
அறத்தோடு வாழ்தலே வாழ்வின் சூட்சுமம். சில சமயம் சமூக முரண்களின் காரணமாக அப்படி வாழ்கிறவர்கள் எல்லாம் ஏமாளிகளோ என்று தோன்றலாம். அந்த வாழ்க்கை மிகுந்த சவாலாக கூட இருக்கலாம். ஆனால், உண்மையில் அதுபற்றி கவலைகொள்ளத்தேவையே இல்லை. லா ஆஃப் நேச்சுரல் பேலன்ஸ் எல்லாவற்றையும் சரியாக சமன்படுத்தி விடுகிறது. அது அதற்கேயான ஒரு வம்ச காலத்தை எடுத்துக்கொண்டு, பதினாறு ஐசுவரியங்களில் ஏதாவது ஒன்றை கூட்டியோ குறைத்தோ எல்லாவற்றையும் சமன் செய்து விடுகிறது. ஒரு வம்சகாலம் ஏழு தலைமுறைகளை உள்ளடக்கியது என்று சொல்லலாம். சராசரி மனிதர்களுக்கு அது புலப்படுவதில்லை. ஆச்சர்யத்தை தரலாம். அவர்கள் சுயநலத்தினாலும், பேராசைகளினாலும் கட்டுண்டு கிடக்கிறார்கள். பேரன்பால் நிறைக்கப்பட்ட மனதினருக்கு உள்ளுணர்வின் வழியாக பிரபஞ்சத்தின் சங்கேத மொழி புரிந்து தான் விடுகிறது.
யின்-யாங் தத்துவம் என்ன சொல்கிறது? இன்பத்தின் வாலில் துன்பமும், துன்பத்தின் வாலில் இன்பமும் இருக்கிறது. இரவு, பகல் போல, தெய்வீகம் சாத்தானியம் போல ஒன்றின் இன்னொரு பக்கமாக இவை இருக்கின்றன. பிடிக்காத வேலைக்கு வந்ததாக நினைத்து துக்கப்பட்டதின் வால் பகுதியில் தான் பிடித்த வேலையின் தொடர்ப்பு துவங்கியது. அங்கே தான் எனது இரண்டு கண்மணிகளில் ஒன்றான இலக்கியம் அறிமுகமாகிறது. எனக்கு என்னை அறிமுகப்படுத்துகிறது. அதை அதே ஸ்பிக் நிறுவனத்தின் குடியிருப்பு வளாகத்திலுள்ள ஜிம்கானா கிளப்பில் இருக்கிற நூலகம் தான் சாத்தியப்படுத்தி தந்திருக்கிறது. அதனால் துன்பம் வரும்போது இன்பம் வரக்காத்திருக்கிறது என்று எண்ணிக்கொள்கிறபோது அதுவே தன்னம்பிக்கையாகி விடுகிறது. இன்பம் வரும்போது அடுத்து ஒரு துன்பம் வரக்காத்திருக்கிறது என்று எண்ணிக்கொள்கிறபோது அந்த இன்பம் தருகிற மிதப்பிலிருந்து விடுபட்டு, மனது விரைவில் தரையில் வந்து கால்பதித்துக் கொள்கிறது.
அந்த தலைமுறையில், குடும்பமும், உறவினர்களுமே எங்கள் வாழ்க்கையை தீர்மானித்தார்கள். அதனால் பிடித்த படிப்பை படிக்கவோ, பிடித்த வேலையை தேர்ந்தெடுக்கவோ, பிடித்த இணையரை நேசித்து உறவாக்கிக்கொள்கிற வாய்ப்புகளோ, பெரும்பாலும் தரப்படவில்லை.
இப்போது காலம் மாறி விட்டது. விக்ரம், வருண் என இரண்டு பிள்ளைகள். இரண்டு பேருக்கும் எனக்கு கிடைக்காத அந்த மூன்று விசயங்களில் தேர்ந்தெடுக்கிற வாய்ப்பினை அவர்கள் வசமே விட்டிருக்கிறேன். அவர்களை அறம் சார்ந்த, நேர்மையான மனிதர்களாக, சொந்தக்காலில் திராணியோடு நிற்கக்கூடியவர்களாக வளர்க்க முடிந்திருப்பதில் மெலிதாய் ஒரு நிறைவு.
அவர்களுக்கு பிடித்த படிப்பை படிப்பதிலாகட்டும், பிடித்த வேலைக்கு செல்வதிலாகட்டும், பிடித்த இணையை தேர்ந்தெடுத்துக் கொள்வதிலாகட்டும் பரிபூரண சுதந்திரம் வழங்கியாகி விட்டது.
வாழ்க்கையானது ஜென்மனநிலை நோக்கி, விடாமல் பயணிக்கிறது. அனுபவத்தில் இருந்து சொல்கிறேன். வாழ்க்கை என்பது தோராயமாக 75 வருடம் என்று வைத்துக்கொண்டால், அதை மூன்று பாகங்களாக பிரிக்கலாம். முதல் குவாட்டரில் மேலே சொன்ன மூன்று முக்கிய முடிவுகளும் தீர்மானித்தாக வேண்டி வரும். அதனால் அந்த முதல் குவாட்டர் நம் வாழ்க்கையில் மிக முக்கியமான காலக்கட்டம். அதில் தான், முழு வாழ்க்கைக்குமான முக்கியமான தீர்மானங்களை எடுக்க வேண்டியிருக்கிறது.
அந்த காலம் தான் எந்தப் பொறுப்புகளையும் சுமக்க வேண்டிய அவசியமில்லாத, கவலையில்லாமல் பாடித்திரியும் வானம்பாடிக் காலம். அந்தக் காலத்தை ஒவ்வொருவரும் அனுபவித்து கொண்டாடத்தான் வேண்டும். அதனால், குதூகலித்திருங்கள். எது செய்தாலும் பிடித்துச் செய்யுங்கள். பிடித்ததை மட்டும் செய்யுங்கள். பிடித்த பாடத்தை வேண்டி விரும்பி கவனம் குவித்து அநாயாசமாக அசத்துங்கள்.
வாழ்வது ஒரு முறை. வாழ்க்கை வாழ்வதற்கே. வாழ்வதற்கு இருத்தல் அவசியம். அதற்கு கொஞ்சம் பணம் தேவை தான். அந்த தேவையை சுயநலமின்றி அளவிட்டு அதில் நிறைவு கொள்கிற போது சாசுவத மகிழ்வின் முதல்படியில் மனதை எடுத்து வைத்து விட்டீர்கள் என்று அர்த்தம்.
எத்தனை பணம் இருந்தாலும் பணத்தை மட்டும் வைத்துக்கொண்டு மகிழ்ச்சியை வாங்க முடியாது. எத்தனை பணம் இருந்தாலும் மூன்று வேலை தான் ஒரு நாளில் சாப்பிட முடியும். ஆறுக்கு ஆறு இடத்தில் தான் உறங்க முடியும். வருடத்திற்கு நான்கு ஐந்து உடைகள் அணிய முடியும். அதனால், சம்பளத்தை பிரதானமாக பார்க்காமல் மனதிற்கு பிடித்த வேலையை தெரிவு செய்யுங்கள். பிடித்துச் செய்வதால் அது வேலை செய்வதாக இல்லாமல், கொண்டாட்டமானதாக மாறிவிடும். அது நிச்சயம் ஒரு கட்டத்தில் உச்சத்திற்கு அழைத்துச் செல்லும். புரிதல் உள்ள ஒத்திசைவான இணையை பழகியோ, காதலித்தோ நிதானமான மனநிலையில் கண்டடையுங்கள்.
இதில் மற்றவர்களின் அபிப்பிராயங்கள் கேட்கலாம். ஆனால், அந்த மூன்று விசயங்களிலும், இறுதி முடிவு எடுக்க வேண்டியது சம்பந்தப்பட்டவர்களான நீங்கள் மட்டுமே தான். அதை யாருக்காவும் விட்டுக்கொடுத்து விடாதீர்கள்.
கலீல் ஜிப்ரான் சொல்கிறார். குழந்தைகள் பெற்றோர்கள் வழியாக வருகிறார்கள். அவர்கள் பெற்றோர்களின் நீட்சி அல்ல. அவர்களிடம் மரபணு நீட்சியில் மூதாதையர், பெற்றோரின் தாக்கம் 25 சதவீதம் வரை இருக்கலாம். பெருவாரியமான சதவீதம் அவர்களும், அவர்களுக்கு அமைகிற சூழ்நிலைகளுமே தீர்மானிக்கின்றன. ஒவ்வொருவரும் தனித்துவமானவர்கள். சமூகம் நம்மிடம் ஒவ்வொரு விசயத்திலும் போட்டி போடு, போட்டி போடு என்று வாய் வலிக்காமல் சொல்லிக்கொண்டே இருக்கும். மற்றவர்களை வீழ்த்தி வெற்றி கொள்ளச் சொல்லித்தரும். பணம் தான் சமூக அந்தஸ்து என்று சுயநலமாக யோசிக்கும்படி விடாமல் சொல்லிக்கொண்டேயிருக்கும். உலகமெங்கும் பெருவணிகவுலகு நிர்பந்திக்கிற கலாச்சாரம் இது. ஒவ்வொரு விசயத்தையும் பகுத்தாய்ந்து சிந்திப்பதே இதனை வெற்றிகரமாக எதிர்கொண்டு, தீர்வை நோக்கி நம்மை நகர்த்தும்.
உண்மை அப்படி இல்லை. இருந்தலுக்கு குறைந்தபட்ச தேவை எவ்வளவோ அந்தளவு பணம் நம்மிடம் இருந்தாலே போதும். பெறுதலில் கிடைப்பது சௌகர்யம். கொடுத்தலில் கிடைப்பது மகிழ்ச்சி. அது அன்பாகவும், ஆறுதலாகவும், தாங்கிக்கொள்கிற தோளாகவும் கூட இருக்கலாம்.
இணையை தீர்மானிக்கிறபோது மரபார்ந்த சமூகம் உருவத்தையே பிரதானப்படுத்தும். பூக்கள் நிறத்தால் மதிப்பிடப்படுகின்றனவா? வாசத்தால் மதிப்பிடப்படுகின்றனவா? உருவம் இரண்டாம் பட்சம் தான். உள்ளம் தான் பிரதானம். பரஸ்பர புரிதல், பரஸ்பர சுதந்திரத்தை மதித்தல், பரஸ்பரம் அவரவர் அந்தரங்கத்தில் தலையிடாமல் நாகரீகமாக நடந்து கொள்ளுதல், பரஸ்பரம் ஒருவரையொருவர் உடமையாக பார்க்காமல் சகவுயிரியாக பார்த்தல், எதிர்பார்ப்பில்லாத விட்டுக்கொடுக்கிற மனநிலை உள்ள இணையரை தேர்ந்தெடுங்கள். சௌகர்யம் தாண்டிய சாசுவத மகிழ்வாய் வாழ்க்கையை மாற்றிக் கொள்ளுங்கள். மனதும் மனதும் ஒத்திசைவாகிற இணையைத் தெரிவு செய்கிறபோது, வாழ்க்கை உத்வேகம் மிகுந்ததாக மாறி விடுகிறது.

Leave a comment
Upload