சந்திர ஸ்தலம் - திங்களூர் கைலாசநாதர் கோவில்

பிரசித்தி பெற்ற சூரியனார் கோயிலைப் பற்றி இதற்கு முன் உள்ள பதிவில் பார்த்தோம். நவகிரக ஸ்தலங்களில் இரண்டாவது சந்திர ஸ்தலமாக விளங்குவது தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே உள்ள திங்களூர் கைலாசநாதர் கோயில். இக்கோயில் சோழ மன்னரால் ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட நவக்கிரக ஸ்தலங்களில் சந்திர பகவானுக்குரிய முதன்மையான ஸ்தலமாக விளங்குகிறது. பதினாறாம் நூற்றாண்டில் நாயக்க மன்னர்களால் புனரமைப்பு செய்து பராமரிக்கப்பட்டுள்ளது. தேவாரப் பாடல் பெயர்பெற்ற தலங்களில் ஒன்றாகும். இங்குள்ள மூலவர் பெரியநாயகி அம்மன் சமேத கைலாசநாதர். இக்கோயிலில் சந்திரன் தனிச் சந்நிதியில் அருள்பாலிக்கின்றார். இங்குச் சந்திர பகவான் சிவபெருமானை வழிபட்டு, சாபம் நீங்கி அருள் பெற்றமையால் திங்களூர் எனப் பெயர் பெற்றது.
சந்திர தோஷம் உள்ளவர்கள், மன அமைதி வேண்டியும், கல்வியில் சிறக்கவும் இங்கு வந்து வழிபடுகின்றனர். திங்கட்கிழமை இங்கு வழிபட உகந்த நாளாகும்.

ஸ்தல புராணம்:
பண்டைக் காலத்தில் கீழுர் என்று அழைக்கப்பெற்ற இத்தலத்தில் எழுந்தருளியுள்ள கைலாசநாதரைச் சந்திரன் வழிபட்டு தன் குறைகளை நிவர்த்தி செய்து கொண்டமையால், திங்களூர் என்னும் சிறப்புப் பெயர் உண்டாயிற்று. சந்திரன், சிவனை நோக்கி தவம் புரிந்து, சாப விமோசனம் பெற்ற தலம் என்பதால் இது சந்திர பரிகார ஸ்தலமாகப் போற்றப்படுகிறது.

சந்திரனின் சாபத்தைப் போக்கிய ஸ்தலம்:
தட்சன் 27 நட்சத்திரமாகத் திகழும் தனது மகள்களைச் சந்திரனுக்கு மணமுடித்து வைத்தான். ஆனால் ஒரே மாதிரி அன்பு செலுத்த வேண்டிய சந்திரன், ரோகிணியிடம் மட்டும் தனி பிரியம் செலுத்தினார். மற்ற 26 நட்சத்திர மனைவிகளும் தங்கள் தந்தை தட்சனிடம் முறையிட்டனர். மாமனார் தட்சன் 27 மனைவிகளிடமும் சமமாக அன்பு செலுத்தும்படி கூற, சந்திரன் அதை ஏற்க மறுத்தார். கோபம் கொண்ட தட்சன், சந்திரனின் கலைகள் பதினான்கும் தினம் ஒன்றாகத் தேய்ந்து போகும்படி சாபம் கொடுக்கிறான். அவர் இட்ட சாபம் நீங்கச் சந்திரன் இந்த தலத்தில் நீண்ட காலம் தவம் செய்தார். தன் பெயரில் ஒரு தீர்த்தம் உண்டாக்கி இறைவனைப் பூஜித்தார். சந்திரன் முழுவதுமாக தன் பொலிவை எல்லாம் இழந்து நிற்கும் வேளையில், ஒரு பங்குனி மாதப் பௌர்ணமியில், அவருக்குக் காட்சி தந்த சிவ பெருமான், தேய்ந்த நிலையில் பிறையாக இருந்த சந்திரனைத் தனது முடியில் சூடி, சந்திர மெளலீஸ்வரராக காட்சி தருகிறார். அதோடு, தட்சனின் சாபத்தை முழுவதுமாக நீக்காமல் 15 நாட்கள் தேய்ந்தும், பிறகுத் தனது அருளால் 15 நாட்கள் வளரவும் செய்வாய் என வரமளித்தார். சந்திரன் தவம் செய்து பலனடைந்த திங்களூர் சந்திரனுக்கு உரியத் ஸ்தலமாக மாறியது.
ஸ்தல அமைப்பு:

திங்களூர் சந்திர பகவானின் கோயில் கிழக்கு நோக்கி அமைந்திருந்தாலும், கோயிலின் பிரதான நுழைவாயிலான இராஜகோபுரம் தெற்கு திசையில் அமைந்துள்ளது. பொதுவாகக் கிழக்கு நோக்கிய கோயில்களுக்குக் கிழக்கு வாயிலே பிரதானமாக இருக்கும், ஆனால் இங்கு தெற்கு வாயில் வழியாகவே பக்தர்கள் உள்ளே நுழைகின்றனர். கோயிலுக்கு முன் சந்திர தீர்த்தம் உள்ளது. ஒற்றை பிரகாரத்தைக் கொண்ட இந்த ஸ்தலத்தில் மூலவராகக் கைலாசநாதர் முடியில் சந்திரப் பிறையைச் சூடிய படி கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். அம்பாள் பெரியநாயகி சந்நிதி தெற்கு நோக்கி அமைந்துள்ளது. வெளிப் பிரகாரம் வலம் வரும்போது விஷம் தீர்த்த விநாயகர் சந்நிதி, சுப்பிரமணியர் சந்நிதி, கோஷ்டத்தில் அமர்ந்த நிலையில் தட்சிணாமூர்த்தி, கஜலட்சுமி சந்நிதி மற்றும் சண்டிகேசுவரர் உடன் சண்டிகேஸ்வரி சந்நிதி, பைரவர் சந்நிதி, நவகிரக சந்நிதி ஆகியவை உள்ளன. பிராகார முடிவில் கிழக்கு நோக்கிய வாயிலை அடுத்து இடப் புறத்தில் இத்தலத்தின் க்ஷேத்திர பாலகரான சந்திர பகவானின் திருச்சந்நிதி, மேற்குத் திசை பார்த்து நின்ற திருக்கோலம். இரு திருக்கரங்களிலும் மலர் மொட்டினை ஏந்தி அருள்பாலிக்கின்றார். சந்நதிக்கு முன்னால் அமர்ந்து வழிபாட்டு மண்டபமும் உள்ளது.
திருக்கோயில் உள்மண்டபத்தின் இடப்புறம் அப்பூதியடிகள், அவருடைய மனைவியர், மூத்த திருநாவுக்கரசு, இளைய திருநாவுக்கரசு ஆகியோர் மூர்த்தங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
ஸ்தல தீர்த்தம் : சந்திர தீர்த்தம், காவிரி ஆறு.
ஸ்தல விருட்சம் : வில்வம் மற்றும் வாழை.

ஸ்தல பெருமை:
சந்திரன் இங்குச் சிவனை வழிபட்டு சாப விமோசனம் பெற்றதால், இத்தலம் சந்திர தோஷ பரிகாரத் தலமாகப் போற்றப்படுகிறது. குழந்தைகளுக்கு முதன்முதலாக அன்னம் ஊட்டும் “அன்னப்பிராசனம்” சடங்கு செய்யத் தமிழகத்திலேயே மிகச் சிறந்த தலமாக இது கருதப்படுகிறது. ஆண்டு தோறும் பங்குனி உத்திரத்தன்று காலை உதயத்தில் 6 மணிக்குச் சூரிய ஒளி கருவறையில் உள்ள கைலாசநாதர் சிவலிங்கத் திருமேனி மீது படர்வதால் அன்று சூரிய பூஜையும், மறுநாள் மாலை 6.30 மணிக்குச் சந்திரனின் ஒளி கைலாசநாதர் மீது பொழிவதால் அன்று சந்திர பூஜையும் நடைபெறுவது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும்.

இங்குள்ள நவகிரக சந்நிதியில் சந்திரன் உள்பட அனைத்துக் கிரகங்களும் சூரியனைப் பார்ப்பது போல் அமைக்கப்பட்டுள்ளது.
தேவாரத்தில் நாயன்மார்கள் இந்த ஸ்தலம் பற்றிக் குறிப்பிடுகையில் வைப்பு ஸ்தலம் எனச் சொல்லி உள்ளனர். திருநாவுக்கரசரும், சுந்தரரும் தங்கள் பதிகங்களில் திங்களூர் தலத்தைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளனர். இந்த தலத்தில் திருநாவுக்கரசர் பாடிய பத்து பாடல்கள் "விடம் தீர்த்த திருப்பதிகம்" என்ற பெயரில் அழைக்கப்படுகின்றது.
63 நாயன்மார்களில் ஒருவரான அப்பூதி அடிகள் அவதாரத் தலம் என்ற பெருமையும் திங்களூருக்கு உண்டு. திங்களூரில் பாம்பு தீண்டினால், கடித்தவருக்கு விஷம் ஏறாது என்பது தனிச் சிறப்பு.
திருவிழாக்கள்:
இக்கோயிலில் மகாசிவராத்திரி, மார்கழி திருவாதிரை, பங்குனி உத்திரம், திருக்கார்த்திகை ஆகியன முக்கிய விழாக்களாகக் கொண்டாடப்படுகின்றன. இது தவிரச் சோமவாரம், சுக்கிரவாரம், பிரதோஷம், அமாவாசை, பௌர்ணமி போன்ற நாட்களிலும் சிறப்புப் பூஜைகள் நடைபெறுகின்றன.
பிரார்த்தனைகள்:
இத்தலத்தில் உள்ள சந்திர தீர்த்தத்தில் நீராடி, இறைவன் மற்றும் தனி சந்நிதியில் காட்சி தரும் சந்திரனை அபிஷேகம், அர்ச்சனை, நெய் விளக்கு ஏற்றி வழிபட, சந்திரனால் ஏற்படும் தோஷங்கள் நீங்கி நற்பலன்கள் ஏற்படும். மனசஞ்சலம், திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனைப் பிரார்த்திக்கலாம். பிரார்த்தனை நிறைவேறிய பிறகு சிவனுக்கும், அம்பாளுக்கும் வஸ்திரம் அணிவித்தும், கோவில் திருப்பணிக்குப் பொருளுதவி செய்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.
கோயில் திறந்திருக்கும் நேரம்:
இக்கோயில் சனி, ஞாயிறு மற்றும் திங்கள் காலை 6:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரையிலும், மாலை 4:00 மணி முதல் இரவு 9:00 மணி வரையிலும் திறந்திருக்கும். பிற நாட்களில் காலை 7:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை திறந்திருப்பதாகவும், மாலை 4:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை திறந்திருப்பதாகவும் குறிப்பிடப்படுகிறது. இந்த நேரம் மாறுதலுக்கு உட்பட்டது.

எப்படிச் செல்வது:
இக்கோயில் தஞ்சாவூரிலிருந்து சுமார் 33 கி.மீ தொலைவிலும்,கும்பகோணத்தில் இருந்து சுமார் 35 கி.மீ தொலைவிலும், திருவையாற்றிலிருந்து 4 கி.மீ தொலைவில் உள்ள இந்த ஊருக்கு, அருகில் உள்ள ரயில் நிலையம் கும்பகோணம் மற்றும் விமான நிலையம் திருச்சிராப்பள்ளி (60 கி.மீ) ஆகும்.
தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் பேருந்து நிலையங்களிலிருந்து திருவையாறு வழியாக திங்களூருக்கு அடிக்கடி அரசு மற்றும் தனியார் பேருந்து வசதிகள் உள்ளன.

சந்திர தோஷங்கள் நீங்கி, நல்ல வாழ்க்கை அமைய திங்களூர்
சந்திர பகவானின் கோயிலுக்குச் சென்று வழிபடுவோம்..!!

Leave a comment
Upload