தொடர்கள்
தமிழ்
அமிழ்தமிழ்து தமிழமிழ்து 9 : “துங்கா” – மோகன் ஜி

20260120175337726.jpg

“யாரப்பா நீங்களெல்லோரும்?” கணக்கப்பிள்ளையின் வினவலுக்கு பதில் கூற முன்னகர்ந்தான் இருளன்.

வந்தவர்கள் பத்து பேர். இருளனுக்குப் பின்னால் சுடர்விளக்காய் நின்றிருந்தாள் துங்கா. யொவனம் பூரிக்கும் பதினாறு வயது பைங்கிளி. அவள் இருளன் மகள்.

“கணக்கையா! நாங்க கழைக் கூத்தாடிங்க சாமி! உங்க புழல் கோட்டம் பார்த்திராத வித்தையெல்லாம் செய்து காட்ட வந்திருக்கோமுங்க. வள்ளலய்யாவை ஒரு முறை பார்த்து விட்டால் எங்களுக்கு விமோசனம் கிட்டும் சாமி!”

“ஐயாவை இந்நேரம்.....” என்று மறுப்பை கணக்கர் விடுக்குமுன், தந்த வேலைப்பாடு செய்யப்பெற்ற பெரும் கதவு திறந்தது.

வெளியே வந்தவரோ வள்ளலே தான். ‘அயன்றை சடையநாதர்’ எனும் அவர்பெயரை யாரும் வாய்விட்டு உரைத்ததில்லை. கர்ண மகா பிரபு கலியுகத்தில் அவதரித்தது போல் அள்ளி வழங்கும் கொடைவள்ளல். புலவரும் கலைஞரும் தொண்டை நாட்டுக்கு தொடர்ந்து வந்து வள்ளலின் ஆதரவு பெற்றார்கள்.

“யாரப்பா இவர்கள்?”

நிலம்பட வணங்கி எழுந்தனர் அனைவரும். இருளனே தொடர்ந்தான்.

“ஐயா! நாங்கள் கழைக்கூத்தாடிகள்.. இந்தக் கலையின் அருகி வரும் சில கரணங்களை என் மகள் துங்கா மிக அநாசயமாய் செய்வாள் பிரபு! உங்கள் சன்னிதானத்தில் ஒரு முறை எங்கள் திறம் காட்ட கருணை செய்யுங்கள் பிரபு !”

அப்போதே துங்காவைக் கண்ணுற்றார்.

'இந்த சிறுபெண்ணா?'

“உம்ம்... அப்படி என்ன வித்தைதான் தெரியும் இவளுக்கு?” இது வள்ளலின் வினவல்.

“கழைக்கூத்தில் மிகக் கடினமான ‘விச்சுளிப் பாய்ச்சல்’ எனும் வித்தையை இவளுக்கு கற்பித்திருக்கிறேன். சிறு பிராயத்திலேயே சூட்டிகையாய்க் கற்றுக் கொண்டாள் ஐயா!” ஒரு கலைஞனின் கம்பீரமும்,ஒரு தகப்பனின் பெருமிதமும் இருளனின் குரலில் ஒலித்தது.

“விச்சுளிப் பாய்ச்சலா? அது என்னய்யா பெரிய வித்தை?” வள்ளலின் குரலில் ஆர்வம் மேலிட்டது.

“பிரபு! விச்சுளிப் பாய்ச்சல் மிகவும் நுண்ணிய ,ஆபத்து நிறைந்த வித்தை. ஒரு நெடிய மூங்கிலின் உச்சிக்கு இவள் ஏறி அந்தரத்தில் நிற்பாள். அங்கிருந்தபடி தன் காதணியைக் கழட்டி நிலத்தில் எறிவாள்.”

“அப்புறம்?”

“எறியப்பட்டக் காதணி நிலத்தில் விழுமுன்னர் மின்னலாய்க் கீழே பாய்ந்து, அதைக் கைக்கொண்டு ஒரு நொடிக்குள் மீண்டும் மூங்கிலின் உச்சிக்கு பழையபடி சென்று விடுவாள்.

“அதெப்படி சாத்தியம்?“

“உச்சியில் ஏறியபின் ஒரு யோகப் பிரயோகத்தினால் மூச்சை அடக்கி தன் உடலை ஒரு இறகைப் போல் லேசாக்கிக் கொள்வாள்.”

“ஆச்சரியம்...கொஞ்சம் ஆபத்தான வித்தை தான்!”

“ஆபத்து கொஞ்சமல்ல ஐயா! உயிரையே பறித்து விடக் கூடியது.

ஒரு முறை செய்வதற்கு ஆறு மாத காலம் மூச்சடக்கும் யோகப் பயிற்சியை கடுமையாய்ச் செய்ய வேண்டும். ஒரு முறை இப்பாய்ச்சலை செய்து விட்டால், மீண்டும் இந்த வித்தையை ஆறுமாதத்திற்குப் பிறகு தான் செய்ய வேண்டும். அதுவன்றி உடனேயே செய்யத் துணிந்தால் மரணம் அந்தக் கணமே...”

“போதும்.. இந்த விச்சுளிப் பாய்ச்சலுக்காக மட்டுமே இவளைத் தயார் செய்து அவளை வேறொன்றுக்கும் லாயக்கில்லாமல் அடித்து விட்டாயோ?”

“இல்லைப் பிரபு.. அவள் வயதுப் பெண்கள் கற்க முடிந்தவை அத்தனையும் கூடவே கற்று வந்திருக்கிறாள். அது மட்டுமல்ல பிரபு! பாக்கள் புனைவதிலும் முறையாக தமிழாசான்களிடம் பாடம் கேட்டிருக்கிறாள்”.

“பாப்புனையவும் வருமோ.? அதைச்சொல்லு.. அதைச்சொல்லு...

நீங்களனைவரும் இன்று முதல் எம் விருந்தினர்.. விடுதியில் தங்கிக் கொள்ளுங்கள். நாளை முதல் காலை வேளையில் கொஞ்ச நேரம் தூங்காவின் தமிழைக் கேட்போம்..”

“பிரபு! விச்சுளிப் பாய்ச்சல் எப்போது வைத்துக் கொள்ளலாம்?”

“சொல்கிறேன்... கொஞ்சம் போகட்டும்.”

அடுத்த ஒரு வாரகாலம் துங்காவின் செய்யுளியற்றும் வேகத்திலும், செறிவான கருத்துக்களிலும் வள்ளல் தன்னை மறந்தார். துங்காவின் மேல் அவருக்கு அபிமானமும், வாஞ்சையும் தோன்றி மகளாகவே நடத்தலுற்றார். அடுத்த வெள்ளிக் கிழமை துங்கா விச்சுளிப் பாய்ச்சல் வித்தை நிகழ்த்த முடிவாயிற்று. பறையறிவித்து ஊரெல்லாம் கூடியது.

இருளன் கணீர்க் குரலில் பாய்ச்சல் நிகழும் விதம் குறித்து அறிவித்தான். கண்ணிமைக்கும் நேரத்தில் கீழே பாய்ந்து ,ஒரு நொடியில் காதணியைக் கைக்கொண்டு மீண்டும் மூங்கிலின் உச்சிக்கு துங்கா சென்று விடுவாள் ஆதலின் தக்கையில் வைத்த கண் போல் பாய்ச்சலைக் காணுமாறு வேண்டினான்.

கரகரவென துங்கா மூங்கிலின் உச்சிக்கு சென்று விட்டாள்.

வள்ளல் மூச்சைப் பிடித்துக் கொண்டார். இந்திர ஜாலம்...

காதணியை எறிந்ததென்ன? பாய்ந்த வேகமென்ன? அது தரையைத் தொடுமுன்னர் கைக்கொண்டதென்ன? மீண்டும் மூங்கில்முனை சேர்ந்ததென்ன??

ஜனங்கள் கையொலி எழுப்ப மறந்து வாய்ப் பிளந்து நின்றார்கள்.

சடையநாத வள்ளல் மனம் மகிழ்ந்து பலப்பல பரிசுகள் நல்கிக் கொண்டாடினார். இருளன் கூட்டம் விடைப் பெற்றபோது வள்ளல் நெகிழ்ந்து போனார். “துங்கா! கவனமாய் இரு தாயே! கவிபுனையும் ஆற்றலை பெருக்கிக் கொள். கூடிய விரைவில் இங்கு மீண்டும் வா! வரும் போது கவிதையோலைகள் ஒரு வண்டி கூட வர வேண்டும் புரிந்ததா?”

துங்கா கண்ணீரோடு விடை பெற்றாள். வள்ளலின் அன்பும் தமிழ் போற்றும் அருங்குணமும் அவளுடைய உள்ளமெல்லாம் நிறைந்து நின்றது.

அடுத்து இருளன் கூட்டம் பாண்டிய நாடு சென்றது. மதுரையில் வழுதிப் பாண்டியனிடம் விச்சுளிப் பாய்ச்சல் நிகழ்த்தி பரிசில் பெறல் இருளனின் நீண்ட நாள் கனவன்றோ.?

மதுரை வந்த பின் மன்னன் முன்னர் விச்சுளிப் பாய்ச்சல் நிகழ்ச்சியும் முடிவானது.

எள்போட்டால் எள்விழாத கூட்டம். மன்னன் பரிவாரங்களுடனும், குறிப்பாக, தன் புதிய ஆசைக்கிழத்தியுடனும் வந்தமர்ந்தான்.

வழுதிக்கு கட்டியம் கூறி முடித்தவுடன் இருளன் விச்சுளிப் பாய்ச்சல் நிகழும் விதம் பற்றி சொல்லி, கண்ணிமைக்காமல் காண வேண்டினான்.

மூங்கிலேறிய துங்கா பாய்ச்சலை வெற்றிகரமாய் முடித்தும் விட்டாள். அவள் பாயத்தொடங்குமுன் தானா வழுதியின்

ஆசைநாயகி அவனை அவள்பால் திருப்ப வேண்டும்?!

பாய்ச்சலில் ஆனந்தித்து மக்கள் எழுப்பிய ஆரவாரம் வழுதியை திடுக்குறச் செய்தது.

‘என்ன? நான் பார்க்கு முன்னரே பாய்ச்சல் நிகழ்ந்து விட்டதா?’

மீண்டும் விச்சுளிப் பாய்ச்சல் நிகழ்த்த துங்காவுக்கு ஆணையிட்டான்.

மறுபடியும் ஆறுமாதம் கழித்தே நிகழ்த்தமுடியும் இல்லையெனில் தான் மாள்வது உறுதியென்ற துங்காவின் இரைஞ்சல்களுக்கு அந்தக் கல்நெஞ்சன் செவி சாய்க்கவில்லை.

“இது என் ஆணை! செய்.” என்று உருமினான் வழுதி.

வேறு வழியில்லை. செய் அல்லது செத்து மடி என்பது மன்னன் உறுதி. செய்தாலோ செத்து மடிவதும் உறுதியன்றோ.

துங்கா சுற்றுமுற்றும் பார்த்தாள். இருளனும் கூட்டமும் அரற்றிக் கொண்டிருந்தார்கள். ஜனங்களோ திகிலோடு நின்றார்கள். வான் நோக்கி பிரார்த்தித்தாள். மரணத்தின் மடியில் சாய்ந்து விட்ட அந்தத் தருணத்தில் கூட, தன் மீது அன்பு பொழிந்த சடைய நாத வள்ளலை நினைவு கூர்ந்தாள். அவள் பாப்புனையும் திறன் மீது அவர் கொண்ட மதிப்பை எண்ணினாள். வானத்தில் அப்போது ஒரு நாரைக் கூட்டம் பறந்து கொண்டு இருந்தது. புள் வீடு தூதாய் அக்கணமே செய்யுள் புனைந்து உரத்துக் கூவினாள்.

மாகுன் றனையபொற் தோளான் வழுதிமன்

வான்க ரும்பின்

பாகொன்று சொல்லியைப் பார்த்தெனைப்

பார்த்திலன் பையப்பையப்

போகின்ற புள்ளினங் காள் புழற் கோட்டம்

புகுவ துண்டேல்

சாகின்றனள் என்று சொல்லீர் அயன்றைச்

சடையனுக்கே

விண்தொடு கழைமீ மிசையோர் விச்சுளிப்பாயும் வித்தை

கண்கொடு காணான் வேற்றுக் கணிகைபால் கருத்தைப் போக்கி

எண்கெட இருகால் ஈண்டே இயற்றுமோர் ஏவல் ஏற்றே

பெண்விடும் ஆவி அன்னோன் பெருங்கழல் வாழ்த்திற் றென்னீர்

கூட்டம் திகைத்தது.

மூங்கிலேறினாள். மூச்சை அடக்கினாள். காதணியை எறிந்தாள். சரிந்தாள். சடலமாய் வீழ்ந்தாள். திரும்பிப் போன வழுதியின் செவிகளில் மக்கள் இட்ட சாபம் விழுந்திருக்காது தான்.

விச்சுளிப் பாய்ச்சல் பெண் குறித்து ஒரு கழைக்கூத்தைத் தாண்டி செல்லும் போது என் தமிழையா சொன்னதுவும், அப்பாடல்கள் தேடிப் படித்த தருணம் கண் கசிந்ததுவும் நெஞ்சில் நீங்கா நினைவுகள்.

சாகும் அந்தக் கணத்திலும் ஒரு வள்ளல் பெருமை சொல்கிறாள் எனில், அவன் எத்துணை உயர்ந்தோனாய் இருக்கவேண்டுமெனக் கருதி, பாண்டியன் தன் புலவர்களை வள்ளல் சடையனை சந்தித்து வரப் பணிக்கிறான். அவர்கள் மீண்டு, சடையன் பெருமை சொல்லும் தனிப் பாடலும் மூன்றுண்டு. பிறிதொரு சமயம் அவற்றைப் பார்ப்போம்.