைந்த பிறகு,

ஒரு நாள் அவரை அழைக்கச் சென்றேன்.

“ஐயா…

இனி இங்கே இருக்க வேண்டாம்.

என்னுடன் வந்து விடுங்கள்.” அவர் சிரித்தார்.

“தம்பி…உண்மையான சுதந்திரத் தியாகி

எந்த உதவியையும் எதிர்பார்க்க மாட்டான்.

அந்த மன உறுதியே, நாம் இன்று அனுபவிக்கும் இந்த சுதந்திரத்தின் ஆணிவேர்.”

உதவித் தொகையை வாங்க மறுத்த அந்த நொடியில்,அவர் இன்னும் உயரமாகத் தெரிந்தார்.

அவர் வாழ்ந்து மறைந்த இடம் —

அவர் நினைவாக அமைத்த மேடையில்

தேசியக் கொடியை ஏற்றி,

“ஜெய் ஹிந்த்” முழங்கும் போதெல்லாம்,

அந்தக் காற்றில் என் ஆறுமுக கோனாரும்

கலந்திருப்பதை உணர்வேன்.

ஒவ்வொரு வருடமும்,“என் தேசம்” என்ற நீங்கா உணர்வு என்னை இங்கே இழுத்து வருகிறது.

கொடியை இறக்கித் திரும்பும் போது,

என் கார் டிரைவர் மெதுவாக சல்யூட் செய்தான்.

“சுரண்டி வாழ்வதே சுதந்திரம்னு

நினைக்கிற கூட்டத்துல,

இப்படியும் ஒரு மனிதரா…”