
புதிதான அம்சத்தில் கதை எழுத, இதிகாசம் சம்பந்தப்பட்ட விஷயங்களை ஆழமாக உழுதால் நிறைய மேட்டர் இருக்கும் போல் தோன்றியது. ஆனால் உழுவதற்கு வயசோ, திராணியோ,ஆற்றலோ கிடையாது.
நமது இதிகாசங்கள் மிகப்பெரியவை என்பதால் ஆயிரக்கணக்கான பாத்திரங்களை ஆதி, அந்தம் எல்லாம் தேடிக் கண்டுபிடித்து எடுப்பது என்பது மிக சிரமமான விஷயம் என்று புரிந்தது.
நான்,ஹை ஸ்கூல் படிக்கும்போது ராஜாஜி அவர்களின் சக்கரவர்த்தித் திருமகன்( ராமாயணம்) வியாசர் விருந்து ( மகாபாரதம்)போன்ற கதைகளை பொழுது போகாத போதெல்லாம் படித்தது இப்போது உபயோகமாக இருக்கிறது
மகாபாரதம்,பாகவதத்தில் ராதையின் கதையில், அவள் மின்னல் போல், கொஞ்ச நேரம் ஜொலிக்கிறாள். . ஒரு கட்டத்தில் காணாமல் போய்விடுகிறாள்.( நம் போன்ற சாதாரண வாசகர்களுக்கு)
ராதை என்ன ஆனாள் ? கேள்விக்கு ஈசியாக விடை கண்டுபிடிக்க முடியவில்லை?
சில AI களைக் கேட்டதில் சில விஷயங்கள் தெரிந்தன.
அதற்கு முன்னால் இப்போ கொஞ்சம் AI களின் குணாதிசயம் பற்றிப் பார்ப்போம்.
சாட் ஜி பி டி,ஜெமினி போன்ற பிராபல்யம் அடைந்த AI களை உபயோகிப்பது ஒரு விதத்தில் நல்லது.
மாற்றி மாற்றி ஒவ்வொரு AI யிடமும் விஷயம் சரிதானா என்றுகேட்டு, பின் இன்டர்நெட்டிடமும் செக் பண்ணி தெரிந்து கொள்ள முடிந்தது.
.
AIக்களிடம் ரொம்ப ஜாக்கிரதையாக இருக்க வேண்டியுள்ளது.
நம்ம பிரபலமான கம்பெனிகளின் சேல்ஸ் இன்ஜினியர்ஸ் போல எந்த கேள்வி கேட்டாலும் தங்கு தடை இல்லாமல் உடனே பதில் சொல்லும்.
சொல்லும் விதத்தில்..அது எழுதும் விதத்தில் செம்ம கான்ஃபிடன்ஸ் இருக்கும்.
சில சமயம் இந்த கான்ஃபிடென்சில் தான் சுத்தமாக ஏமாந்து விடுவோம்.
உதாரணமாக சினிமா பாடல்கள்.
இந்த AI க்களிடம் ஏற்கனவே நமக்கு நன்கு தெரிந்த ராகம் கொண்ட சினிமா பாடல்களை சொல்லி 'அது என்ன ராகம்' என்று கேட்டு பாருங்களேன்.
உடனே பந்தாவாக பதில் சொல்லிவிடும். இந்த பாட்டு இந்த ராகம் என்ற கதியில். கூடவே அந்த பாட்டு எந்த படம், யார் பாடினது மியூசிக் டைரக்டர் யாரு, பாட்டு எழுதி யது யாரு, எந்த வருஷம் போன்ற பூர்வோத்தரத்தையும் சொல்லிவிடும்.
போறாத குறைக்கு,அந்த ராகத்தின் ஆரோகணம், அவரோகணம் என்ன, அதனுடைய ஜென்ய ராகம் என்ன, என்று ஒரு வித்வான் லெவலில் பேச ஆரம்பித்துவிடும்.
உங்களுக்கு ராகம் தெரிந்த பாட்டாக இருக்கையில்,.. "அந்தப் பாட்டு இந்த ராகம் தானே! நீ வேற ராகம் சொல்கிறாயே!" என்று நீங்கள் கேட்டால்....
"ஆமாம் ஆமாம், நீங்கள் சொல்வது முற்றிலும் சரி.நீங்கள் சொல்லும் ராகம் தான் அது "
நான் கூறிய ராகம்இல்லை. என்று உடனே ஒத்துக் கொண்டு விடும்.
இந்த ராகத்தின் ஆரோகணம் இதுதான். அவரோகணம் இதுதான் என்று மாற்றிக் கூறிப் பின்னி எடுத்து விடும்.
நாம்,'பின்னர் நீ ஏன் தப்பான ராகத்தை சொன்னாய் ' என்றால், கொஞ்சம் சப்பை கட்டு கட்டப் பார்க்கும்.
நாம் பிடிவாதமாக இருந்தால் சரண்டர் ஆகி ஒத்துக்கொண்டு விடும். சில சமயங்கள் உங்கள் மாதிரி நேயர்கள் கொடுக்கும் டிப்ஸ்ஐ வைத்துக் கொண்டுதான் நாங்களே ராகம் கண்டுபிடிக்கிறோம் என்று சொல்லி ஐஸ் வைக்கும்.
இந்த AI என்கிற சமாச்சாரம் ரொம்ப சாமர்த்தியம் ஆனது. அது வாயைத் திறந்தாலே உண்மைதான் என்று நினைத்து விடக்கூடாது. நாம் கொஞ்சம் ஏமாந்தால் என்ன வேணுமானாலும்
சொல்லிட்டு போய்டுவிடும் திறன் கொண்டது. என்பது என்னுடைய அனுபவம்.
"அவசரப்படாம சித்த நிதானமா நல்லா உள்ள போயி படிச்சிட்டு வந்து சொல்றியா?" என்று AI இடம் கேட்கலாம். நிச்சயமாக நாம் சொல்வதை மதித்துச் செய்கிறது.
ஆனால் AI நம்மை எல்லாம் விட பல மடங்கு சிறந்த அறிவாளி.
அதனால்தான் அதனுடைய பதில்களை கொஞ்சம் இரண்டு மூன்று முறை வெவ்வேறு செயலிகளில், சைட்களில் சரி பார்க்க வேண்டும்...
இப்போ திரும்பவும் நாம் ராதை விஷயத்துக்கு வரலாம் , AI சொல்வது கீழே...
"கண்ணனை விட ராதை நாலு வயது பெரியவள்.
கண்ணன் ராதையைப் பிரிந்து கம்சனைக் கொல்லப் போன போது ராதை வயது பதிமூணோ என்னவோ அவ்வளவுதான். கண்ணனுக்கு ஒன்பது வயது.
அதற்குப் பிறகு அவர்களுடைய இளமைக்காலத்தில் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளவில்லை.
ரொம்ப வருஷம் கழித்து ராதை தன் கடைசி காலத்தில் துவாரகைக்கு சென்று,மரணிக்கும் தருணத்தில் தான் கண்ணனை பார்த்தாள். தன் மரணத்துக்கு முன்பு கண்ணனை குழல் கொண்டு ஒரு பாட்டு இசைக்கச் சொன்னாள்..
கண்ணன் பாட்டு இசைத்து முடித்தவுடன் ராதை இறக்கவும், கண்ணன் தன் புல்லாங்குழலை ஒடித்து யமுனை நதியில் போட்டான். "
என்று புராணங்கள் கூறுவதாக AI சொல்கிறது.
இதற்கெல்லாம் ப்ரூஃப் கேட்டால் இருக்கிறது என்கிறது AI.
சில வட இந்தியப் புராணங்களில் கண்ணன் ராதையைப் பிரிந்த பின்பு ராதை கோகுலத்தில் ஒருத்தனை திருமணம் செய்து கொண்டதாகவும், அவர்களுக்கு ஒரு மகன் பிறந்து அவனேபெரிய ஆளான பின் தான் ராதை திரும்பவும் கண்ணனை பார்க்க துவாரகை சென்று இருக்கிறாள் என்றும் கூறப்படுகிறது....
என்கிறது ஒரு AI.. ஒரு பண்டிதர் போல்!!
மகாபாரதத்தில் இருந்து சத்ருஜித் என்ற கற்பனை யானையின் கதையை எழுத நான் முயற்சித்த போது AI க்களின் துணை மிக அவசியமாகப்பட்டது.
குருஷேத்திரம் என்கிற மகாபாரத போர்க்களம், ஹஸ்தினாபுரத்தில் இருந்து எவ்வளவு தூரத்தில் உள்ளது.?
பாண்டவர்கள் அணிக்கு துணை புரிந்த மன்னர்களில் ஹஸ்தினா புரத்துக்கு மிக அருகில் இருந்தவர் யார்.?
மற்றவர்கள் ஊர் எவ்வளவு தொலைவு?
குருசேத்திரம் எவ்வளவு பெரிய பூமி.?
கௌரவர்கள் மற்றும் பாண்டவர்களின் படைகள் விவரம் என்ன.?
18 நாள் போரில் ஒவ்வொரு நாளும் இறப்பு அளவு என்ன?
எவ்வளவு யானைகள்?எவ்வளவு குதிரைகள்? எவ்வளவு மனிதர்கள் இறந்தனர்?
தினமும் யுத்தம் நடக்கும் போது முந்தின நாள் இறந்த ஆயிரக்கணக்கான மனித,மிருக உடல்களை, உடைந்த தேர்களை என்ன செய்வார்கள்? எப்படி அகற்றுவார்கள்?
லட்சக்கணக்கான படை வீரர்கள் (20 லட்சம் பேருக்கு மேல் இருக்கலாம்) ஒரு நாள் போர் முடிவுக்கு பின் பாசறைக்கு சென்று கொஞ்சம் ஓய்வெடுத்து மீண்டும் மறுநாள் காலையில் வந்து சண்டை போட வேண்டும் இல்லையா?.
அப்போ குருஷே த்திரத்துக்கு பக்கத்திலேயே பெரிய கேம்ப் இருக்க வேண்டும். கேம்ப் என்றால் கிட்டதட்ட இரண்டு சேனைகளுக்கும், ஒவ்வொன்றுக்கும், ஒரு சிறு நகரம் அளவு வேண்டும். தினமும் சாப்பாடு உடைகள் ஆயுத மெயின்டனன்ஸ், தானிய கிடங்கு, குதிரைகள் யானைகள் பராமரிப்பு அத்தியாவசிய தேவைக்கு சிறிய கடைகள், மருத்துவ வசதி, போன்ற இன்றியமையாத விஷயங்கள் எல்லாம் அந்த காலத்தில் எப்படி நிறைவேற்றப்பட்டன.?
இந்த 20 லட்சத்துக்கு மேற்பட்ட மேற்பட்ட வீரர்களுக்கு அன்றாட தேவைக்கு தண்ணீர் எங்கிருந்து கொண்டு வர வேண்டும்?
ஒவ்வொரு நாள் போரிலும் யார் யார் கொல்லப்பட்டனர்.? போர் முடியும்போது எவ்வளவு தலைவர்கள் பாக்கி இருந்தார்கள்?
எவ்வளவு வீரர்கள் யானை குதிரைகள் பாக்கி?அவர்கள் எல்லாம் தங்கள் ஊருக்கு திரும்பிப் போனார்களா?.....
இவை எல்லாத்துக்கும் விடை மகாபாரதத்தில் வந்திருக்கிறதா இல்லையா?
போன்ற கேள்விகளுக்கு AI க் களின் பதில் மிக சிறப்பாக உள்ளது.
தேவைப்பட்டால் ஒரிஜினல் பாரதத்தின் சமஸ்கிருத ஸ்லோகத்தின் பர்வம் மற்றும் எண்ணுடன் ரெபரன்ஸ் கொடுக்கிறது.
பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல் ஒரு கேள்விக்கு AI யின்சாம்பிள் பதில் இங்கே கொடுத்துள்ளேன்.
ஒரு கேள்வி : போர்க் காலத்தில் அந்தக் கால யானையின் உணவு என்ன?
AI gemini பதில் : யானைகளுக்கு போர் காலத்தில் தினமும் மிக அதிகமான உணவு தேவைப்படுகிறது. மஹாபாரதம் காலத்தில் யானைகளுக்கான உணவு மிகவும் திட்டமிட்டு வழங்கப்பட்டது.
1. புல் மற்றும் இலைகள்
யானையின் முக்கிய உணவு:
காட்டு புல்
மர இலைகள்
மூங்கில் இலைகள்
பனை மற்றும் வாழை இலைகள்
ஒரு பெரிய யானை ஒரு நாளில் 100–150 கிலோ வரை தாவர உணவு சாப்பிடும்.
2. தானியங்கள் (போர்யானைக்கு சக்தி)
போரில் பயன்படுத்தப்படும் யானைகளுக்குஅரிசி
கேழ்வரகு
கோதுமை
சோளம்
சில நேரம் வேகவைத்த தானியம் கொடுத்தார்கள்.
3. கரும்பு மற்றும் பழங்கள்
சக்திக்காக:
கரும்பு
வாழைப்பழம்
தென்னை / தேங்காய்
பனைப்பழம்
4. வெல்லம் மற்றும் உப்பு
வெல்லம் (jaggery) – சக்திக்காக
உப்பு – உடல் உப்பு சமநிலை
5. தண்ணீர்
யானை தினமும் 100–200 லிட்டர் வரை தண்ணீர் குடிக்கும்.
6. போருக்கு முன்
சில பழைய நூல்கள் கூறுவது:
சிறிது மதுபானம் அல்லது கள்ளு கொடுத்து யானையை அதிக ஆக்ரோஷமாக ஆக்கியதாக குறிப்பிடுகிறது (எப்போதும் இல்லை, சில சமயம்).
✅ சுருக்கமாக
போர்யானை உணவு:
புல் / இலைகள்
தானியங்கள்
கரும்பு / பழங்கள்
வெல்லம்
அதிக தண்ணீர்
நீங்கள் விரும்பினால் இன்னும் ஒரு சுவாரஸ்யமான விஷயம் சொல்லலாம்:
ஒரு மஹாபாரத கால அரசன் 1000 போர்யானைகளை வைத்திருந்தால் தினமும் எவ்வளவு உணவு தேவைப்படும்? கணக்கிட்டு காட்டலாம். அது மிகவும் ஆச்சர்யமான எண்.😊
இப்படி எந்தவிதமான சந்தேகத்துக்கும் AI ரெடியாக பதில் வைத்திருக்கிறது.
இன்று பழக்கத்தில் இருக்கும் AI களில் சேட் ஜி பி டி மற்றும் ஜெமினி போன்றவை ரொம்பவும் உதவுகின்றன. ஆனால் நாம் ஒரே கேள்வியை இரண்டுக்கும் கேட்டு பதில் நிச்சயம் பண்ண வேண்டியது அவசியமாகிறது. சில சமயங்களில் இரண்டும் சம்பந்தம் இல்லாமல் பதில் சொல்லும் போது இன்டர்நெட்டை குடைய வேண்டிய அவசியமும் வரலாம்.
ஜெமினி AI கொஞ்சம் கூட பிகு செய்து கொள்ளாமல் எந்த விதமான படம் நமக்கு (நம்கதைக்கு)
வேண்டுமோ, அதை போட்டு கொடுத்து விடுகிறது.
படத்தின் விளக்கங்களை நாம் ஒழுங்காக சொல்லிவிட்டால் சில வினாடிகளுக்குள் படத்தைக் கொடுத்து விடுகிறது.
இது ஒரு சிறிய அறிமுகம்.தான்.
இன்னம் நிறைய எழுதலாம்......

Leave a comment
Upload