தொடர்கள்
அனுபவம்
அஞ்சு பத்துவின் ஜிம்மென்று ஒரு காதல்

ஆசிரியர்: அசோக்குமார்

ஜனவரி சென்னை புத்தக கண்காட்சி என்பது ஒரு பண்பாட்டு நிகழ்வாக மனதில் பதிந்து போன ஒரு கொண்டாட்டம்.

பொங்கலுக்கு வீட்டை சுத்தம் செய்வது போல டிசம்பரில் இருந்தே புது வெளியீடுகளை குறித்த செய்திகளை ஆர்வமாக பார்ப்பதும், பிடித்த நூல்களை குறித்து வைத்து கொள்வதும் மனதிற்குள் ஒரு சொல்ல முடியாத பரவசத்தை ஏற்படுத்தும்.

ஏற்கனவே வாங்கி வைத்திருக்கும் புத்தகங்களை வாசிக்காமல் புதிதாய் ஒரு புத்தகத்தையும் வாங்க கூடாது என்ற புத்தாண்டு சபதத்தை எடுத்து வைத்திருந்தாலும்....

நட்புகள் புத்தக கண்காட்சிக்கு சென்று விட்டு போடும் புகைப்படங்களை பார்க்கும் தருணத்தில் எடுத்த சபதமெல்லாம் காற்றில் பறந்து விடும்.

எதுவும் வாங்க வேண்டாம், சும்மா போய் சுத்தி பாத்திட்டு வந்திரலாம் என்று கிளம்பி பர்ஸை காலி பண்ணி தூக்க முடியாமல் பை நிறைய புத்தக கட்டுகளை தூக்கி வருவது எனது வாடிக்கை.

வீட்டில் வாயு மூலை, அக்கினி மூலை, ஈசான்ய மூலை என்று திரும்பிய பக்கமெல்லாம் பாதி வாசித்து கவுத்து வைக்கப்பட்ட புத்தகங்கள் குடும்ப உறுப்பினர்களை கடுப்பேற்றி கொண்டிருக்க....

என்னது!..

திரும்பவும் இவ்வளவா என்று அவர்களின் அதிர்ச்சி பார்வையை காணாதது போல பாவனை செய்வது தான் அப்போதைக்கு தப்பிக்க ஒரே வழி.

இந்த முறை வாங்கிய புத்தகங்களை எல்லாம் உடனே வாசித்து விட்டு தான் அடுத்த வேலை என்ற லட்சியத்துடன் களமிறங்கி இருக்கிறேன்.

புது வெளியீடுகளில் மனதை லகுவாக்கக் கூடிய நகைச்சுவை கதைகள் அடங்கிய தொகுப்பு தான் இந்த "ஜிம்மென்று ஒரு காதல்". வருடத்தின் தொடக்கத்தை நல்ல மகிழ்ச்சியான கதைகளுடன் தொடங்கலாமே என்று எடுத்தது தான் இந்த நூல்.

2026002216502678.jpg

ஒல்லி பெல்லியான பத்துவும்(பத்மநாபன்), கொஞ்சம் பூசிய தேகம் படைத்த அஞ்சுவும்(அஞ்சலி) தம்பதியர். இருவருக்கும் இடையே நடக்கும் அன்றாடங்களை காமெடி கலந்து தந்திருக்கிறார் ஆசிரியர் அசோக்குமார் .

முன்பெல்லாம் இப்படி சிரிப்பு கதைகள் அடிக்கடி வரும், இப்போதெல்லாம் மக்களுக்கு நகைச்சுவையை ரசிக்கும் திறன் குறைந்து விட்டதா அல்லது எழுத்தாளர்களுக்கு எழுத வரவில்லையா என்று தெரியவில்லை சீரியஸான எழுத்துக்களாக தான் அதிகம் எழுதுகிறார்கள்.

காலையில் இருந்து மாலை வரை வேலை செய்து அலுத்து சலித்து மனதை லகுவாக்கிக் கொள்ள நாம் போனை நாடுவதற்கு பதில் இப்படி ஒரு நூலை படித்தால் வெடித்து சிரித்து நம் உடலும் மனமும் சோர்வு நீங்கி உற்சாகம் கொள்ளும் என்பது உறுதி.

பதினோறு கதைகள் நிறைந்த தொகுப்பு இது.

கலர்புல்லான முகப்பு அட்டையிலேயே அஞ்சுவும் பத்துவும் இப்படி தான் இருக்க கூடும் என்று நமக்கு ஒரு கற்பனை விரிகிறது.

எதற்கெடுத்தாலும் டென்ஷன் ஆகும் பத்துவும் எதற்குமே அலட்டிக் கொள்ளாத அஞ்சுவும் பலர் வீட்டில் நாம் கண்டிருக்க வாய்ப்புண்டு.

"நம்மை போல இன்னொருத்தனும் இருக்கான்ய்யா" என்ற உணர்வை ஏற்படுத்தவே இதை எழுதியதாக கூறுகிறார் ஆசிரியர்.

ரமணி vs ரமணி போல டைமிங் காமெடிகள் நிறைந்த கதைகள் இவை. "பதினாறும் பெற்று.." என்ற கதையில் புதுமண தம்பதிகளான அஞ்சுவும் பத்துவும், பத்துவின் நண்பன் பரந்தாமன் வீட்டிற்கு விருந்திற்கு போகிறார்கள்.

பதினாறு பிள்ளைகளை பெற்ற பரந்தாமனின் ஒல்லி தாயாரை கண்டு மலைக்கிறாள் அஞ்சு, "வீட்டிலுள்ள குழந்தைகள் அனைவரும் இருக்கும் ஞாயிறுகள் எல்லா கிளாசுக்கு பீட்டி பீரியட் விட்ட கிரெளண்ட் மாதிரி இருக்கும் எங்கள் வீடு" என்கிறாள் வீட்டில் பதினாறாவதாக பிறந்த பெண்.

இந்த குடும்பத்தின் அலப்பறைகளை கண்டு ஐயோ குழந்தையா என்று பயந்து ஓடுகிறார்கள் அஞ்சுவும் பத்துவும்.

"கல்யாணக் கனவு" பொதுவாக இந்த கல்யாணக் கனவுகள் திருமணத்திற்கு முன்பு தான் வரும் ஆனால் ஒரு மாற்றத்திற்கு நம் பத்துவிற்கோ கல்யாணத்திற்கு பிறகு வருகிறது.

என்ன முயன்றும் அவனால் கனவில் அஞ்சுவின் கழுத்தில் தாலி கட்ட இயலவில்லை, இதனால் தவித்து போகும் பத்துவை சுலபமாய் சமாளித்து சிக்ஸர் அடிக்கிறாள் அஞ்சு. "பல்லழகர்", இந்த கதையை வாசிக்கும் போது நான் மருத்துவமனைக்கு என் மாமியாரை அழைத்துச் சென்றிருந்தேன், காத்திருக்கும் நேரத்தில் வாசித்துக் கொண்டிருந்தேன், கதையின் முடிவில் களுக்கென்று என்னையும் அறியாமல் நான் சிரித்து வைத்து விட மருத்துவமனையில் அனைவரும் என்னை ஒரு விசித்திர ஜந்துவை பார்ப்பதை போல் பார்த்தனர்.

பல் எடுக்க போன பத்துவின் துயரங்களை நாமும் பலமுறை அடைந்திருப்போம் என்றாலும் இப்படி நகைச்சுவை கண்ணோடு அதை கண்டிருப்போமா என்பதே இங்கு ஆச்சர்யம்.

"தலை தீபாவளி" கதையில் ஆசிரியர் தன்னுடைய மாமனார், மாமியார், மச்சினன் மேல் இருந்த கோப தானங்களை எல்லாம் நகைச்சுவையாக பார்த்து பார்த்து செதுக்கி இருக்கிறார்....

இதை வாசிக்கும் பல ஆண்கள், "என்னமா எழுதி இருக்காரு!" என்று ரசித்து சிலாகிக்கவும், பெண்கள் "ஓஹோ! நீ என் கையில் சிக்காமலா போவ !' என்று வன்மம் கொள்ளவும் வாய்ப்புகள் அதிகமுண்டு.

ஒருவழியாக இவர்கள் தலை தீபாவளி கொண்டாடி முடிப்பதற்குள் இவர்களுக்கு ஆறு என்ற ஆரவ் பிறந்து விடுகிறான். அஞ்சுக்கும் பத்துக்கும் ஆறு பிறப்பது ஒன்றும் புதிதல்லவே !

"கோவிட் வென்றான்" கதையில் கொரோனா காலகட்டத்தில் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாமா வேண்டாமா என்று மனதிற்குள் ஊசலாடிக் கொண்டிருந்த பலரின் மனநிலையை பிரதிபலிக்கிறார் ஆசிரியர்.

பேங்க் மேனேஜரான பத்து ஊசி போட்டுக் கொண்டானா என்பதை தெரிந்து கொள்ள நீங்கள் நூலை தான் வாசிக்க வேண்டும்.

"நேர்காணல்" என்ற கதை, அபியும் நானும் படத்து பிரகாஷ் ராஜை நியாபக படுத்துகிறது, நேர்முகத் தேர்வில் அஞ்சுவிடம் கேட்க படும் இகழ்ச்சியான கேள்விக்கு அவள் தரும் நச் பதிலுக்காக ஆசிரியருக்கு ஒரு சபாஷ்.

இப்படி விடிய விடிய நின்று அப்ப்ளிகேஷன் வாங்கிவிட்டு அந்த பள்ளியில் மகனை சேர்க்காமல் வேறு பள்ளியில் சேர்த்த அனுபவம் எங்களுக்கும் உண்டு.

"எலி வேட்டை" இந்த கதையை வாசித்த போது இப்படி எலி வேட்டை நடத்தி அதை பற்றி நான் எழுதிய கட்டுரையையே நான் நினைத்துக் கொண்டேன்.

ஏனோ எலிகளை பார்த்தால் ஏற்படும் அருவருப்பு அஞ்சுவை போல் எனக்கும் உண்டு, பத்து கண்டது போல நானும் ஒரு அட்டை பெட்டி நிறைய எலி குஞ்சுகளை கண்டெடுத்தேன் அதை அப்படியே கொண்டு போய் வீட்டிற்கு வெளியில் வைப்பதை தவிர அவைகளை பேணி வளர்க்கும் அளவுக்கு பொறுமையெல்லாம் நமக்கு ஆகாது சாமி.

"அறுபதாம் கல்யாணம்" உறவுகள் புடைசூழ ஒரு குடும்ப விழா நடத்த வீட்டில் இருப்பவர்கள் எவ்வளவு பாடு படவேண்டி இருக்கிறது என்பதை எடுத்துச் சொல்லும் கதை. கதையில் ஜொலிப்பது முதலில் மச்சினர் கண்ணன் என்று நினைத்தால் இறுதியில் மாமியார் வெல்கிறார்.

தலை தீபாவளி கதையில் ஏற்றி விட்ட வன்மங்களால் கொதித்திருக்கும் உறவுகளை இந்த கதை மூலம் கூல் செய்து மாமியார், மச்சினர் இருவரிடமும் இருந்து தப்பித்துக் கொள்கிறார் ஆசிரியர். ஒரு வேளை அவர்கள் நூலை படித்த விட்டால் தப்பிக்க வழி வேண்டாமா !

"ஜிம்மென்று ஒரு காதல்", பத்து தன் உடம்பை ஏற்ற ஜிம்மிற்கு போவதில் தொடங்குகிறது, இதனால் அவன் படும் அவஸ்தைகள் நமக்கு சிரிப்பு வெடிகள். "சடுகுடு வயிறு" கதையும் அதே பாணியில் அமைந்த கதை தான்.

"கற்றது காதல் அளவு" ஒரு ஜாலியான காதல் கதை, இப்படியான கதைகள் நம்மை இளமையாக உணர வைக்கின்றன என்பதையும் சொல்ல வேண்டும். ஒரு மாற்றத்திற்கு அஞ்சு ஒல்லியாகவும் பத்து குண்டாகவும் இருக்கும் விதமாக ஒரு தொகுப்பை போடும்படி ஆசிரியருக்கு பரிந்துரைக்கிறேன்.

சிரித்து, ரசித்து கவலை மறந்து வாசிக்க முடிந்த அருமையான தொகுப்பு இந்த நூல். மன இறுக்கத்தில் இருப்பவர்கள் வாசித்தால் வாய் விட்டு சிரித்து நோயிலிருந்து விடுபடலாம்.

வெளியீடு : நாற்கரம்