
(கட்...கடா..கட்...கட்..கட்...கடா.... )
பத்திரிகையாளர்களுக்கு பங்காளிகளும், பகையாளிகளும் உண்டு. ஆனால் எந்தப் பகையும் நெடுநாட்கள் நீடிக்காது. பத்திரிகையாளர்களுக்கு வருவாய் துறையினரிடமும், காவல்துறையினரிடமும் மோதல்கள் வருவது உண்டு. ஆனால் சில நாட்களுக்குப் பிறகு சமரசம் வந்துவிடும்.
அவன் சண்டை போடாத ஒரு துறை இருந்தது என்றால் அது தபால்தந்தி துறை மட்டுமே. அவர்கள் எப்போதும் நட்புணர்வுடனே பழகி வந்தார்கள். அவன் கொடுக்கும் செய்தித் தந்தியை உடனுக்குடன் அனுப்பிவிடுவார்கள். அப்படியும் விழுப்புரத்தில் இருந்த தந்தி ஊழியர்களிடம் அவனுக்கு ஒரு முறை மனக்கசப்பு வந்தது. அதாவது அவன் நெய்வேலியில் கொடுக்கும் செய்தித்தந்தி, விழுப்புரம் அனுப்பப்படும். விழுப்புரத்தில் இருந்து தந்தி சென்னைக்குச் செல்லும். நேரடியாக நெய்வேலியில் இருந்து சென்னைக்கு தந்தி வசதி கிடையாது. இப்போது தந்தித் துறையே இல்லை என்பது வேறு விஷயம்.
அந்தக் காலத்தில் 1978 முதல் 1983 வரை அவனது தந்திகள் நெய்வேலியில் இருந்து விழுப்புரம் வழியாகச் சென்று கொண்டிருந்தன. விழுப்புரத்தில் போட்டிப் பத்திரிகையின் பகுதிநேர நிருபர் ஒருவர் இருந்தார். அவர் ஒரு சர்க்கரை ஆலையின் முழு நேர ஊழியர். பத்திரிக்கையின் பகுதிநேர ஊழியர். பணி முடிந்ததும் வீட்டிற்குச் செல்வதற்கு முன்னதாக விழுப்புரம் தந்தி அலுவலகத்திற்கு வந்துவிடுவார். தந்தி அலுவலகத்தில் இருந்த ஊழியர்களிடம், ‘சென்னைக்கு ஏதாவது தந்தி சென்றதா?’ என்று கேட்டு தெரிந்து கொள்வார். விழுப்புரம் வழியாகச் சென்னை செல்லும் எல்லா செய்தித் தந்திகளும் அவன் கொடுப்பவை தான். விழுப்புரத்தில் இருந்த அந்த போட்டிப் பத்திரிகை நிருபர், செய்தியின் சாரத்தைத் தெரிந்து கொண்டு, தன் வார்த்தைகளில் எழுதி, தான் பணி செய்து வந்த தமிழ், ஆங்கிலப் பத்திரிகைகளுக்கு அனுப்பிவிடுவார். இது நெய்வேலியில் இருந்த அவனுக்கும் தெரியும். அது ‘செய்தி திருட்டு’ என்று தெரிந்தாலும் அவன் அதைக் கண்டுகொள்ளாமல் இருந்தான். ஆனால் ஒருமுறை அவன் நெய்வேலியில் இருந்து சென்னை ஹிண்டு பத்திரிகைக்கு அனுப்பிய செய்தி வார்த்தை பிசகாமல் அப்படியே மறுநாள் இண்டியன் எக்ஸ்பிரசில் வெளிவந்தது. அவன் அதிர்ந்து போனான்.
நல்லவேளையாக, இடமின்மை காரணமாகவோ, வேறு ஏதோ காரணமாகவோ ஹிண்டுவில் அந்தச் செய்தி வரவில்லை. அப்படி வெளிவந்திருந்தால் ஹிண்டு பத்திரிகையின் ஆசிரியர், ‘போட்டிப் பத்திரிகையில் உன் செய்தியை அப்படியே கொடுத்தாயா?’ என்று கேட்டிருக்கக்கூடும். நல்லவேளையாக அப்படி நடக்கவில்லை. எனினும் தன் நிலையை ஸ்திரப்படுத்திக் கொள்வதற்காக அவன் மறுநாள் செய்தி ஆசிரியரைத் தொடர்பு கொண்டு இந்த விழுப்புரத்தின் செய்தி தந்தி அலுவலகத்தில் திருடு போனது பற்றி தெரிவித்தான். செய்தி ஆசிரியர் உடனே மாவட்டத்தின் தந்தித்துறை மேலாளரிடம் இதுபற்றி புகார் செய்யச் சொன்னார்.
அவன் அதன்படியே கடலூரில் உள்ள தலைமைத் தந்தி அதிகாரி ராமச்சந்திரனிடம் விஷயத்தைச் சொல்லி, ‘ஏன் உங்கள் ஊழியர்கள் என் செய்தி தந்தியை போட்டி பத்திரிகைக்கு கொடுத்திருக்கிறார்கள். இது நியாயமா? விழுப்புரம் தந்தி ஊழியர் மீது நடவடிக்கை எடுங்கள்’’ என்றான். அவர், அவனை கொஞ்சம் சமாதானப்படுத்தியபடியே சொன்னார், ‘நான் வாய்மொழி மூலம் கண்டிக்கிறேன். எழுத்து வடிவில் புகார் வேண்டாம். இனி அப்படி நடக்காது என்று உறுதி கூறுகிறேன்’ என்றார். அதன் பிறகு அவன் அனுப்பிய செய்திகள் வார்த்தைக்கு வார்த்தை திருடு போகவில்லை. எனினும் எப்போதாவது முக்கிய செய்திகள் கசிந்ததுண்டு.
அதையொட்டி அவன் விழுப்புரம் நிருபரிடம் ’ஏன் அப்படிச் செய்தாய்? என்னிடம் கேட்டிருந்தால் நானே தகவல் தந்திருப்பேனே’ என்றான். சில நாட்கள் இருவரும் பேசிக் கொள்ளவில்லை. ஆனாலும் பிறகு எப்படியோ சமரசம் ஏற்பட்டுவிட்டது.
அடுத்த ஒரு சம்பவத்திலும் விழுப்புரம் தந்தி ஊழியர்கள் அவனிடம் அகப்பட்டுக் கொண்டார்கள். அது ஒரு வினோதமான சம்பவம். அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தன் பொன்விழாவை 1978இல் கொண்டாடியது. விழாவின் சிறப்பு விருந்தினர் அப்போதைய ஜனாதிபதி நீலம் சஞ்சீவ ரெட்டி. அவர் வருவதற்கு ஏழு நாட்களுக்கு முன்னதாகவே அண்ணாமலை நகர் தபால் அலுவலகத்திற்கு அடுத்த கட்டிடத்தில், ‘ஜனாதிபதி தந்தி அலுவலகம்’ என்ற பெயரில் ஒரு தற்காலிக தந்தி அலுவலகம் தொடங்கப்பட்டது. மூன்று நாட்கள் அது வேலை செய்திருக்க வேண்டும். ஆனாலும் ஒரு நாளும் அது வேலை செய்யவில்லை. காரணம் அப்போது தந்தி தொலைபேசி துறையின் ஜுனியர் இன்ஜினியர்கள் ஸ்டிரைக் செய்தார்கள். அதனால் மாநிலமெங்கும் தந்தி தொலை தொடர்பு துறையினர் வேலை செய்யவில்லை.
பல்கலைக்கழக பொன்விழாவிற்கு சென்னையில் இருந்து வந்த நிருபர்கள் சென்னை திரும்பி சென்று செய்தியைக் கொடுத்தார்கள். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஜனாதிபதி தந்தி அலுவலகத்தை யாரும் பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை. அவன் அப்போது நெய்வேலியில் இருந்தபடியால், சிதம்பரத்தில் இருந்து விரைவாக நெய்வேலிக்குத் திரும்பி, என்.எல்.சி. நிறுவனத்தின் டெலிபிரிண்டர் மூலமாக செய்தியைக் கொடுத்துவிட்டான். அவனது செய்தி தாமதமில்லாமல் சென்றது.
மறுநாள் அது ஹிண்டுவில் வெளியானது. இருந்தாலும் அவன் அத்துடன் திருப்தி அடையாமல் அன்றே அண்ணாமலை நகருக்குச் சென்றான், கையில் ஒரு செய்தி தந்தியுடன். விழுப்புரத்தில் இருந்த தற்காலிக தந்தி நிலைய ஊழியர்கள் தந்தி சாதனங்களை எல்லாம் மூட்டை கட்டிக் கொண்டிருந்தார்கள், விழுப்புரம் எடுத்துச் செல்ல. அவன் அப்படியே தன் கைவசம் இருந்த செய்தி தந்தியை கொடுத்து, ‘இதை சென்னைக்கு உடனே அனுப்ப வேண்டுமே’ என்றான். அவர்கள் சொன்னார்கள், ‘ஐயா ஸ்டிரைக் முடிந்துவிட்டது. விழுப்புரம் சென்று நாங்கள் இன்றே உங்கள் செய்தியை அனுப்பிவிடுவோம்’ என்றார்கள். அவன் அவர்களிடம் சொன்னான், ‘எதற்கும் ஒருமுறை இந்த தந்தியை படித்துப் பாருங்களேன்’.
தந்தியின் வாசகத்தைப் படித்ததும் அவர்கள் அதிர்ந்து போனார்கள். காரணம், ‘ஜனாதிபதியின் வருகையையொட்டி அண்ணாமலை நகரில் மூன்று நாட்களுக்காக தொடங்கப்பட்ட தந்தி அலுவலகம் ஒரு நாளும் வேலை செய்யவில்லை. ஒரு தந்தியும் யாரும் அனுப்ப முடியவில்லை’ என்று இருந்தது.
அந்த விழுப்புரம் தந்தி ஊழியர்களான மணிவண்ணனும், தியாகராஜனும் அவனது நண்பர்கள்தான். இருந்தாலும் கேட்டார்கள், ‘சார் எங்கள் விரல்களால் எங்கள் கண்களை குத்திவிட்டீர்களே? எங்களை குறை காணும் செய்தியை எழுதி, அதை எங்கள் மூலமாக அனுப்பச் செய்கிறீர்களே?’ அப்போது அவன் சொன்னான், ‘உங்களைப் பற்றிய குறை சொல்லும் செய்தி என்பதால் இப்போது நீங்கள் அனுப்பாமல் இருந்துவிட்டால் இந்தக் காரணத்திற்காக செய்தியை தந்தி ஊழியர்கள் அனுப்பவில்லை என்று உங்களைப் பற்றி அடுத்த செய்தி அனுப்புவேன்’ என்றான்.
இதைக்கேட்ட விழுப்புரம் தந்தி அலுவலர், ‘சார் நாங்கள் தந்தியை எப்படியாவது விழுப்புரம் சென்று அனுப்பிவிடுவோம். எங்களை குறைகாணும் இந்த செய்தி நாளை உங்கள் பத்திரிகையில் வெளியாகும். இல்லாவிட்டால் நீங்கள் என்ன செய்வீர்கள் என்பதும் எங்களுக்குத் தெரியும். அதன் விளைவு இதைவிட மோசமாக இருக்கும் என்பதால் நாங்கள் எப்படியாவது அனுப்பி விடுவோம்’ என்றார்கள்.
அப்படியே அந்த செய்தி மறுநாள் ஹிண்டுவில் வெளியானது. தேசத்தில் வேறு எந்த தந்தித் துறையினரும் இப்படி ஒரு வினோதமான சம்பவத்தைச் சந்தித்திருக்க மாட்டார்கள்.

Leave a comment
Upload