தொடர்கள்
அனுபவம்
இறப்பிலும் பிரியா உறவு . -மரியா சிவானந்தம் 

20260407145658912.jpg

அன்னையர் தினம் இந்த ஞாயிறன்று கொண்டாடப்படுகிறது .

உலகில் பிறந்த ஒவ்வொரு உயிரும் உன்னதமாக, உயர்த்திக் கொண்டாடும் உறவு தாய் .

எல்லோருக்கும் வாரி வழங்கிய பின்னும் ,இன்னும் கொஞ்சம் அன்பை, கருணையை மீதம் வைத்துக் காத்திருக்கும் உன்னத உணர்வு தாய்மை.

தாய் மனம் கொண்ட தந்தையரையும் நாம் தாயுமானவன் என்றே அழைக்கிறோம்.

அத்தகைய தாய்மைக்கு இலக்கணம் வகுக்கும் ஒரு தாயின் புகைப்படம் சமீபத்தில் வலைத்தளங்களில் வைரலாகியது . தண்ணீரில் மிதக்கும் அத்தாயின் பிடியில் அவளது மகன். இறக்கும் தருவாயிலும் தன் மகனைப் பிடித்த பிடியை விடாமல் மரணத்தைத் தழுவிய அப்பெண்ணின் படத்தைப் பார்ப்போர் மனம் உருகியது. ஒரு தாய் என்பவள் எத்தகையயவள் என்பதை உயிர் ஓவியமாக்கி காட்டுகிறது அப்படம்.

20260407145737856.jpg

அந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் மத்திய பிரதேசத்தில் ,ஜபல்பூர் மாவட்டத்தில் ஏப்ரல் 30 ஆம் தேதி நடந்தது .நர்மதை நதியின் குறுக்கே கட்டப்பட்ட பார்கி அணையில் உள்ள சுற்றுலா தளத்தில் இந்த விபத்து நடந்தது.

அன்று 29 பயணிகள் மற்றும் இரண்டு படகு ஊழியர்களுடன் அப்படகு நர்மதை ஆற்றில் படகுப்பயணத்தை மேற் கொண்டது. ஆற்றின் மையப்பகுதிக்குச் சென்ற போது பலத்த காற்று வீச , சூறாவளியில் படகு சிக்கிக் கொண்டது . படகு அலைக்கழிக்கப்பட ,பயணிகள் அலறினார்கள். வெகு தாமதமாகவே சூழ்நிலை உணர்ந்த படகு ஊழியர்கள் அங்குள்ள லைஃப் ஜாக்கெட்டுகளைக் கொடுக்க , சிலர் அணிந்துக் கொண்டு உயிர் தப்பினர்.

பலரும் மூழ்கினார்கள் . காணாமல் போனவர்களைத் தேடி கண்டுபிடித்ததில் 13 பேர் உயிர் இழந்துள்ளனர். சிலர் உயிர் தப்பி உள்ளனர்."மரணத்தைக் கண் எதிரே கண்டோம் ' என்று தப்பி பிழைத்தவர்கள் பயத்துடன் தெரிவிக்கின்றனர்.

விபத்தில் மரணம் அடைந்தவர்களின் தமிழ் நாட்டைச் சேர்ந்த காமராஜ் குடும்பமும் ஒன்று .ஜபல்பூர் ஆயுத தொழிற்சாலையில் பணி புரியும் அவர் குடும்பத்தினரும் , அவர் மனைவி கார்குழலி குடும்பத்தினரும் என்று உறவினர்களுடன் சேர்ந்து படகுச்சவாரி மேற்கொண்டனர் .காமராஜ், கார்குழலியுடன் அவர்கள் உறவினர்கள் மூவரும் இவ்விபத்தில் மரணம் அடைந்துள்ளனர். மேலும் படகில் பயணித்த வடநாட்டவர்களும் உயிர் இழந்துள்ளனர்.

20260407145821428.jpg

கோடைக்காலம் துவங்கி விட்டாலே , மக்கள் மலைப் பிரதேசங்களையும் , சுற்றுலா தலங்களையும் நாடி செல்வது வழக்கம். ஆனால் தம் பாதுகாப்பை உறுதி செய்ய மறந்து விடுகிறார்கள். சுற்றுலா தலங்களில் இருப்போரும் , 'பணம் ஒன்றே குறி' என்று இருப்பதைக் கண்கூடாக காணுகிறோம் .

அதிக பயணிகளைப் படகில் ஏற்றுவது, உரிய லைஃப் ஜாக்கெட் அணிவிக்காமல் படகை ஊட்டுவது , இன்சூரன்ஸ் இல்லாமை , பயணிகளை மகிழ்விக்க சாகசங்களை செய்து படகை ஓட்டுவது, ஓட்டுனரின் அலட்சியப்போக்கு என்று பலவிதத்திலும் பாதுகாப்பு குறைபாடுகளை நாம் இவ்வித படகுப் பயணங்களில் காண்கிறோம் .ஜபல்பூரிலும் இதுதான் நடந்துள்ளது. விளைவு 13 உயிர்கள் பலியாகின.

அவ்வப்போது நிகழும் விபத்துகள், நமக்கு எச்சரிக்கை மணியாக ஒலித்துக் கொண்டே இருக்கின்றன. இவற்றில் இருந்து நாம் வாழ்க்கைப்பாடங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும். நம் பாதுகாப்பை முதலில் உறுதி செய்துக் கொள்ள வேண்டும். சாகஸங்களைக் காட்டிலும் உயிர் வாழ்தல் முக்கியமானது .

நர்மதை ஆற்றில் மிதக்கும் அன்னையின் உருவமும், பிள்ளையின் முகமும் நம் நெஞ்சை விட்டு நீங்காது. தாய்ப்பாசத்தின் வீரியத்தை அப்படம் நமக்குக் காட்டினாலும், நம் குழந்தைகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற பயத்தையும் அது காட்டி விடுகிறது ஒரே ஜாக்கெட்டில் தாயும் ,மகனும் படகுப்பயணம் செய்திருப்பதும், பளு தாங்காமல் உயிர் இழந்திருப்பதும் கண்களைக் கலங்க வைக்கிறது.

மரணத்திலும் ,தன் மகனைப் பிடியில் இருந்து விலக்காத ஈடில்லாத தாயன்பு நம்மை உருக வைக்கிறது .